Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ எனப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அமைச்சுப்பணி ஊழியர்களின்றி முடங்கிக் கிடக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும், திங்கள் கிழமைகளில் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும். அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக, வழக்கமான பணிகளில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அரசுப்பள்ளிகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கெடுக்கச் சென்றதால், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், தேர்வுப்பணிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை தடுமாறி வருகிறது. தனியார் அல்லது நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களைக் கொண்டு, அரசுப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சிகளிலும் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும், அத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை.

அரசு ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடிக் கிடைக்கும் ஓர் அரசு அலுவலகம்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வுக்காக போராடுவது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதனால், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்ற தகவல்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இன்றுமுதல் (செப். 11) ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், தங்களின் வழக்கமான ஊதிய உயர்வு கோரிக்கைகளுடன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெயரளவில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம் என்றும், இயல்பு நிலை கெடும் வகையில் போராட்டம் நடத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் நீட் தேர்வு குறித்த வழக்கில் தீர்ப்பு அளித்திருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, ஜாக்டோ – ஜியோ போராட்டம் வலுத்துள்ள நிலையில், அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை தமிழக டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளனர். மாநில சட்டம் – ஒழுங்கு பிரச்னைதான் இன்றைய சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், எஸ்மா சட்டம் குறித்த பேச்சுகளும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், சந்திப்பின் நோக்கம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூரவ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2003ம் ஆண்டிலும் இதேபோல் ஊதிய உயர்வு கோரிக்கைகளுக்காக ஜாக்டோ – ஜியோ, கோட்டா – ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த கூட்டு நடவடிக்கைக்குழுத் தலைவர்களை முதல்கட்டமாக எஸ்மா – டெஸ்மா சட்டத்தின் கீழ் செய்தார். அதன்பின், 2.7.2003ம் தேதி, மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். உலகளவில் ஒரே கையெழுத்தில், ஒரே நாளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணியிழக்கச் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதென்ன எஸ்மா / டெஸ்மா?: அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் ஆங்கில சுருக்கமே ‘எஸ்மா’. அதாவது, Essential Services Maintenance Act என்பதன் சுருக்க வடிவம். இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டிற்கென தனி சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான், டெஸ்மா (Tamilnadu Essential Services Maintenance Act).

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் காப்பதற்காக மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்ட கூடுதல் அதிகாரம்தான், எஸ்மா அல்லது டெஸ்மா சட்டத்தின் சிறப்பு அம்சம். தபால், போக்குவரத்து, தொலைபேசி, பாதுகாப்பு, உணவுப்பொருள் கெ £ள்முதல் மற்றும் விநியோகம், பால் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளின் கீழ் வருகின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதும் அல்லது கூடுதல் நேரம் பணியாற்ற மறுப்பதும்கூட எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும். இந்த சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமலேயே, கைது செய்யவும் முடியும்.

கடந்த சில மாதங்களுக்கு முன், முதுநிலை மருத்துவப்படிப்புகளில் இட ஒதுக்கீடு கோரி, அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், போராட்டக்குழுவுடன் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அல்லது தொடர்ந்து போராடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தது.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதற்கு மத்தியில் உள்ள பாஜக அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டாது. அதனுடன் எல்லா வகையிலும் இணைந்து செயல்பட தமிழக அரசு தயாராகிவிட்ட நிலையில், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாமல் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் வரை மேலும் காலம் கடத்தவே முயற்சிக்கும். மேலும், ஏற்கனவே 3.50 லட்சம் கோடி ரூபாய்க்குமேல் கடனில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு, அரசு ஊழியர்களின் பணப்பலன் சலுகைகளை உடனடியாக அறிவிப்பதிலும் தயக்கம் இருப்பதாக தெரிகிறது.

இப்படியொரு இக்கட்டான நிலையில், வேறு வழியின்றி எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் தமிழக அரசு தயங்காது என்றே கூறப்படுகிறது. வரும் 24ம் தேதி முதல் அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு முன்பாக, ஜாக்டோ&ஜியோவின் மு க்கிய தலைவர்களையாவது எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் மூலம் கைது செய்ய உத்தேசித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை மீறி போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.