Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

போர் விமானம் கொள்முதலில் 35 ஆயிரம் கோடி ஊழல்?; மோடி மீது அடுத்த அட்டாக்!

இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது. இந்த புகாருக்காவது பிரதமர் மோடி பதில் அளிப்பாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஊழலை ஒழிப்பேன் என்ற முழக்கத்துடன் பிரதமர் அரியணையேறிய பாஜகவின் நரேந்திர மோடி, வல்லரசு கனவை நனவாக்குவதுதான் முதல் லட்சியம் என்றார். அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், இந்தியாவுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றே அந்தப் பயணங்கள் குறித்த மதிப்பீட்டை மக்களிடம் பதிய வைத்து வருகிறது பாஜக.

காவி கரங்களில் ஊழல் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக, அறிவியல்பூர்வமான கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டு, அதற்கேற்ப சட்டத்தையும் இயற்றி வருவது கண்கூடு. உதாரணத்திற்கு, அரசியல் கட்சிகளுக்கு ரூ.20 ஆயிரத்திற்குக் கீழ் நன்கொடை வழங்கப்படும்போது, நன்கொடையாளரின் பெயர், பான் எண் போன்ற ஆதாரங்கள் தரத்தேவை இல்லை என்ற சட்டத் திருத்தம்.

இப்படி ஒரு சட்டத்திருத்தம் செய்தது முதல் இந்தியாவிலேயே அதிக நன்கொடை திரட்டிய கட்சியாக பாஜகதான் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 2015-16ம் ஆண்டில் மட்டும் அக்கட்சி அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மட்டும் ரூ.461 கோடி நன்கொடை திரட்டி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி ரூ.186 கோடி, அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றிருக்கிறது.

அடுத்து, மேக் இன் இந்தியா திட்டம். இந்த திட்டமே ஒரு மோசடியான திட்டம் என்று ஆரம்பம் முதலே எல்லா கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என அந்நிய நிறுவனங்களை அழைப்பதைவிட, இங்குள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குக் கைமாற்றி விடுவதில் ஜெட் வேகத்தில் செயல்படுகிறது பாஜக.

இந்தியாவில் தயாரிக்கும் திட்டமானது இந்தியர்களுக்காக தயாரிக்கும் திட்டம் இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. எப்போதும் இந்த அரசு கார்ப்பரேட் வர்க்கத்தினருக்காக மட்டுமே செயல்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

பிரதமரின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் முடிவிலும் இந்தியாவின் அம்பானிகளும், அதானிகளுமே ஆதாயம் அடைகின்றனர். ஆழ்ந்து கவனித்தால், அவர்களுக்காகவே நரேந்திர மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாரோ என்றுகூட தோன்றலாம்.

ஏற்கனவே, பாஜக மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மலை மலையாய் குவிந்து கிடக்க, இந்திய ராணுவத்திற்கு ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கிளப்பி இருக்கிறது.

விரைவில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்ந்தலை சந்திக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்தப் புகாரால் பாஜக ரொம்பவே வெலவெலத்துப் போயிருக்கிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ரூ.90 ஆயிரம் கோடிக்கு 126 ரஃபேல் ரக போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி போர் விமானத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தப்பணிகள் அனைத்தும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுனவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு விமானத்தின் விலை ரூ.714 கோடியாகவும் இறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமராக மோடி பதவியேற்றார். இப்போது மீண்டும் அதே ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சில மாற்றங்களுடன். அந்த மாற்றங்கள்தான் இப்போது கடும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

முதல்கட்டமாக, பாஜக அரசு 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்திருக்கிறது. இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு போர் விமானத்தின் விலை என்ன தெரியுமா? ரூ.1666 கோடியாம். அதாவது முந்தைய ஐமுகூ அரசைக் காட்டிலும் ஒரு விமானத்திற்குக் கூடுதலாக ரூ.952 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அதுமட்டுமல்ல. விமானத்தின் தொழில்நுட்பப் பணிகளை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து பிடுங்கி, அதை அப்படியே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கைமாற்றியுள்ளது பாஜக அரசு. அதாவது, முந்தைய அரசைக் காட்டிலும் ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஆகும் என்கிறது இந்த புதிய ஒப்பந்தம்.

இதன்மூலம் இந்திய பொதுத்துறை நிறுவனத்திற்குக் கிடைக்க வேண்டிய ரூ.35 ஆயிரம் கோடி ஒப்பந்தம் பறிபோயிருக்கிறது. அதனால் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் பாஜகவின் மக்கள் நல அரசு, அனில் அம்பானிக்கு ரூ.35 ஆயிரம் கோடி சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனலாம்.

பாஜகவைப் பொறுத்தவரை இதற்குப் பேர் சுரண்டலும் அல்ல; ஊழலும் அல்ல.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மூன்று கேள்விகளை எழுப்புகிறார். முதல் கேள்வி, இந்த ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ஒப்புதல் பெறப்படாதது ஏன்?, அடுத்தது, ஹெச்ஏஎல் என்ற அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஒப்பந்தத்தை விதிகளை மீறி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது ஏன்?. மூன்றாவது கேள்வி, போர் விமானங்களின் உண்மையான இறுதி விலை என்ன? என்று கேட்டுள்ளார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவெனில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், இதற்குமுன் போர் விமான தொழில்நுட்பங்களைக் கையாண்டதே இல்லை. எந்த வகையிலும் அனுபவம் இல்லாத அந்த நிறுவனத்திற்கு எப்படி இதன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்பதும் ஆச்சர்யகரமான ஒன்று.

அனில் அம்பானியின் டிடிஹெச் சேவை, மொபைல் நெட்வொர்க் என எல்லா தொழிலும் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், கொஞ்சமும் அனுபவம் இல்லாத போர் விமானத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் எப்படி திறம்பட செயல்படுவார்கள் என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.

ஏழை மக்களின் கொஞ்சநஞ்ச சேமிப்பையும் பணமதிப்பிழப்பு என்ற பெயரில் சுரண்டி காப்பரேட்டுகளின் பாக்கெட்டுகளுக்கு திணித்த பாஜக அரசு, அம்பானிகளையும், அதானிகளையும் பாதுகாத்தாலே தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விடும் என்று நம்புகிறது போலும்.

போர் விமானத்திற்காக விதிகளை மீறி ரூ.35 ஆயிரம் கோடி செலவிடுவதுதான் தேச பக்தியா? ஒவ்வொரு விமானத்திற்கும் கூடுதலாக ரூ.952 கோடி செலவிடுவதன் மூலம் வரி செலுத்துவோரிடம் மேலும் சுரண்டுவதுதான் புதிய இந்தியாவா? இந்திய பொதுத்துறை நிறுவனம் பலன் பெறாமல், தனி நபர் ஆதாயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் தேச நலனா? இப்படிச் செய்வதற்குப் பெயர் ஊழல் ஆகாதா?

இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ‘மன் கீ பாத்’தில் மட்டுமே பதில் சொல்லாமல், மக்கள் மன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என்பதே இந்த நாடு அறிய விரும்புகிறது.

– பேனாக்காரன்.