Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வு: பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை; சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச வயது வரம்புக்கு இடைக்காலத் தடை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28, 2018) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 6ம் தேதி நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.

நீட் தேர்வை, பட்டியல் இனப்பிரிவினர் 30 வயது வரை எழுதலாம் என்றும், பொதுப்பிரிவினர் 25 வயது வரை மட்டுமே எழுத முடியும் என்றும் சிபிஎஸ்இ வயது வரம்பு நிர்ணயம் செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வயது வரம்பு தளர்வு அளிக்கக்கோரி சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

சிபிஎஸ்இ விவகாரத்தில் நுழைய விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மாநில நீதிமன்றங்களை நாடலாம் என்றும் அப்போது அறிவுரை வழங்கியிருந்தது. இதையடுத்து மனுதாரர்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றனர்.

மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும், இது தொடர்பாக எழுத்து மூலம் விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ&க்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால், நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும், போட்டியும் கடுமையாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலப் பாடத்தில் இருந்தும் வினாக்கள்:

கடந்த ஆண்டு நீட் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடத்த உள்ள நீட் தேர்வில், மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்துள்ளார்.