Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

கொரோனா தொற்று
பரவாமல் தடுக்க
பொது இடங்களில்
நடமாடுவோர் கண்டிப்பாக
முகக்கவசம் (மாஸ்க்)
அணியவேண்டும் என்றும்,
இல்லாவிட்டால் அந்த
இடத்திலேயே 500 ரூபாய்
உடனடி அபராதம் விதிக்கப்படும்
என்றும் சேலம் மாநகராட்சி
அறிவித்துள்ளது. இந்த
புதிய உத்தரவு, வியாழன்
(ஏப். 16) முதல் அமலுக்கு
வருகிறது.

 

கொரோனா வைரஸ்
நோய்த்தொற்றுக்கு தடுப்பு
மருந்துகள் கண்டுபிடிக்கும்
ஆராய்ச்சிகள் ஒருபுறம்
தீவிரமாக நடந்து வந்தாலும்,
இப்போதைக்கு தனிமைப்படுத்தலும்,
சமூக விலகல் மூலம் மட்டுமே
வைரஸ் பரவலில் இருந்து
ஓரளவு தற்காத்துக் கொள்ள
முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்காகவே நாடு முழுவதும்
ஊரடங்கு உத்தரவும்
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக ஏப்ரல் 14
மாலை வரை
அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு,
தற்போது மே 3ம் தேதி வரை
இரண்டாம் கட்டமாக
நீட்டிக்கப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டத்தைப்
பொருத்தவரை ஏப்ரல் 15ம்
தேதி வரை மொத்தம் 19 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று
இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு
உள்ளது. அவர்களுக்கு சேலம்
அரசு மருத்துவமனையில்
தனிமை வார்டில் வைத்து
சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.

சேலம் மாநகரில்,
எங்கெங்கெல்லாம்
நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள்
இருந்தார்களோ அவர்கள்
வசிக்கும் 70 இடங்கள்
கண்டறியப்பட்டு, அவை
‘ஹாட் ஸ்பாட்’ ஆக
அறிவிக்கப்பட்டு உள்ளன.
தடை செய்யப்பட்ட
‘ஹாட் ஸ்பாட்’ இடங்களுக்குள்
வெளியாள்கள் செல்ல முடியாது.
அதேபோல் அங்கிருந்தும்
ஒருவரும் ஊரடங்கு முடியும்
வரை வெளியேற முடியாது.
அத்தியாவசிய பொருள்களை
அவர்களின் இருப்பிடத்திற்கே
சென்று வழங்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன.

 

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், பொது வெளியில் நடமாடும் நபர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சதீஸ், புதன்கிழமை (ஏப். 15) தெரிவித்துள்ளார்.

 

ஒருவர் இருமும்போதோ, தும்மும்போதோ வெளிப்படும் கண்ணுக்குத் தெரியாத நீர்த்திவலைகள் மூலமும் கொரோனா வைரஸ் கிருமிகள் அருகில் இருப்போருக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தி வருகிறது தமிழக சுகாதாரத்துறை. இதற்கென பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்யப்படும் மாஸ்க் மட்டுமின்றி கைக்குட்டை, துப்பட்டா, துண்டு ஆகியவற்றைக் கொண்டும் மாஸ்க் போல அணிந்து கொள்ளலாம்.

 

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் கூறுகையில், ”சேலம் மாநகரில் இனி மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே (ஸ்பாட் ஃபைன்) 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏப்., 16ம் தேதி முதல் இந்த புதிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். மாஸ்க் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சேவைகள், உணவுப்பொருள்களை வழங்க வேண்டும் என்று காய்கறி சந்தைகள், மளிகை கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்க்குகள், பேக்கரிகள், இறைச்சிக்கடைகளின் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது,” என்றார்.

 

சென்னை மாநகராட்சியிலும் மாஸ்க் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தற்போது சேலத்திலும் அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், பொது வெளியில் ஒருவருக்கொருவர் எப்போதும்போல் 3 அடி தொலைவு சமூக விலகல் விதியையும் பின்பற்ற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

………