Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் ‘ஆரண்ய காண்டம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘காக்காமுட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘குற்றம் கடிதல்’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்குபொம்மை’ போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன.

இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. அதையும் தாண்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இன்னொரு முக்கிய காரணம் உண்டு. அது, அவற்றின் தனித்தன்மையுடன் கூடிய கதை சொல்லலும், கணமான திரைக்கதையும்தான்.

கதை என்பதே ஏழு முடிச்சுகளால் ஆனதுதான் என்பது திரையுலகப் படைப்பாளிகள் முன்வைக்கும் ஒரு பழைமையான கூற்று. ஒரே கதையை வைத்துக்கொண்டு வித்தியாசமான ட்ரீட்மென்டுகளால் அடுத்தடுத்து படங்களை ஹிட் கொடுத்த தமிழ் இயக்குநர்கள் நிறையவே இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள்.

பஞ்சு அருணாசலம், எஸ்பி.முத்துராமன் கூட்டணியில் உருவான பெரும்பான்மையான படங்கள் அரைத்த மாவு வகையறாதான்.

அந்த அரைத்த மாவையும், புளித்த மாவையும் இன்றும் அட்லீ போன்ற இளம் இயக்குநர்கள் தொடரும்போது; அதையே திரை ரசிகர்கள் தூக்கிப் பிடிக்கும்போது, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் போன்ற படைப்பாளிகள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடும் அபாயமும் இருக்கிறது.

அட்லீயை ஏன் அரைத்த மாவு என்கிறோம்? அவரின் முந்தைய படங்களான ராஜாராணி, மணிரத்னத்தின் மவுனராகம் படத்தின் சாயலிலும், அதற்கு அடுத்த படமான தெறி, பரதன் இயக்கத்தில் வெளியான சத்ரியன் சாயலிலும் இருந்தன.

அட்லீ

அவையாவது சாயலில்தான் இருந்தன.

ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் மெர்சல் படத்தில், பழைய படங்களில் வெளியான காட்சிகளை அப்படியே உருவி அல்லது திருடி வைத்திருக்கிறார்கள். அப்படத்தில் இடம்பெறும் சில அரசியல் வசனங்கள் சர்ச்சையைக் கூட்டியிருக்கிறது. அது, அரசியல்வாதிகளின் வழக்கமான அரசியல்தான். அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தப்படத்தில் புதிதாக எதுவுமே இல்லை என்பது புலனாகும்.

உதாரணத்திற்கு சில…

சமந்தா, விஜய்யை சாதாரண நபர் என்ற நினைப்பில் அவரிடம் டேய் தம்பி. ரோஸ்மில்க் வாங்கிட்டு வாடா என்ற காட்சியும், அவரிடம் விஜய் இண்டர்வியூவுக்குச் செல்லும் காட்சிகளும் ‘கஜினி’ படத்தில் சஞ்சய் ராமசாமி-கல்பனா கதாபாத்திரங்களை நினைவூட்டுகின்றன.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அப்பா கமல் பாத்திரத்தின் பெயர் சேதுபதி. அந்தப் படத்தில் மகன்களாக வரும் இரு கமல் பாத்திரங்களில் ஒருவர் சர்க்கஸ்காரர். அப்பாவைக் கொன்றவர்களை மகன்கள் பழி வாங்குவர். மெர்சலில் அப்பா பாத்திரத்தின் பெயர் தளபதி. மகன்களின் ஒரு விஜய், மேஜிக் நிபுணர். இதுவும் பழி வாங்கும் கதைதான்.

மெர்சலில், மதுபாட்டிலால் மண்டையை உடைக்கும் காட்சி இடம்பெறுகிறது. ‘கபாலி’ படத்தில் தினேஷ், பாட்டிலால் மண்டையில் அடித்தே கொலை செய்யப்படுவார். அந்தப்படத்தின் காட்சியும் ‘ஜாக்கிசானின் ரம்பிள் இன் தி பிராக்ஸ்’ என்ற படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்.

மெர்சலில் வரும் மருத்துவமனை காட்சிகள், கிட்டத்தட்ட ‘ரமணா’ படத்தில் இடம்பெற்றவைதான். விஜய்யின் அறிமுகக் காட்சிகள், ‘சிவாஜி’ படத்தில் ரஜினியைக் கைது செய்து கொண்டுபோகும் காட்சிகளுடன் ஒப்பிடப்படுகிறது.

