சேலம் மாநகராட்சியில் ஐஏஎஸ் அதிகாரி, பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கூட்டாக நடத்திய பணி நியமன ஊழல் விவகாரத்தில் அவர்களின் ஒட்டுமொத்தத் தலைகளும் உருளப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில்,
ஸ்கில்டு அசிஸ்டன்ட் (கிரேடு – 2) எனப்படும்
இரண்டாம் நிலை செயல்திறன் உதவியாளர்
காலியிடங்கள் கடந்த 2022ம் ஆண்டு
நிரப்பப்பட்டது. இந்தப் பிரிவில்
மொத்தம் 6 காலியிடங்கள் இருந்தன.
இதற்காக, 9.12.2022ம் தேதி நேர்காணல் நடந்தது.
மொத்தம் 55 பேர் நேர்காணலில்
கலந்து கொண்டனர். குறைந்தபட்சக்
கல்வித்தகுதி ஐ.டி.ஐ. படிப்பில்
தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இப்பணிக்கான ஊதிய விகிதம்
19500 – 62500 ரூபாய்.
குறைந்தபட்ச கல்வித்தகுதி,
நல்ல சம்பளம், உள்ளூரிலேயே வேலை என்பதால்,
6 செயல்திறன் உதவியாளர்
பணியிடங்களையும் சேலம் மாநகராட்சியில்
பணியாற்றும் ஊழியர்களும்,
ஆளும் திமுக புள்ளிகளும்
ஒட்டுமொத்தமாக கபளீகரம்
செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்துதான் பல்வேறு தகிடு தத்தங்கள்
அடுத்தடுத்து அரங்கேறத் தொடங்கின.
அதன்படி, சேலம் மாநகராட்சியில்
அப்போது செயற்பொறியாளராக இருந்த
செல்வராஜின் மகன் கனிஷ்ஹரன்,
மேயர் ராமச்சந்திரனின் அலுவலக
உதவியாளராக பணியாற்றி வந்த
அனந்தசயனத்தின் மகன் ஹரீஷ்,
அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில்
‘பில்’ கலெக்டராக பணியாற்றி வரும்
குப்புசாமியின் மகன் தமிழரசன்;
திமுக பிரமுகர்களான சண்முகத்தின்
மகன் ராமச்சந்திரன், அரியானூர் மோகனின்
மகன் ஞானேஸ்வரன், முன்னாள் ‘பில்’ கலெக்டர்
சக்திவேலின் உறவினர் ஜெகதீஷின் மகன் ஸ்ரீதரன்
ஆகிய 6 பேரும் நேர்காணலுக்கு முன்பே
செயல்திறன் உதவியாளர் பணிக்கு
தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
இதற்காக ஒவ்வொருவரிடமும்
40 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம்
2.40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு,
ஆளுங்கட்சி புள்ளிகளிடம்
கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பணம் கைமாறியதை அடுத்து,
காதும் காதும் வைத்த மாதிரி
தில்லுமுல்லு வேலைகள் நடந்தன.
ஆளுங்கட்சிப் புள்ளிகளின் அழுத்தம்
காரணமாக அப்போது சேலம் மாநகராட்சி
ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ் ஐஏஎஸ்,
பணி நியமன கோப்புகளில் கையெழுத்துப்
போட நிர்ப்பந்தம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, சேலம் மாநகராட்சி
வட்டாரத்தில் விசாரித்தபோது,
”குறுக்கு வழியில் பணி நியமன
ஆணை பெற்ற 6 பேருமே பி.இ.,
தேர்ச்சி பெற்றவர்கள். என்றாலும்,
அவர்களில் ஒருவரைத் தவிர மற்ற
5 பேரும் அடிப்படைத் தகுதியான
ஐ.டி.ஐ. படிப்பை தேர்ச்சிப் பெறவில்லை.
அடிப்படைக் கல்வித்தகுதி இல்லை என்ற
ஒரே காரணமே அவர்கள் பணி
நியமனம் பெறுவதற்கான
தகுதியை இழந்து விடுகின்றனர்.
மாநகராட்சியில் பணியமைப்புப் பிரிவில்
முக்கியப் பொறுப்பில் உள்ள சாரதியான ஒருவர்,
அடிப்படைக் கல்வித்தகுதி இல்லாத 5 பேருக்கும்
திருவாரூர் மற்றும் சேலத்தில் உள்ள
தனியார் ஐ.டி.ஐ.,க்களில் குறுகிய கால
பயிற்சியை முடித்ததுபோல் போலி சான்றிதழ்
பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதற்காக அவரை சம்பந்தப்பட்டவர்கள்
‘சிறப்பாக கவனித்துள்ளனர்’.
