Sunday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலை அம்பலமாக்கிய மைத்ரேயன்!

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஓரணியாக இணைந்தாலும் அவர்களுக்குள் நீறு பூத்த நெருப்பு போல மன க்கசப்புகள் இருந்து வருவதாக உலா வரும் செய்திகளை, அதிமுக எம்பி மைத்ரேயன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. கட்சிக்குள் தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள, தன்னுடைய விசுவாசியான ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்துவிட்டு, ஊழல் வழக்கில் சிறை சென்றார் சசிகலா.

அதிமுகவை பல அணிகளாக உடைத்தது, ஓ.பன்னீர்செல்வத்தை கொம்பு சீவி விட்டது என எல்லாவற்றையும் பாஜக பின்னிருந்து நேர்த்தியது இயக்கியது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஓரே அணியாக இணைக்கும் வேலைகளிலும் பாஜக முன்னின்று செயல்பட்டது.

முன்பு பாஜகவில் இருந்து, இப்போது அதிமுக சார்பில் எம்பி ஆகியிருக்கும் மைத்ரேயன், அதேபோல ஒரு காலத்தில் பாஜகவில் இருந்து பின்னர் தேமுதிக சென்று, அதன்பின் அதிமுகவில் ஐக்கியமாகி எம்எல்ஏவான ‘மாஃபா’ பாண்டியராஜன் போன்றவர்கள் மூலம் இணைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 21, 2017ம் தேதி இரு தரப்பினரும் ஒரே அணியாக இணைந்தனர். இணைப்புக்கு பரிசாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும், அவருடைய ஆதரவாளரான ‘மாஃபா’ பாண்டியராஜனுக்கு தமிழ் வளர் ச்சித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

இணைப்பு சுமூகமாக முடிந்தாலும், இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையிலும் மனக்கசப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு கட்சியிலும் ஆட்சி அதிகாரத்திலும் முக்கியத்துவம் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

இடமாற்ற பரிந்துரைகள், தொகுப்பூதிய நியமனங்கள் முதல் அரசு ஒப்பந்தங்கள் வரை ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் கேட்கும் எது ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்து கொடுப்பதில்லை. மேலும், ஓபிஎஸ் தரப்பை கண்காணிக்க கட்சிக்குள்ளும், காவல்துறைக்குள்ளும் ஆள்களை வைத்து உளவு வேலைகள் பார்ப்பதாகவும் எடப்பாடியார் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

அதிமுகவின் ஒருங்கிணைந்த அணிக்கு கட்சியின் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும்பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை முற்றாக கழற்றி விடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும், ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் ஒருமுறை தியானம் செய்ய கிளம்பலாம் என்ற யூகங்களும் எழாமல் இல்லை.

இந்த களேபரங்களுக்கு இடையே, ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்பி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ”ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் உருண்டோடி, நான்காவது மாதம் தொடங்குகிறது. அணிகள் இணைந்து விட்டன. மனங்கள்?” என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயன் மூலமாக மீண்டும் அதிமுகவில் குட்டையைக் குழப்ப பாஜக முயல்கிறதோ என்ற சந்தேகமும் கட்சியினரிடையே எழுந்துள்ளது. இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, மைத்ரேயன் குறிப்பிடும் மனம் பற்றி எனக்குத் தெரியாது என்று பட்டும் படாமலும் சொன்னார்.

எனினும், மைத்ரேயனின் இந்த பதிவு, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்தை (!) தொடங்க இருக்கும் எண்ணத்தையே பிரதிபலிப்பதாகவும் யூகங்கள் கிளம்பி உள்ளன.