காட்சிகளையும், வசனங்களையும் காப்பி – பேஸ்ட் செய்வதற்கு எதற்கு தனியாக கதை, திரைக்கதை, வசனம் என்று திரையில் போட்டுக்கொள்ள வேண்டும்?

மாறாக, டைட்டில் கார்டிலேயே ‘முந்தைய படங்களின் வசனகர்த்தாக்கள், திரைக்கதை ஆசிரியர்களுக்கு நன்றி’ என்று வெளிப்படையாகவே ஒற்றை வரியைப் போட்டுவிட்டால், இப்போது அத்தகைய விமர்சனங்கள் எழுந்திருக்காது.

மெர்சல் படம், கமல்ஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ போல இருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து இயக்குநர் அட்லீயிடம் கேட்டதற்கு, ”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என் படத்திற்கான கதைகளை, நான் மக்களிடம் இருந்துதான் எடுக்கிறேன்.

கணவன் மனைவியின் முந்தைய காதலைப் பற்றியும், அதனால் உருவாகும் பிரச்னைகள் பற்றியும் ராஜாராணி படத்தில் சொன்னேன். 80களில் வெளியான மவுனராகம் படத்தில் இதே கதை சொல்லப்பட்டாலும், 2013-லும் அதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தானே செய்கிறது?

இப்போதும் அதன் தேவை இருக்கிறது. அதனால்தான் அந்தப்படத்தை எடுத்தேன். தூண்டுதல் (இன்ஸ்பிரேஷன்) இல்லாமல், எந்த ஒரு படத்தையும் யாராலும் எடுக்க முடியாது. இந்த உலகத்தில் ஏற்கனவே எல்லாமே சொல்லப்பட்டுவிட்டது.

புதிதாக கண்டுபிடிக்க ஒன்றுமே இல்லை. ‘ராஜாராணி’ படத்துடன் ‘மவுனராகம்’ படத்தை ஒப்பிட்டுச் சொல்வதை நான் பாராட்டாகத்தான் (காம்ப்ளிமென்ட்) பார்க்கிறேன்,” என கொஞ்சமும் குற்ற உணர்வே இல்லாமல்தான் சொன்னார்.

 

எனக்குத் தெரிந்த இளநிலை விஞ்ஞானி ஒருவர், ”ஓர் ஆய்வுக்கட்டுரையில் வெளிவந்த ஒரு வரியைக்கூட இன்னோர் ஆய்வுக்கட்டுரையில் நாங்கள் பயன்படுத்த முடியாது.

அவ்வளவு ஏன்…எங்கள் ஆராய்ச்சி பற்றி நாங்கள் வெளியிட்ட கட்டுரையில் இருந்தேகூட எங்களின் அடுத்தடுத்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு முந்தைய கட்டுரைகளின் வரிகளைக் கையாள க்கூடாது.

அதையும் மீறி செய்தால் எங்களைத்தான் காறித்துப்புவார்கள். சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்,” என்றுகூறியதோடு, அட்லீயின் கருத்தை கிண்டல் தொனியில் விமர்சித்தார்.

கோடம்பாக்கத்தின் படைப்பாளிகளுக்கு எப்போதுமே கற்பனை வறட்சி உண்டு. ஒரு படத்திற்கு பெயர் வைப்பதில் இருந்து அவர்களுடைய கற்பனை வறட்சி தொடங்குகிறது. இந்த நிலையில் அவர்களிடம் கருத்தாழமிக்க அல்லது யதார்த்தத்திற்கு அருகிலான திரைக்கதைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘ஜோடி’, ‘அன்புள்ள காதலுக்கு’ என மூன்று படங்களும் ஒரே கதையம்சத்துடன் ஒரே நேரத்தில் வெளியானதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டுள்ளனர்.