கல்விச்சான்றிதழ்களின் மெய்த்தன்மையை
சரிபார்க்க வேண்டியவர்களே
குற்றத்திற்குத் துணையாக இருந்ததால்
இந்த போலி சான்றிதழ் விவகாரமும்
அப்படியே அமுங்கிவிட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நேர்காணல் நடந்த காலக்கட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்துறை வெளியிட்ட புதிய அரசாணை 152ன் படி, மாநகராட்சிகளில் செயல்திறன் உதவியாளர் பணியிடங்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டு விட்டன. மேலும், 6 பேர் நியமனத்தில் இனச்சுழற்சி விதியும் பின்பற்றப்படவில்லை. இவ்வாறு, 6 பேர் பணி நியமனத்தில் அனைத்து விதிகளும் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன,” என்கிறார்கள் சேலம் மாநகராட்சியில் உள்விவகாரங்களை அறிந்த ஊழியர்கள்.
இந்த விவகாரம் வெளியே கசிந்ததை அடுத்து, விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்ட கனிஷ்ஹரன், ஹரீஷ், தமிழரசன், ராமச்சந்திரன், ஸ்ரீதரன், ஞானேஸ்வரன் ஆகிய 6 பேரையும் அப்போது இருந்த மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
இந்த பணி நியமன ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில், பணி நியமன விதிகள் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அடிப்படையான விவரங்களைக்கூட சரிபார்க்கத் தவறியதாக பணியமைப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, உதவி ஆணையர்கள் சாந்தி, சாய்லட்சுமி, இளநிலை உதவியாளர்கள் உதயநந்தினி, விஜயலட்சுமி, உதவியாளர் மாதவன், நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.
இவர்களில், சேலம் மாநகராட்சி பணியமைப்புப் பிரிவு கண்காணிப்பாளரான பார்த்தசாரதி, செயல்திறன் உதவியாளர் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் இருந்து என்.ஓ.சி. பெறவில்லை என்பதில் இருந்துதான் இந்த ஊழலே தொடங்குகிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர், கடந்த ஜூலை மாதம் தாம்பரம் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, பணி நியமன ஊழல் விவகாரத்தை அப்படியே அமுக்கிவிடலாம் என்றும் சிலர் திட்டமிட்டு ஆளுங்கட்சி மேலிடம் வரை காய்களை நகர்த்தத் தொடங்கினர். தற்போது, தமிழக உள்ளாட்சிகள் நிர்வாகத்துறை ஆணையர் சிவராசு ஐஏஎஸ் அதற்கும் அதிரடியாக ஆப்பு வைத்துவிட்டார்.
இது ஒருபுறம் இருக்க, செயல்திறன் உதவியாளர் பணிக்கான நேர்காணலின்போது தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஆத்தூர் ஆர்.செந்தில்குமார், கூத்தாப்பிள்ளை செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் சிற்றுளி செந்தில் என்கிற எஸ்.செந்தில்குமார், புவனேஸ்வரி மற்றும் அப்போதைய சேலம் மாநகராட்சி ஆணையரும், தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியருமான கிறிஸ்துராஜ் ஐஏஎஸ் ஆகியோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நகராட்சிகள் நிர்வாக ஆணையரகம் முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே, செயல்திறன் உதவியாளர் பணி நியமனம் பெற்றவர்களுள் ஒருவரான ஹரீஷ், பணி நீக்க உத்தரவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஜூலை 22ஆம் தேதி ‘டிஸ்போஸ்’ செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குநர் சிவராசுவிடம் கேட்டபோது, ”சேலம் மாநகராட்சியில் நடந்த பணி நியமன ஊழல் குறித்து, சம்பந்தப்பட்ட பணியமைப்புப் பிரிவு ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இந்த புகார் குறித்து இலஞ்ச ஒழிப்புப்பிரிரு காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
ஆறு பேர் பணி நியமனத்தின்போது தேர்வுக்குழுவில் இருந்த பொறியாளர்கள் மற்றும் அப்போதைய ஆணையர் கிறிஸ்துராஜ் ஐஏஎஸ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விரைவில் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களில் ஒரு சிலர், தங்களை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் இனி ஒருபோதும் பணி வாய்ப்புப் பெற முடியாது,” என்றார்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ”செயல்திறன் உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதால் இப்போது அதைப்பற்றி எதுவும் கூற முடியாது,” என பட்டும் படாமலும் சொன்னார்.
சேலம் மாநகராட்சியில் அப்பட்டமாக நடந்த பணி நியமன ஊழலுக்கு துணை போனவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்கக்கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொசுறு: செயல்திறன் உதவியாளர் பணிக்காக ஆளுங்கட்சி மேலிடத்திடம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 40 லட்சம் ரூபாயில், 6 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு, மேலிடம் தரப்பில் இருந்து 50 சதவீத தொகை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாகச் சொல்கின்றனர். மேலும், இதைப்பற்றி இனி எங்கேயும் வாய் திறக்கக்கூடாது என்று அந்த முக்கியப்புள்ளி எச்சரித்தும் அனுப்பினாராம்.
ஊழல் யார் செய்தால் என்ன? ‘நேருக்கு நேராக’ கேட்டுவிடுவதுதானே நல்லாட்சிக்கு அழகு!
– பேனாக்காரன்