Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலையில் என்னதான் நடக்கிறது? இன்றாவது மனம் திறப்பாரா பதிவாளர்?

 

சேலம் பெரியார் பல்கலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே சுற்றிச்சுழன்றடித்து வரும் ஊழல் புகார்கள் குறித்து பணி நிறைவு பெறும் நாளான இன்றாவது (ஆகஸ்ட் 17, 2018) பதிவாளர் மணிவண்ணன் மனம் திறப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பல்கலை வட்டாரத்தில் ஏகத்துக்கும் பரவிக்கிடக்கிறது.

சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வருபவர் பேராசிரியர் மணிவண்ணன். இவருடைய தாய்ப்பல்கலையான தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் இணை பேராசிரியராகவும், பின்னர் தமிழ்நாடு கல்வியியல் பல்கலையில் தேர்வாணையராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்ற மணிவண்ணன், கடந்த 18.8.2015ம் தேதி பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியில் சேர்ந்தார்.

 

மூன்றாண்டு காலம் ‘டென்யூர்’ முடிந்து இன்றுடன் அவர் பணி நிறைவு பெறுகிறார். பதிவாளர் பதவி என்பது, துணை வேந்தருக்கு அடுத்த நிலையில் நிர்வாக ரீதியில் அதிகாரமிக்கது ஆகும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவது, பல்கலையில் நடைபெறும் புதிய கட்டுமானங்கள் முதல் பராமரிப்பு செலவினங்களை மேற்கொள்வது வரையிலான கோப்புகள் அனைத்தும் பதிவாளர் மேஜைக்கு வராமல் நகர முடியாது.

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பதிவாளர் மணிவண்ணன் மீதான சில சந்தேகங்களையும் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

மணிவண்ணன்

பெரியார் பல்கலையில் சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்தபோது பதிவாளராக அங்கமுத்து பணியாற்றி வந்தார். ஆசிரியர் பணி நியமனங்களில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பான புகார்களில் சுவாமிநாதன் நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தாலும், அங்கமுத்துவை மட்டும் வசமாக சிக்க வைப்பதற்கான நகர்வுகளை சிலர் மேற்கொண்டனர்.

 

எங்கே தான் மட்டும் வாகாக சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த அங்கமுத்து, கடந்த 18.12.2017ம் தேதி பெருந்துறையில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்ததாக சொல்லப்படும் ஏழு பக்கங்கள் கொண்ட தற்கொலை குறிப்பு கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணமாக 7 பேரின் பெயர்களை பதிவு செய்துள்ளார்.

 

பெரியார் பல்கலையில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் முதல் காரணம் அப்போதைய துணை வேந்தர் சுவாமிநாதன் என்றும், அதற்கு ‘மூளை’யாகச் செயல்பட்டவர் 58 வயதுக்குப் பிறகும் ‘டீன்’ ஆக பணியாற்றி வரும் மூத்த பேராசிரியர் கிருஷ்ணகுமார்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடுத்ததாக, அதாவது மூன்றாவது நபராக இன்று ஓய்வு பெற உள்ள பதிவாளர் மணிவண்ணன் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கமுத்து

இத்தனைக்கும், பெரியார் பல்கலையில் பதிவாளர் பதவியிடம் காலியாகப் போகிறது. அந்தப் பணியிடத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு மணிவண்ணனுக்கு யோசனை கொடுத்ததே அங்கமுத்துதான். அந்தளவுக்கு இருவரும் பெரியார் பல்கலைக்கு வருவதற்கு முன்னரே நெருங்கிய நண்பர்கள்தான் என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தில்.

 

அதேநேரம், பெரியார் பல்கலையில் பதிவாளராக மணிவண்ணன் சேர்ந்த பிறகு, அங்கமுத்து பழையபடி உடற்கல்வி இயக்குநர் பதவிக்குச் சென்றுவிட்டார். நிர்வாக ரீதியாக பதிவாளர் மணிவண்ணன், அப்போதைய துணை வேந்தர் சுவாமிநாதனுடன் நெருங்க ஆரம்பிக்கவே, மணிவண்ணனுடன் பழையபடி நெருங்கிப் பழகுவதை அங்கமுத்து அடியோடு நிறுத்திக் கொண்டார் என்றும் பல்கலை உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

 

இதனால் சுவாமிநாதனும், மணிவண்ணனும் சேர்ந்து கொண்டு ஆசிரியர் பணி நியமனங்களில் தாராளமாக தில்லுமுல்லுகளை அரங்கேற்றுவதாக அங்கமுத்து உள்ளுக்குள்ளேயே கருவிக்கொண்டிருந்தாராம்.

