Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

யாருக்கான ஊடகங்கள்?: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்!

ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை.

அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன.

ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பாத இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான், துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் சடலத்தைக் கொண்டு வர அம்பானிக்குச் சொந்தமான தனி விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறார்.

இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எந்த ஓர் அச்சு அல்லது மின்னணு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அவருடைய கணவர் போனி கபூரைக் காட்டிலும் அதிகம் அழுகின்றன. நிச்சயமாக ஸ்ரீதேவி இந்தியாவின் அடையாளம். தமிழர்களின் தனித்த அடையாளம். அதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஸ்ரீதேவி மட்டுமே இ ந்தியா அல்லவே! அவர் மட்டும் உலக அரசியலும் இல்லையே!

ஸ்ரீதேவியின் மரணம் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து, காட்சி ஊடகங்கள் மீது சமூக வலைத்தளவாசிகள் காறி உமிழ்கின்றனர்.

ஸ்ரீதேவி மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை பார்வையற்றவர்கள் யானையை உணர்ந்ததுபோல் சித்தரிக்கின்றனர். அவர் எப்படி இறந்தார் என்பதற்கு ஆளாளுக்கு யூகங்களின் அடிப்படையில் செய்தி வெளியிடுவது, அந்த மாபெரும் கலைஞரை அவமானப்படுத்துவதாகவே கருதுகின்றனர்.

ஊடக அறம் என்று பெரிய சொல்லை இன்றைய நிலையில் பயன்படுத்துவதும்கூட அபத்தம்தான். குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் காட்சி ஊடகங்களின் கண்மூடித்தனமான செயல்பாட்டுக்கு ஒரே ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக சலீம் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி மெட்ரோ ரயிலில் செல்லும்போது நிற்கவே முடியாத அளவுக்கு தள்ளாடிக் கொண்டிருப்பது போலவும், ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி ரயில் பெட்டிக்குள்ளேயே சுருண்டு விழுவது போலவும் ஒரு வீடியோ காட்சி அப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக உலா வந்தது. அவர் குடிபோதையில் தடுமாறுவதாக அந்த காட்சி பகிரப்பட்டது.

அதை அப்படியே திருடிக்கொண்ட காட்சி ஊடகங்கள், அந்த காவலர் யார்? உண்மையில் நடந்தது என்ன? என்ற அடிப்படை விவரங்களைக்கூட விசாரிக்காமல் அந்த வீடியோவை ஒளிபரப்பின.

காட்சி ஊடகங்கள் அனைத்தும் அவரை ஒரு குடிகாரர் போலவும், அவரால் பயணிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டதாகவும் தீர்ப்பு கூறின. இதுகுறித்து விசாரித்த காவல்துறை, சலீமை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது. இந்த அதிர்ச்சியில் அவருடைய மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

தன்னுடைய கண்ணியம் பாதிக்கப்பட்டதாகக் கருதிய சலீம் நீதிமன்றத்தை நாடினார். பிரஸ் கவுன்சிலும்கூட புகார் செய்தார். விசாரணையில், அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ப க்கவாதம் ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவ்வப்போது இதுபோல் நிலை தடுமாறுவார் என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட அந்த நிகழ்வின்போது அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பதும் புலனாகியது. பின்னர் அவர் பணியில் சேர்த்து க்கொள்ளப்பட்டார். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நாள்கள், பணி நாள்களாக எடுத்துக்கெ £ள்ளப்பட்டன.

ஆனால், அவர் பக்கம் தீர்ப்பு கிடைத்தும் அதுகுறித்த செய்தியை எந்த ஒரு பத்திரிகையும், காட்சி ஊடகமும் வெளியிடவே இல்லை. முன்பின் யோசனையின்றி ஒருவரைப் பற்றி தவறான கருத்து வெளியிடும் ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை வேறு மாதிரியாக இருக்கிறது என்றபோது பயந்து பம்முவது ஏன்? புறக்கணிப்பது ஏன்?

அரைவேக்காட்டு காட்சி ஊடகங்களால் இன்றைக்கும் சலீம், மக்கள் மத்தியில் ஒரு குடிகாரராகவே பதிந்து போயிருக்கிறார்.

இந்த நிலையில் இருந்து இன்றைக்கும்கூட காட்சி ஊடகங்கள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன், சன் டிவியில் சீமான் நேர்காணல் ஒளிபரப்பானது.

எட்டு ஆண்டுகளாக ‘நாம் தமிழர்’ பெயரில் கட்சி நடத்தி வரும் சீமான், தன் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை முழங்காத மேடைகளே இல்லை. அவரிடம் உங்கள் கொள்கைதான் என்ன? என்ற அடிப்படையான வினாவையே இப்போதும் எழுப்புவது நகைப்பாகத்தான் இருந்தது.

நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்குவதற்கு முதல் நாள், அவரை வீடு தேடிச்சென்று வாழ்த்து தெரிவித்தார். அதற்கான காரணத்தையும் அவர் பகிரங்கமாக அப்போதே சொல்லியிரு ந்தார். ஆனால், மூன்று நாள்கள் கழித்து மீண்டும் அவரிடம் நேரில் சந்தித்ததால் சீமானின் தன்மானம் போய்விட்டதாக அவரைக் காட்டிலும் அந்த சேனல் மூக்கால் அழுவது ஏனோ?

அவர் பெயர் சீமானாக இருந்தாலென்ன சைமனாக இருந்தாலென்ன?. அல்லது அவரே சொல்வதுபோல பன்னி என்றோ மயிராண்டி என்றோதான் இருந்துவிட்டுப் போகட்டுமே.

பெற்றோரிட்ட பெயரை அவர் மறைப்பதாகக் கருதினால், அதுகுறித்த ஆதாரங்களை இந்நேரம் அந்த சேனல் திரட்டியிருக்க வேண்டும். அதைச் செய்திடாமல், அவரிடமே நீங்கள் சைமனா? சீமானா? என்பது சிறுபிள்ளைத்தனமானது. வாட்ஸ் அப்-ல் உலா வரும் அய்யத்தை அவர் மீது திணிக்கலாமா?

வட இந்திய டிவி சேனல்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு செய்தி சேனல்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

சிரியாவில் கடந்த நாலைந்து நாள்களில் ரசாயன குண்டுகளுக்கு 150 குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாகியுள்ளனர். அதன் துயரத்தை பங்கு போட்டுக்கொள்ள இந்த நாட்டில் ஓர் ஊடகமும் இல்லாததுதான் ஆகப்பெரிய துயரம்.

சிரியாவில் நடந்து வரும் யுத்தம் என்பது அந்த நாட்டுக்குள் மட்டும் தொடர்புடையது அல்ல; அதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியலை ஏன் இங்குள்ள அறிவார்ந்த சமூகம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மறுக்கின்றன? நேற்று ஸ்ரீலங்காவில் நடந்தது. இன்றைக்கு சிரியாவில் நடக்கிறது. நாளை இந்தியாவிலும் அதுபோன்ற உள்நாட்டுக் கலவரம் நடக்கலாம்!

ஏன் இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் இந்தியா அத்தனை முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்? ரஃபேல் போர் விமான ஊழல், தொடரும் வங்கி மோசடிகள் குறித்தெல்லாம் ஏன் இந்த ஊடகங்கள் பேச மறுக்கின்றன? அதை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் என்ன தயக்கம் இருக்க அவர்களுக்கு?

”பாலியல் வன்முறைகளைத் தூண்டுவதிலும் வணிகம்; அதை கண்டிப்பதிலும் வணிகம்” என்று எல்லாவற்றிலும் வணிக நோக்கில் செயல்படும் முன்னணி வார இதழின் ஊடக அறம் குறித்து கிண்டலடிக்கிறது வினவு இணையதளம்.

நடிகைகளின் அரை நிர்வாணப் படங்களை வெளியிடுவது, உள்ளார்ந்த காமத்தை தூண்டுவதற்கும் டைம்பாஸாக புத்தகம் நடத்தி வருபவர்கள் திடீரென்று பெண்ணியும் பேசுவார்கள். மொழி வரலாறெல்லாம் எழுதுவார்கள்.

அந்த இதழில் சினிமா, சினிமா சார்ந்த செய்திகளைக் கழித்துவிட்டால் 20 பக்கங்களே இதர வகைமையில் இருக்கும். அந்த இதழை ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லிவிட முடியாது. ஆனால், மல்லிகைப் பூவை கையில் வைத்துக்கொண்டு சாக்கடை கால்வாய் எப்படி மணக்குது பார் என்றால் ஒத்துக்கொள்ள முடியுமா?

ஊடகம் எனும் அதிசக்தி வாய்ந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு, காகித பூக்களை மட்டுமே கொய்து கொண்டிருப்பது 23ம் புலிகேசித்தனமாகவே பார்க்கிறேன். செய்தி சேனல்களில் தினமும் சராசரியாக 15 செய்திகளை வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் ஒப்பேற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு செய்தி என்றால்கூட விரிவாக அலசுவதற்கு 32 செய்திகள் கிடைத்துவிடும். ஆனால், சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பதில் என்ன சுகமோ. மக்கள் டிவி உள்ளிட்ட ஒன்றிரண்டு சேனல்கள் தனித்தன்மையுடன் இருக்கின்றன. ஆங்கில சேனல்களில் எல்லாமே காப்பி பேஸ்ட் வகையறாக்கள்தான்.

இங்கு இன்னும் காவிரி, நெடுவாசல், அனிதா மரணம், நீட் தேர்வு, கூடங்குளம், நியூட்ரினோ, மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு இப்படி யாதொரு பிரச்னைகளுக்கும் தீர்வே எட்டப்படாத நிலையில், எப்படி அவர்களால் வெறுமனே கடந்து போய் விட முடிகிறது?

 

– பேனாக்காரன்.