Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர்.

”சொல்லுங்களேன்…கேட்போம்” – இது நக்கல் நல்லசாமி.

 

”அறிவுக்கோயில் தலைவரு

போன பிப்ரவரி மாசம் சேலத்துல

அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன்

ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா…?,”

”ஓ… நல்லா ஞாபகம் இருக்கு.

கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு,

கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே…

தலைவரு பேரளவுக்கு சும்மா

உட்கார்ந்துட்டுப் போனாரே…

அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க…

நல்லா ஞாபகம் இருக்கு…,”

 

”நக்கலாரே… உமக்கு குசும்பு ஜாஸ்தியா”

 

”அன்னிக்கு சாயங்காலம்

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு

முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு,

அவரோட அப்பா நினைவாக

செல்பி எடுத்துக்கிட்டாரு.

புரோக்கர் ஊடகங்கள் எல்லாம்

அதைக்கூட பெரிய செய்தியாக

போட்டாங்க.

 

அப்போது இருந்தே அந்த

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் மீது

அறிவுக்கோயில் தலைமைக்கு ஒரு கண்ணாம்.

அந்த எடத்துல மறைஞ்ச சமூகநீதி

தலைவருக்கு சிலை வைக்கணும்னு

சொல்லிருக்காரு.

 

செல்பி ஷூட்டிங் முடிஞ்ச சில மணி நேரத்துல, அந்த இடத்தோட ஓனருங்கள அழைச்சு, மாவட்ட பொறுப்புல இருக்கற புரோக்கர் கருமேகம் அதிகாரி பேசியிருக்காரு. இதைக்கேட்டு மிரண்டுபோன இடத்தோட ஓனர் தரப்பு, ‘ஹலோ… அந்த இடம் எங்களோடது. இப்ப வந்து சிலை வைக்கிறேனு வலை வீசுறது நல்லாயில்ல,’னு கறாரா சொல்லிட்டாங்கப்பா,”’ என்ற பேனாக்காரர், சூடாக தேநீர் கொண்டு வரச்சொன்னார்.

 

”அறிவுக்கோயில் தரப்புதான் அடுத்தவங்க சொத்த ஆட்டைய போடுறதுல பி.ஹெச்டி., முடிச்சவங்கனு எல்லாருக்கும் தெரியுமில்ல. அதான்… டிசம்பர் 1ம் தேதில இருந்து அந்த இடத்தோட ஓனருக்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறைனு தொடர்ந்து தொல்லை கொடுத்து இருக்காங்க.

 

எதற்கும் அவங்க மசியல. கடைசில நெடுஞ்சாலைத்துறைக்காரங்க மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் இருக்கற இடமே ஆக்கிரமிப்புலதான் இருக்குனு சொல்லி போர்டு வெச்சிட்டாங்க,” என்றார் பேனாக்காரர்.

 

”அதாம்லே வர்கீஸூ” என்று கிண்டலடித்தார் நக்கல் நல்லசாமி.

 

”இது சம்பந்தமாக ஊடகக்காரர்கள் ஃபோன்ல விளக்கம் கேட்டா, நெடுஞ்சாலைத்துறையோட முக்கிய அதிகாரியான துரையானவரு, எதுவா இருந்தாலும் நேர்லதான் பேசுவேன்னு அடம் பிடிக்கிறாராம். மாடர்ன் தியேட்டர்ஸ் தரப்பு, இப்போ நீதிமன்றத்திற்கு போயிருக்கு. இடத்தோட தரப்போ, கருமேகம் அதிகாரி, எங்களை மிரட்டினது உண்மைனு பகிரங்கமாக இப்பவும் சொல்றாங்க.

 

இதுக்கிடைல, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் அருகே எந்தக் கட்டுமானப் பணிகளும் நடைபெறாதுனு பட்டும் படாமலும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரு.

