Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

நதிகள் இணைப்புக்காக வீடியோவில் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்னைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

தமிழக அரசியல் களத்தை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இரண்டு காலக்கட்டங்களாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களிடம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர் மறைந்தபோதுகூட, அடுத்தது யார்? என்பதில் நீண்ட குழப்பங்கள் ஏற்படவில்லை. வி.என்.ஜானகியை ஆதரித்தவர்கள்கூட விரைவிலேயே ஜெயலலிதா அணியில் இணைந்து கொண்டனர். இப்போதைய நிலை அப்படி இல்லை.

அடுத்து யாரெல்லாம் அரசியல் களத்திற்கு வரலாம் என்ற பட்டியல் போட்டால் அதிலும் சினிமாக்காரர்களே முதல் வரிசையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விஷால், சூர்யா இப்படி நீள்கிறது பட்டியல். 100 படங்களைக் கடந்த முன்னணி நடிகர்களுக்கு இயல்பாகவே சினிமாவில் ஒருவித தொய்வு ஏற்படும். அப்போதுதான் நடிகர்கள் அரசியல் புகலிடம் தேடுவார்கள். இப்போது, 50 படங்களைத் தாண்டுவதே சவால் எனும்போது, இருக்கும் பப்ளிசிட்டியை அரசியலில் முதலீடாக்குவதுதானே உத்தமம் என்ற முடிவுக்குக் கூட சில நடிகர்கள் வந்திருக்கலாம்.

அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் ரேஸில் இப்போது கமல் முன்னணியில் இருக்கிறார். மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை கமல்ஹாசன், தனக்கு கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளிலும் முன்வைக்கிறார். பிக்பாஸ் மேடையைக்கூட அவர் விட்டு வைப்பதில்லை. ”நாம கமல் சார யூஸ் பண்ணலாம்னு நினைச்சா… கமல் சார் நம்மள யூஸ் பண்றாரே!,” என்று விஜய் டிவி மைண்ட் வாய்ஸ் பேசுவதாகக்கூட, நெட்டிஸன்கள் கிண்டலடிக்கின்றனர்.

‘தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போச்சு’, ‘போருக்குத் தயாராக இருங்கள்’ என்றதோடு ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சின் சூடு தணிந்துபோனது. அதன்பின் அவர் ‘காலா’, ‘2.0’ படங்களில் பிஸியாகி விட்டார்.

90கள் வரைக்கும்கூட என்று சொல்லலாம். கமல், ரஜினி ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும்போது இருதரப்பு ரசிகர்களுமே மோதிக்கொள்வதுண்டு. ஆனால், ரஜினி, கமல் ஆகியோர் இன்றுவரை நெருக்கமான நட்பு வளையத்திற்குள்தான் இருக்கின்றனர். அன்றைய ரசிகர்கள் இப்போது 50 வயதைக் கடந்து விட்டார்கள். தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது. அதனால் இருதரப்பு ரசிகர்களும் இப்போது டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் கடுமையாக மோதிக்கொள்கின்றனர்.

ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்து தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ. ஆனால், அவரை பாஜக ஆதரவாளராகவே கமல் ரசிகர்கள் மட்டுமல்ல; மக்களும் கருதுகின்றனர். இதை முடிச்சிட்டும் இணையவாசிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வீட்டுக்கு நடிகர் இன்று (செப். 11) விஜய் நேரில் சென்று, ஆறுதல் கூறியுள்ளார். அந்த படங்களும் இணையதளங்களில் ‘வைரல்’ ஆகியுள்ளது. விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களை வம்பி-ழுக்கும் வகையில் காட்டமான கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளனர்.

அனிதா மரணம் குறித்து ஒரு ரஜினி ரசிகர் டிவிட்டர் பக்கத்தில், ”ஒருவரோட இறப்புல அரசியல் பண்ணி அதுல நாங்க தைரியமானவங்கனு காட்டிக்கிற கீழ்த்தரமான நெஞ்சம் எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இல்லை,” என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ”நீட்ட பத்தி ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ஒரு வார்த்தைகூட பேசல? மோடி கோவிச்சுக்குவாரா? எப்படி நாங்க உங்கள தைரியமா அரசியல் பண்ணுவீங்கனு நம்பறது?,” என்று கேட்டுள்ளார்.

”நீங்கள் பாஜக ஆதரவாளர் என்று அறிவோம். சமூகப் பிரச்னைகளுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை ஆதரிப்போம்,” என்று விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

மற்றொரு பதிவில், ”ஜல்லிக்கட்டு, நெடுவாசல், பணமதிப்பிழப்பு, அனிதா மரணம் ஆகிய பிரச்னைகளில் குரல் கொடுக்காமல், நதிகள் இணைப்புக்காக வீடியோ வெளியிட்டதில் நாங்கள் ரொம்பவே விரக்தி அடைந்திருக்கிறோம்,” என்றும் நெட்டிஸன்கள் ரஜினியை விமர்சித்துள்ளனர்.

கமல் ரசிகர்கள் உச்சமாக, ”ஜக்கியின் நதிகள் இணப்புக்கு ஆதரவு வீடியோ வெளியிட்டு பாஜகவுக்கு சொம்படிப்பதைவிட, பிக்பாஸ் மேடையில் அரசியல் பேசுவதில் தவறொன்றும் இல்லை,” என்று சுடச்சுட பதிலளித்துள்ளனர். அவருடைய ரசிகர்கள், கமல் அரசியலுக்கு வந்து, எந்த தொகுதியில் நிற்பார் என்பது வரைக்கும்கூட சமூகவலைத்தளங்களில் சர்வே செய்து வருகின்றனர்.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வரும் முன்பே, அவருடைய ரசிகர்கள் காரசாரமான விமர்சனங்களால் சமூக வலைத்தளங்களை ரொம்பவே சூடாக வைத்திருக்கின்றனர்.

– பேனாக்காரன்.