Sunday, January 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

கொரோனா வைரஸ்,
உலகையே ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கிறது. கடந்த மூன்று
மாதங்களாக உலகம் முழுவதும்
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி
வரும் இந்த வைரஸ் எங்கிருந்து,
எதிலிருந்து பரவியது என்பது
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும்
ஆராய்ச்சி அளவிலேயே
இருக்கின்றன.

 

இன்றைய நிலையில்,
211 நாடுகளில் கொரோனா
வைரஸ் தாக்கம் உள்ளதாக
சொல்கிறது உலக சுகாதார
நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி
நிலவரப்படி, உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ் தொற்றால்
12 லட்சத்து 14466 பேர்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.
67 ஆயிரத்து 767 பேர் பலியாகி
உள்ளனர். இத்தாலி, சீனா,
அமெரிக்கா ஆகிய நாடுகள்
பெரும் இழப்பைச் சந்தித்து
வருகின்றன.

கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால் 111 பேர் இறந்துள்ளனர். ஆரம்பத்தில், இந்த வைரஸின் பரவும் வேகம் நிதானமாக இருந்தாலும், கடந்த பத்து நாள்களில் இதன் தாக்கம் இந்தியாவிலும் வேகமெடுத்துள்ளன என்பது உண்மை. அடுத்த பதினைந்து நாள்களில் கொரோனா தொற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, கொரோனா பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருவது வேறு மாதிரியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது ஒட்டுமொத்த சமூகத்தளத்திலும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

உலகின் பல நாடுகளில் மூன்று வாரத்திற்கு மேலாக நீடித்து வரும் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பாக கணவன், மனைவி இடையேயான சமூக விலகல் மட்டுமின்றி மனதளவிலான விலகலும் அதிகரித்து வருவதாக ஐ.நா. அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது. ஊரடங்கு மற்றும் சமூக விலகலால் வழக்கம்போல் பெரிதும் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

 

இது தொடர்பாக
ஐ.நா. பொதுச்செயலாளர்
அன்டோனியோ கட்டரெஸ்
அண்மையில் ஒரு
காணொலிப்பதிவை
வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில்,
”கொரோனா வைரஸ் தொற்று
நோயைக் கட்டுப்படுத்தும்
அதே வேளையில், ஊரடங்கினால்
வீட்டிலேயே இருக்கும்
பெண்களைப் பாதுகாப்பதும்
முக்கியம். பெண்கள் மற்றும்
சிறுமிகளுக்கு எதிரான
அச்சுறுத்தல்கள் குடும்ப
உறுப்பினர்களிடம் இருந்தே
அதிகரித்துள்ளன.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் அச்சுறுத்தல், துன்புறுத்தல் புகார்களும் வருகின்றன. தங்கள் சொந்த வீடுகளில், இதுபோன்ற குடும்ப வன்முறை நிகழ்வுகள் நடப்பதால், பெண்கள் மன ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

 

கடந்த வாரங்களில் ஏற்பட்ட பொருளாதார, சமூக அழுத்தங்களால் அச்சமும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பெண்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இரு க்கிறோம்.

 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்துவதோடு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் அனைத்து நாடுகளின் அரசாங்கங்களையும் கேட்டுக் கொள்கிறேன். எனவே, பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பது அவசியம்,” என்கிறார் அன்டோனியோ கட்டரெஸ்.

 

பிரான்ஸ், ஆஸ்திரேலியா
நாடுகளில் வழக்கத்தை விட
தற்போது இணையங்களில்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
குறித்த தேடுதல் 75 சதவீதம்
அதிகரித்துள்ளதாகவும் மற்றொரு
அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்
சொல்கின்றன.

 

இந்திய பெண்கள் ஆணையம், இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் வாரத்திற்குள்ளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு தகவலையும் தெரிவித்துள்ளது.

 

மனச்சிக்கல்களில் இருந்து விடுபட, உரிய ஆலோசனைகள் வழங்க மாவட்டந்தோறும் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் என்பது போர்க்களத்தில் இல்லாமல் வீட்டில் இருந்தே போராட வேண்டியதிருக்கிறது. அதனால் வீடுகளிலும் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களிடம் புரிந்து கொள்ளுதலும், சகிப்புத்தன்மையும் அவசியமாகிறது.

 

– பேனாக்காரன்

Leave a Reply