Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீதிமன்றம் தடை: ‘எட்டு வழிச்சாலை’ விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

 

எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக மறு உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் நேற்று விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே சாலை மார்க்கமாக மூன்று வழித்தடங்கள் உள்ள நிலையில், புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் பெயரில், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் திட்டப்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களின் ஊடாக 277.3 கி.மீ. தொலைவுக்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக சேலம் ஏற்காடு, திருவண்ணாமலையில் உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்பட மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 90 சதவீதம் நிலங்கள், தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் ஆகும். இதனால், சாலைப் பணிக்காக விவசாய நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என சேலம் மாவட்ட விவசாயிகள் கடுமையாக அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஆனால் காவல்துறையினரை ஏவி அப்பாவி விவசாயிகளை அராஜகமாக கைது செய்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

 

இந்த திட்டத்தை எதிர்த்து, தர்மபுரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் மற்றும் சில விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத்தடை விதித்து இன்று (ஆகஸ்ட் 21, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு காட்டும் அவசரத்தை, ஆக்கிரமிப்பாளர்கள், விதிகளை மீறி பேனர்களை வைப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டலாமே என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

பன்னீர்செல்வம்

உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டதும் சேலம் மாவட்டத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் பகுதிகளில் கோயில் திடலில் கேக் வெட்டியும், ஊர் மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

மின்னாம்பள்ளியில் விவசாயிகள் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் திடலில் இன்று மாலையில் கூடினர். அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி, எலுமிச்சம் பழங்கள் வைத்தும் வழிபட்டனர். பின்னர் கோயில் திடலில் கேக் வெட்டி கொண்டாடினர். ஒருவருக்கொருவர் லட்டு ஊட்டியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

இதுகுறித்து பன்னீர்செல்வம் என்ற விவசாயி கூறுகையில், ”எங்களுக்குச் சொந்தமாக நாலேமுக்கால் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் ஆண்டுக்கு மூன்று போகம் நெல் அறுவடை செய்கிறோம். இது தவிர தென்னை, மா, வாழை ஆகியவற்றையும் பயிர் செய்துள்ளோம். இந்நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்தால் எங்களுடைய 3 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகிறது.

மணிகண்டன்

இந்த சாலை வந்துவிட்டால் எஞ்சியுள்ள விவசாய நிலத்தை வைத்துக்கொண்டு அதில் விவசாயமும் செய்ய முடியாது. எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழில் தெரியாது. இந்த நிலத்தை நம்பித்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி என்று பண்ண வேண்டும். இதை நம்பி ஏராளமான விவசாயக் கூலித்தொழிலாளர்களும் உள்ளனர்.

 

அரசாங்கம் கொள்ளைக்காரர்கள்போல் எங்களிடம் அத்துமீறி நிலத்தைப் பறிக்க முயல்கிறது. விவசாய குடும்பத்தில் இருந்து வருவதாகச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருநாளாவது வயலில் இறங்கி மண்வெட்டி பிடித்திருந்தால் எங்களின் கஷ்ட நஷ்டம் புரிந்திருக்கும்.

அமுதா

தமிழக அரசுக்கு விவசாய நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்த உரம் இன்று 1250க்கு மேல் உயர்ந்து விட்டது. அதன் எடையும் 5 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடுபொருள்களின் விலையும் உயர்ந்து விட்டது. இந்த நிலையில் எங்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் விவசாய நிலத்தையும் பறித்துக்கொண்டால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும்,” என்றார்.

 

விவசாயிகள் மணிகண்டன், வீரமணி, வடிவேல், அமுதா ஆகியோர் கூறுகையில், ”எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடைதான் விதிக்கப்பட்டு உள்ளது. சாமான்ய மக்களுக்குப் பயன்படாத இந்த திட்டத்தையே அரசு முற்றிலும் கைவிட வேண்டும். அல்லது இத்திட்டத்திற்கு நீதிமன்றம் நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

வடிவேல்

விவசாயிகளையும் விளை நிலங்களையும் அழித்துவிட்டு பசுமைவழி விரைவுச்சாலைத் தேவையா? என்பதை மத்திய, மாநில அரசுகள் யோசிக்க வேண்டும். முதல்வர எடப்பாடி பழனிசாமியின் உடலுக்குள் ஜெயலலிதாவின் ஆன்மா இருப்பதாக அமைச்சர் உதயகுமார் சொல்கிறார். ஜெயலலிதா இருந்தவரை விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியை, கார்ப்பரேட் முதலாளிகளின் ஆன்மாதான் ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் அவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்,” என்றனர்.

 

– நாடோடி.