 

தினமலம் தவிர, மற்ற புரோக்கர் ஊடகங்கள் எதுவும் இந்த விவகாரம் பத்தி ஒத்த வரிகூட எழுதல. டிவி சேனல்களும் பெரிசா கண்டுக்கல. ஆனா நெடுஞ்சாலைத்துறையோட அறிக்கையையும், அமைச்சர் அறிக்கையையும் பெரிசா போட்டுருக்காங்க. ஊடகங்கள் எல்லாவற்றையும் கழகம்தான் கட்டுப்பாட்டுல வெச்சிருக்குங்கறது உண்மைனாலும், சேலம் மாநாட்டு விளம்பர வருமானம் படுத்தற பாடும் இன்னொரு காரணம். ஆனாலும் பிரச்னை அணைஞ்ச பாடில்லையாம்.

 

ஏற்கனவே, கழகம் ஆட்சியில் இருந்தபோதுதான் சேலத்துல அங்கம்மாள் காலனி ஆக்கிரமிப்பு பிரச்னைல சிக்கி சின்னாபின்னமானாங்க. அதோட பிரதிபலனாதான் மக்கள் அவர்களை பத்து வருஷத்துக்கு கூப்புல உட்கார வெச்சிருந்தாங்க.

 

இப்போ மறுபடியும் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் ஆக்கிரமிப்பு சர்ச்சையில சிக்கியிருக்காங்க. இது அங்கம்மாள் காலனி வெர்ஷன் 2.ஓ ஆக இருக்கலாம்னு தோணுதுப்பா,” என்றார் பேனாக்காரர்.

 

நக்கல் நல்லசாமி கொண்டு வந்த தேநீரும் கொஞ்சம் ஆறிப்போயிருந்தது. ஆனாலும், பேனாக்காரர் அதை குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

 

”இப்படிதான் மாயாவதி, தன் இஷ்டத்துக்கு உ.பி.யில் தெருவுக்குத் தெரு யானை சிலைகளை வெச்சாரு. அதற்குப் பிறகு அவரை ஜனங்க ஆட்சிக்கே கொண்டு வரல.

 

இப்போது அறிவுக்கோயில் கட்சியும்,

கடலில் பேனா சிலை, தொகுதிதோறும்

சமூகநீதி தலைவருக்கு சிலை,

தெருக்களுக்கும் திட்டங்களுக்கும்

சமூகநீதியார் பேர வைக்கறதுல

ஆர்வம் காட்டுறாங்க. அப்புறம்,

தேர்தல் நேரத்துல இந்த சிலைகள் மேல

எல்லாம் துணியைப் போட்டு மூடுவாங்க.

எதுக்கு சிலை வைப்பானேன்…

அது மேல மூடுவானேன்.

 

இதெல்லாம் நல்ல பேரெடுக்கிற சமாச்சாரம் இல்லை; பேரை கெடுக்கிற செயல். ஏற்கனவே, சென்னை சீரமைப்பு பணிகளில் 4000 கோடிய விழுங்கிட்டாங்கனு பேர் நாறிப்போச்சு. இதையெல்லாம் மக்களவை தேர்தல் நேரத்துல எதிர்க்கட்சிகள் டிரெண்டிங் ஆக்க திட்டமிட்டு இருக்காங்களாம்.

 

இப்பலாம் கழகக் கண்மணிகள் எங்கேயாவது செல்பி எடுக்கறத பார்த்தாலே ஜனங்க தலைதெறிக்க ஓடுறாங்களாம்பா.

 

இப்படிதான் உ.பி. ஒருத்தரு, நிவாரண உதவிகள் வாங்கின ஒரு பொண்ணோட செல்பி எடுத்துருக்காப்ல. அன்னிக்கு நைட்டு அந்தப்பொண்ணு திடீர்னு காணாம போயிடுச்சாம்…,” என்ற பேனாக்காரர், ராதாரவி பாணியில், எதுக்காகச் சொல்றேன்னா…. அதுக்காகச் சொல்றேன்,” என்று சொல்லி ‘எண்டு’ கார்டு போட்டார்.

 

”நடிகர் சிவக்குமார் ஒரு தீர்க்கதரிசி பேனாக்காரரே… இதெல்லாம் தெரிஞ்சுதான் அவரு யாரையும் தன்னோட செல்பி எடுத்துக்க விடாம அப்பவே செல்போனை தட்டி விட்டிருக்காப்ல. நாமதான் அவரை புரிஞ்சிக்கல…,” என பஞ்ச் அடித்தார் நக்கல் நல்லசாமி.

 

திண்ணை காலியானது.

 

– ஞானவெட்டியான்