சுவாமிநாதன்

இந்த நிலையில்தான் பல்கலையில் நடந்த பணி நியமனங்கள் தொடர்பான முக்கிய கோப்புகளை ஒப்படைக்காமல் சென்றுவிட்டதாக அங்கமுத்து மீது பதிவாளர் மணிவண்ணன் சேலம் சூரமங்கலம் போலீசில் 16.12.2017ல் புகார் அளித்தார். அதனால்தான் தற்கொலை கடிதத்தில் மணிவண்ணன் பெயரை வேண்டுமென்றே குறிப்பிட்டு இருப்பதாகவும் சொல்கின்றனர்.

 

என்றாலும், தற்கொலைக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கும்போது குறைந்தபட்சம் பல்கலை நிர்வாகம் அதுகுறித்த உள்ளீட்டு விசாரணையாவது நடத்தியிருக்க வேண்டும். இந்த வழக்கை போலீசார் விசாரணையில் இருப்பதாக ஒரு மொக்கையான காரணத்தைச் சொல்லியே உள்விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டது பல்கலை நிர்வாகம்.

 

புதிய துணைவேந்தரான குழந்தைவேலும், தான் பதவியேற்றதற்குப் பிறகான நிகழ்வுகளுக்கு மட்டுமே பொறுப்பேற்க முடியும் என்ற ரகத்தில் இருப்பதால், அவரிடம் மேற்கொண்டு அங்கமுத்து தற்கொலை வழக்கில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள் பல்கலை பேராசிரியர்கள்.

 

முக்கிய கோப்புகளை ஒப்படைக்கவில்லை என்று சொல்லும் பதிவாளர் மணிவண்ணன், ஏன் அதுகுறித்து தான் பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும்? அதனால், பணி நியமனங்களில் மணிவண்ணன் ஏதோ ஒரு கட்டத்தில் வலுவாக ‘கார்னர்’ செய்யப்பட்டதால்தான், இப்படி ஒரு புகாரையே காலம்போன காலத்தில் அளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

தவிர, பதிவாளர் மணிவண்ணன் மீது வேறு சில புகார்களும் சொல்லப்படுகின்றன. பெரியார் பல்கலையில் பணியில் இருக்கும்போதே தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் பேராசிரியர் பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டதாகவும், அங்கே பேராசிரியர் பதவியை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் கூறுகின்றனர். இந்த மகிழ்ச்சியை அவர் பல்கலையில் சிலருக்கு இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொண்டதாகவும் சொல்கின்றனர்.

கிருஷ்ணகுமார்

மேலும், பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன் என்பவரை தாக்கியதாக சொல்லப்படும் புகாரிலும் பதிவாளர் மணிவண்ணன் பெயர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

பெரியார் பல்கலை வரவு, செலவினங்கள் குறித்து கடைசியாக 2015-2016ம் ஆண்டுக்கு தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை நடந்த காலக்கட்டத்தில் பதிவாளர் பொறுப்பில் 1.4.2015 முதல் 17.8.2015 வரையில் அங்கமுத்துவும், அதன்பிறகு 18.8.2015 முதல் 31.3.2016 வரை மணிவண்ணனும் இருந்துள்ளனர்.

வைத்தியநாதன்

இத்துடன், 1.11.2015 முதல் 31.3.2016 வரை (தணிக்கை காலத்திற்குட்பட்டது) நிதி அலுவலர் பணியையும் மணிவண்ணன் கூடுதலாக கவனித்து வந்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில்தான் பல்கலை செலவினங்களில் ரூ.1.74 கோடிக்கான ஆவணங்கள் தணிக்கையில் இருந்து மறைக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காண்பிக்கப்பட்டு உள்ளது.

 

இப்படி பல குளறுபடிகளும் சந்தேக ரேகைகளும் படிந்த நிலையில்தான் பேராசிரியர் மணிவண்ணன் இன்று பதிவாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

 

இதையொட்டி அவருக்கு இன்று பல்கலையில் பிரிவு உபச்சார விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்ததை அடுத்து, இந்த சம்பிரதாய விழா நாளை (ஆகஸ்ட் 18, 2018) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு செனட் அரங்கத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடக்கிறது. இதில் யாரும் தனக்கு பரிசு பொருள்களோ, சால்வைகளோ கொண்டு வர வேண்டாம் என்று மணிவண்ணன் அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார்.

 

கடைசி நாளான இன்றாவது அவர் மீதான புகார்கள் உண்மையானதா? அல்லது வெறுமனே யூகங்களா? என்பது குறித்து மனம் திறந்து பேச வேண்டும் என்று பல்கலை வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

– பேனாக்காரன்.