மெர்சல் படம் குறித்து ஓர் யூ டியூப் சேனல் விமர்சகர், ”ரமணா, கஜினி, டார்க் நைட் என தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என்று பல படங்களின் காட்சிகளை வைத்து ‘புதுசா ஒரு பழைய படத்தை’ எடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் வசனங்கள்கூட ஏற்கனவே ஃபேஸ்புக், ட்விட்டர் சமூகவலைத்தளங்களில் அடிச்சு துவைச்சதுதான். இந்தப் படத்திற்கென வசனகர்த்தா சொந்தமாக என்ன எழுதினார் என்று தெரியவில்லை,” என்று விமர்சனம் செய்திருப்பார்.

அதுவும் மறுப்பதற்கில்லை.

நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரை இயக்குநருமான சீமான், பல்வேறு பொதுக்கூட்டங்களில், ஊடகங்களில் பேசிய பே ச்சுக்களை தொகுத்து, மெர்சல் படத்தில் தேவைக்கேற்ப வசனங்களாகச் சேர்த்துள்ளனர். (சீமான் கருத்துகளும், அவருடையதல்ல. அதுவும் பொதுவெளியில் பலரும் சொன்னதுதான்)

மெர்சல் படத்தில் மருத்துவர்கள் மாநாட்டில் விஜய், ”மனிதநேயம் என்பது ஒருவனுக்கு பெஸ்ட் குவாலிட்டி இல்லை. அது பேசிக் குவாலிட்டி. மனுஷனுக்கு சேவை செய்யத்தான் மருத்துவர்கள் இருக்காங்க. ஆனால், இங்கே மருத்துவம் என்பது ஒரு வியாபாரமாக மாறிவிட்டது,” என்பார்.

அந்த மாநாட்டில், அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று ஒருவர் கேள்வி எழுப்புவார். அதற்கு விஜய், ”இந்த நாட்டின் ரிச்சஸ்ட் மேனுக்கு கிடைக்கும் அதே மருத்துவம், புவரஸ்ட் மேனுக்கும் கிடைக்கணும்.

அதுக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் எல்லோருமே அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும். அப்போது தானாகவே அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்ந்து விடும்,” என்பார்.

சீமான் பேச்சுக்களையும், மெர்சல் வசனங்களையும் இணைத்து நாம் தமிழர் ஆதரவாளர்கள் யு டியூபில் வெளியிட்டுள்ளனர். அதுவும் இப்போது வைரல் ஆகி வருகின்றன.

என் நண்பர் ஒருவர் விரைவில் ஒரு படம் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறார். மெர்சல் படத்தில் நிலவும் கற்பனை வறட்சி பற்றி கேட்டேன்.

”நான் இன்னும் மெர்சல் படம் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப்பட்டவரை, இந்தப் படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்கானது. அதை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படம் பண்ணப்பட்டுள்ளது. விஜய், எதை செய்தாலும் அவருடைய ரசிகர்கள் ரசிப்பார்கள். கை தட்டுவார்கள். இது எல்லாமே இயக்குநர் அட்லீக்கும் தெரியும். விஜய்க்கும் தெரியும்.

விஜய்யின் முந்தைய தெறி படம் இந்தளவுக்கு விமர்சனங்களை சந்திக்கவில்லையே ஏன்?. தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் களமாக இந்தப் படத்தை விஜய் பயன்படுத்திக் கொண்டார்.

ஜிஎஸ்டி, மருத்துவத்துறைக்கு எதிரான வசனங்களை வைத்தால் பரபரப்பு ஏற்படும். அதன்மூலம் இன்னும் அரசியல் வெளிக்கு வரலாம் என்பதற்காக திட்டமிட்டே வைக்கப்பட்ட வசனங்கள்.

இதுபோன்ற வசனங்களை பேச மாட்டேன் என்று விஜய் மறுத்திருந்தால், அவரை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. கத்தி, துப்பாக்கி படங்கள் பற்றி விமர்சனம் பண்ணலாம். ஆனால், மெர்சல் படம் விமர்சனம் பண்ணவே தேவையில்லாதது. அது, ரசிகர்களுக்கானது. அவ்வளவுதான்,” என்கிறார்.

எல்லாம் சரிதான். எதுவுமே புதிதாக இல்லாதபோது எதற்காக இந்தப்படத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டும் என்றும் சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1. அட்லீ பேட்டி இணைப்பு.

2.சீமானின் உரை 

 

– வெண்திரையான்.