Sunday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

பளபளவென்று கண்ணாடி போல மின்னும் சாலைகள், கைகளால் துடைத்துவிட்டு சாலையிலேயே சோறள்ளிப் போட்டு சாப்பிடலாம்; எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை; மூடப்பட்ட சாக்கடைக் கால்வாய்; வீடுகள்தோறும் கழிவறைகள் என்றெல்லாம் பாராட்டலாம்தான். ஆனால், நிலைமை அப்படி இல்லையே!

தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் பிறந்த ஊரை மட்டும் தரம் உயர்த்தாமலா இருப்பார்? என்று எல்லோருமே சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்கிறது.

குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் இருக்கும் வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். அவருடைய வாழ்வின் தொடக்கப் பகுதி அங்குதான் கழிந்தது.

பிரதமரின் சொந்த ஊர் என்பதால், அதுவும் டீ விற்ற ஒருவர் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கிறார் என்பதால் வாட்நகரை சுற்றுலாத்தலமாக வளர்த்து எடுக்கின்றனர்.

வாட்நகரில் ரோஹித் வாஸ் என்ற பகுதி உள்ளது. அங்கு ஒடுக்கப்பட்ட மக்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர். அந்த இடத்திற்குச் சென்றாலே நம்முடைய ஸ்மார்ட் மொபைல் ஃபோனில், “நீங்கள் வாட்நகர் வைஃபை மண்டலத்தில் நுழைந்துள்ளீர்கள்” என்ற குறுஞ்செய்தி வந்து விழும்.

குஜராத் மாநில அரசு பொது வைஃபை வசதி வழங்குகிறது. உண்மையில், அந்த சேவை அங்கு சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், தூய்மை இந்தியாவுக்கு வைஃபை வசதி போதாதே.

ஆனால், கழிப்பறை வசதி பற்றி கேட்டால்தானே மோடியின் கிராமம் பற்றிய பவிசு தெரியவரும். அந்தப் பகுதியில் ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. அந்த மைதானம்தான் அங்குள்ளவர்களின் திறந்தவெளி கழிப்பறை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள்கூட அந்த மைதானத்தில்தான் ‘ஒண்ணுக்கு’ ‘ரெண்டுக்கு’ எல்லாமே என்கிறார்கள்.

ஆண்களுக்கும் அதுபோல் திறந்தவெளி மைதானம் இருக்கிறது. அவர்களுக்கும் அதுதான் திறந்தவெளி கழிப்பறை.

சாக்கடை கால்வாய்களைப் பொருத்தவரை தமிழ்நாடு போலதான். வாட்நகரிலுள்ள ரோஹித் வாஸில் சாக்கடைக் கால்வாய்கள் எல்லாம் திறந்தே காணப்படுகின்றன.

“சிறிய குழந்தைகளும், இளம் பெண்களும் மைதானத்திற்கு சென்று திறந்தவெளியில்தான் மலம் கழிக்க வேண்டும். எங்களுக்கு வாழ்வதற்கு வீடு இல்லை. எங்களுக்கு யாரும் வீடுகள் வழங்கவில்லை. கழிவறைகள் பற்றியும் யாரும் கேட்பதில்லை. தினமும் நாங்கள் திறந்தவெளியில்தான் மலம் கழித்து வருகின்றோம்” என்கிறார் தான்ஷா பென் என்ற பெண்மணி.

தான்ஷா பென் வீடு அருகில் வசிக்கும் நிர்மலா பென் கூறுகையில், ”வாட்நகரவாசிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நரேந்திர மோடி அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எங்களுடைய வீடுகள் கூரையுடனும், தனிநபர் கழிப்பறை வசதியுடனும் இருக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை” என்றார்.

இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி குஜராத் சென்ற பிரதமர் மோடி, அப்படியே சொந்த ஊரான வாட்நகருக்கும் சென்றுவிட்டு வந்தார்.

அதைப்பற்றி நிர்மலா பென் கூறுகையில், “இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வர இருப்பதால், அவருக்கு எங்களைப் பற்றியும் சொந்த ஊர் மீதும் ஞாபகம் வந்திருக்கலாம். ஆனால, எனக்குத் தெரிந்து, இத்தனை வருடங்களாக எங்களுடைய பிரச்சனைகளைக் யாருமே வந்ததில்லை,” என்றார் விரக்தியாக.

வாட்நகர் பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுமார் 5500 குடும்பங்கள். அவற்றில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது தெரியவருகிறது. இந்தப் பகுதிகளில் தலித் மெஹல்லாஸ் சமூகத்தவர் மட்டுமின்றி, ரோஹித் வாஸ், ஓட் வாஸ், போய்வாஸ், தாக்குர் வாஸ், தேவிபூஜாக் வாஸ் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் விளிம்பு நிலையில்தான் இருக்கிறார்கள்.

திறந்தவெளி சாக்கடை, தூர்வாறப்படாத வடிகால்கள், சிதிலமடைந்த சாலைகள் என அங்கும் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஒரே அறையைக் கொண்ட வீடுகளும் கணிசமாக இருக்கின்றன. அந்த வீட்டின் முன்பாகவே பெண்கள் துணிகளை துவைத்து, அழுக்கு நீரை தெருவிலேயே ஊற்றி விடுகின்றனர்.

டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி, அதிநவீன மருத்துவ வசதி, இவற்றுடன் வாட்நகரை வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டதாக நடுவண் அரசு அறிவித்தது.

இந்த நிதியில்தான், ரூபாய் 450 கோடியில் வாட்நகரில் பல்சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை கட்டியமைப்பதற்கான லட்சிய திட்டமும் உள்ளடங்குகிறது.

இதுபோன்ற அறிவிப்புக்கள் எல்லாம் சிவப்பு தகர டப்பாவில் தண்ணீரை கொண்டு சென்று, தினமும் அதிகாலையில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் 70 வயதான மணி பென்னின் வாழ்வில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.

ரோஹித் வாஸ் மொஹல்லாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்று மலம் கழிப்பதற்காக இருக்கும் இரண்டு திறந்தவெளி மைதானங்கள், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் ஊரக இந்தியாவில் கழிவறைகளை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த கிராமத்தை சென்றடையவில்லை என்பதற்கான தெளிவாக சாட்சியமாக உள்ளது.

வாட்நகர் பற்றி மத்திய அரசு தெரிவிக்கும் தகவல்கள்கூட அங்குள்ள மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. அங்குள்ள பெண்கள் ஏக்கத்தோடு வேண்டிக் கொண்டதெல்லாம், தங்களுக்கு ஒரு கான்கிரீட் வீடும் கழிப்பறையும்தான் என்றார்கள்.