Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

எடப்பாடி பழனிசாமி மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் தர்ம யுத்தத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்ற ஊசலாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி அணி என உடைந்த கட்சி, பிறகு ஜெயலலிதா தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அணிகளாக உடைந்து இருக்கிறது.

டெல்லி ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆறு மாத காலம் தர்ம யுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார்.

துணை முதல்வர் பதவி என்றபோது அவருக்குள் ஒரு சிந்தனை ஓடியிருக்க வேண்டும். ”ஜெயலலிதா ‘உள்ளே’ சென்றபோதெல்லாம் நாம்தான் நம்பர்-1 ஆக இருந்தோம். இப்போது, ஒரு படி கீழிறங்கி நம்பர்-2 ஆக இருக்கப் போகிறோம். அவ்வளவுதானே…” என்று கருதியிருக்கக் கூடும்.

ஆனால் நிஜத்தில் நடந்ததெல்லாம் வேறு. துணை முதல்வர் என்பது தனி அந்தஸ்து கிடையாது. ஏனைய அமைச்சர்கள் வரிசையில் துணை முதல்வரும் ஒருவர். அவ்வளவே. இதற்கெல்லாம் தனி சலுகை காட்ட முடியாது என்பதை செயல்பூர்வமாக நடத்திக் காட்டி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு எங்கே அத்தனை தைரியம் வந்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது, டெல்லியில் ஞானப்பால் மன்னிக்கவும், காவிப்பால் குடித்ததால் வந்த அபூர்வ சக்தி.

‘அட. மண்டியிடச் சொன்னால் படுத்தே விட்டானய்யா’ என்கிற வடிவேலு பட வசனம்போல் பிரதமர் மோடி, அமித்ஷாக்களிடம் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதீத விசுவாசத்திற்குக் கிடைத்த பலன் அது. அந்த தைரியத்தில்தான் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரங்கட்டி வருகிறார் எடப்பாடியார்.

டெல்லி மேலிடத்திடம் தங்கள் விசுவாசத்தின் எல்லை கொஞ்சமும் குறைந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடியாரும், அவருடைய அணியினரும் கவனமாக இருக்கிறார்கள். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பலகை வைப்பதாக இருந்தால்கூட காவி நிறத்தில் வைக்கும் அளவுக்கு அவர்களின் விசுவாச போதை தலைக்கேறிக் கிடக்கிறது.

அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிப்பதாகச் சொல்லக்கூடாது’ என்று திமுக செயல் தலைவருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இவர் இப்படி என்றால், பாஜக தமிழிசை, ‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது,’ என்று பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.

சரி. இப்போது இந்த கிளைக் கதைகளுக்குள் போக வேண்டாம்.

கடந்த 12ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்துவிட்டு வந்தாரே, அதைப்பற்றிப் பற்றி பேசுவோம். அவர் சந்தித்ததன் பின்னணி குறித்து அன்றைய தினமே நாம் சில தகவல்களை சொல்லி இருக்கிறோம். இப்போது மேலும் சில…

துணை முதல்வரான தனக்கு மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை செயலர்களாக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் சொன்னாராம். அதற்கு கொஞ்சமும் மசிந்து கொடுக்காமல் போக்குக் காட்டி வந்த முதல்வர் எடப்பாடி, கடைசியில் தமிழ் தெரியாத சந்திரசேகர் சகாமூரி என்ற ஐஎஸ்எஸ் அதிகாரியை அவருக்கு செயலராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறார்.

சந்திரசேகர் சகாமூரி

தனக்கு பரிச்சயமான, முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து ஒருவரையாவது தனிச்செயலராக பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த பன்னீருக்கு சகாமூரி நியமனத்தால் ஏமாற்றமே. பாம்பும் சாக வேண்டும்; தடியும் உடைந்துவிடக் கூடாது என்பார்களே. அதுதான் எடப்பாடியாரின் உத்தி.

போதைக்குறைக்கு, தான் மாற்றச் சொன்ன மூன்று காவல்துறை அதிகாரிகளை கடைசிவரை மாற்றவே இல்லையாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுநர் பதவியேற்பு விழாவில், மேடையில் முதல்வர் இருக்கைக்கு அருகில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ஓபிஎஸ்ஸுக்கு அதிலும் ஏமாற்றம். மற்ற அமைச்சர்களோடு அவரும் கீழே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு விழாவில் சக அமைச்சர்கள் வரிசையில் ஓபிஎஸ்.

அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதித்துறை மற்றும் வருமானம் கொழிக்கும் சிஎம்டிஏ துறைகளில் எந்த கோப்புகளாக இருந்தாலும் தன் கவனத்திற்கு வராமல் அரசாணை வெளியிடக்கூடாது என்று அதற்கும் கடிவாளம் போட்டுள்ளார் எடப்பாடியார். தான் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தினரின் முக்கிய பிரமுகர்கள் கொண்டு வந்த சில சிபாரிசுகளையும் எடப்பாடியார் புறந்தள்ளிவிட்டு, கவுண்டர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறாராம்.

இவை எல்லாமே ஓ.பன்னீர்செல்வத்தை உச்சக்கட்ட கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. எவ்வளவு நாள்தான் மனதிற்குள் புழுங்கிக் கொண்டே இருப்பது? அதனால்தான், அண்மையில் பிரதமரைச் சந்தித்து மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட்டாராம். ஆனால், இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸுக்கு எதிர்பார்த்த பலன் தரவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.

எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிடுகையில், சசிகலா-டிடிவி தினகரன் தரப்பு எவ்வளவோ தேவலாம் என்றும் நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளினாராம் ஓபிஎஸ். தர்ம யுத்தம் நடத்தியபோது மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கையை நாமே கெடுத்துக் கொண்டோமோ என்றும் அப்போது பேசியிருக்கிறார்.

இது எதுவுமே கண்டுகொள்ளாதவராக எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில், அதாங்க…ஆளுயர கட்-அவுட், ஆடம்பர வரவேற்பு சகிதமாக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

ஏதேதோ சூழ்ச்சி செய்து, நம்மை எடப்பாடி அணியுடன் இணைத்து விட்டார்களோ என்று தாமதகாவே புரிந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று ஒருமுறை தியானம் செய்து வரலாமா? அல்லது தர்ம யுத்தத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாமா? என்றும் யோசித்து வருவதாகக் கேள்வி.

இதுபோன்ற தகவல்கள் ஊடகங்களில் தொடர்ந்து கசிந்ததை அடுத்து, கடந்த 17ம் தேதி நடந்த அதிமுக ஆண்டு விழாவில் எடப்பாடியாரும், ஓபிஎஸ்ஸும் ‘ஒரே மாலை ஒரே சால்வை’ என இணைந்த கைகளாக ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

சசிகலாவுக்கு ஆதரவாக காலையில் கையெழுத்திட்டுவிட்டு, இரவில் ஜெயலலிதா சமாதியின் தியானம் செய்ய புறப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

– அகராதிக்காரன்.