Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

 

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று விவசாயி அருள்வாக்கு கூறினார்.

 

சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 36.3 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலை வழித்தடம் அமைகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் நிலத்தை விட்டுத்தர மறுப்பதுடன், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

 

மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மனிடம் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தல், கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம், அம்மனுக்கு பொங்கல் வைத்தும் என பல்வேறு நூதன வழிமுறைகளில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 21, 2018ம் தேதி உத்தரவிட்டது. செப்டம்பர் 11ம் தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

 

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், தொடர்ந்து குலதெய்வத்திடம் முறையிட்டதால்தான் இப்படியொரு சாதகமான தீர்ப்பு வந்ததாகவும் கருதிய மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் புதன்கிழமை (ஆகஸ்ட் 22, 2018) மாலை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் பொங்கல் படையலிட்டு நன்றிக்கடன் செலுத்தினர்.

 

முன்னதாக அம்மனுக்கு பால், திருநீறு, மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தினர். பின்னர் பொங்கல், சுண்டல், வாழைப்பழங்கள், தேங்காய் ஆகியவற்றை படையலிட்டு வழிபட்டனர்.

இந்நிலையில், பூசாரியும் விவசாயியுமான முருகேசனுக்கு திடீரென்று அருள் வந்து ஆடினார். அப்போது அவர், ”உங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும். தீர்ப்பு வருவதற்குள் தினமும் எனக்கு விளக்கு பூஜை ஏத்துங்க. உங்களுக்கு நல்லது நடக்க வைப்பேன்…” என்று அருள்வாக்கு கூறினார்.

 

அனைத்து விவசாயிகளுக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

– ஞானவெட்டியான்.