சேலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எப்போது பெரியார் என்ற கலகக்காரரின் பெயரைச் சூட்டினார்களோ அப்போது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
வாழ்நாளெல்லாம்
சாதி ஒழிப்பிற்காகப் போராடி வந்த
பெரியாரின் பெயரில் அமைந்த
பல்கலையில் குறிப்பிட்ட
சில சாதிகளின் ஆதிக்கம்
தொடர்ந்து வருகிறது.
திமுக, அதிமுக எந்த அரசு
ஆட்சியில் இருந்தாலும் சாதியவாதம்
மேலோங்கி இருக்கிறது.
குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில்
கொங்கு வெள்ளாள கவுண்டர்
சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன்,
குழந்தைவேல், ஜெகநாதன் ஆகியோர்
அடுத்தடுத்து துணைவேந்தர்களாக
நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் குழந்தைவேல், ஜெகநாதன்
ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ்
பின்புலத்தோடு துணைவேந்தர்
ஆனவர்கள் என்ற பேச்சும் உண்டு.
இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன்,
கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி
பெரியார் பல்கலையில் பொறுப்பேற்றார்.
அவரின் பதவிக்காலம் கடந்த
ஜூன் 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், அவருக்கு மேலும் 11 மாதங்களுக்கு,
அதாவது 2025 ஜூலை 19ம் தேதி வரை
பதவியை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டார்.
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை
அமைச்சர் பொன்முடி,
துணைவேந்தர் ஜெகநாதனுக்கு
பதவி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க மாட்டோம்
என முண்டா தட்டினார். தமிழக அரசு
எதைச் செய்தாலும் அதற்கு
எதிராகச் செய்ய வேண்டும் என்ற
அஜண்டாவோடு இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி,
துணைவேந்தர் ஜெகநாதனுக்கு
பதவி நீட்டிப்பு வழங்கி கச்சிதமாக
காரியத்தை முடித்தார்.
பேரவையில் முழங்கிய பொன்முடி,
அதன்பிறகு விக்கிரவாண்டி
இடைத்தேர்தலில் பிஸியாகி விட்டார்.
அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெகநாதனும், இதே பல்கலையில் நிரந்தர பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேல் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து பல்கலை வளாகத்திலேயே பியூட்டர் பவுண்டேஷன், ஆப்டெக் ஆன் போரம் ஆகிய பெயர்களில் இரு தனியார் நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலையில் தனியார் நிறுவனத்தைத் தொடங்கியது குற்றம் என்று எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தீன்தயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 2.26 கோடி ரூபாயை முறைகேடு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக பெரியார் பல்கலை தொழிலாளர்கள் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பேசுவதற்காக அவர் ஜெகநாதனைச் சந்திக்க சென்றபோது, அவரை சாதிப் பெயரைச் சொல்லி தாக்கியுள்ளார் ஜெகநாதன். இந்த வழக்கில் அவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் கருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
சாதி வன்கொடுமை வழக்கில்
கைதான ஜெகநாதன், சிறைக்கே செல்லாமல்
இரவோடு இரவாக நிபந்தனை
ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சாதி வன்கொடுமை வழக்கு என்பது
கடுமையான வழக்காகும்.
பிணையில் வெளிவர முடியாது.
ஆனால் ஜெகநாதனோ, சிறை வாசலுக்கே
செல்லாமல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜெகநாதன் என்பதால் அவர் விடுவிக்கப்பட்டதன்
பின்னணியில் அந்த ‘ஜெய் ஜெகநாத்’ கூட
இருக்கலாம் என்று அப்போது
ஒரு பேச்சு கிளம்பியது.
இந்த நிலையில்தான் அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம். ஆளுநரைக் கண்டித்தும், ஜெகநாதனை பதவி விலக்கோரியும் பல்கலை வாயில் முன்பு தொழிலாளர்கள் சங்கத்தினர், பூட்டா சங்கத்தினர் ஜூலை 1, 2 தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்து, அவர்கள் நீதிமன்றத்தை நாட இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஜூலை 1ம் தேதி நடப்புக் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கியது. அதனால் துணைவேந்தர் ஜெகநாதன், ஜூலை 2ம் தேதி, பல்கலையில் உள்ள 27 துறைகளிலும் பணியாற்றி வரும் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசினார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்நாளே அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் அனைத்து ஆசிரியர்களும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு லட்சுமி ஸ்வீட்ஸில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டிருந்த தேநீர் / காபி, இனிப்பு, மசால் வடை வழங்கப்பட்டது.
பதிவாளர் பொறுப்பில் உள்ள விஸ்வநாதமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, துணைவேந்தர் ஜெகநாதன் துவக்க உரையாற்ற அழைத்தார்.
பதவி நீட்டிப்புக்குப் பிறகான முதல் சந்திப்பு என்பதால் ஆசிரியர்கள் அவருக்கு வாழ்த்துச் சொல்வார்கள், சால்வை போர்த்துவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சொல்லி வைத்தாற்போல் ஒருவரும் அதைச் செய்யவில்லை. அங்கேயே துணைவேந்தர் அப்செட் என்கிறார்கள்.
அடுத்து, பதவி நீட்டிப்பு உத்தரவு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி சொன்னவர், நேரடியாக பல்கலை விவகாரங்களுக்குள் நுழைந்தார்.
வழக்கம்போல், ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்ற திருக்குறளோடு உரையைத் தொடங்கினார்.
”நடப்புக் கல்வி ஆண்டில்
நூலக அறிவியல் துறையில் இதுவரை
ஒரே ஒரு மாணவர்தான் சேர்ந்துள்ளார்.
கல்வியியல் துறையில் ஒருவர்கூட சேரவில்லை.
மாணவர்களே இல்லாமல் ஆசிரியர்களுக்கு
எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்?
துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்
சரியாக பாடம் நடத்தி இருந்தால்
இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது.
ஆளே இல்லாமல் எதற்காக இந்த
துறைகளை வைத்திருக்க வேண்டும்?
பேசாமல் இந்த துறைகளை மூடி விடலாம்.
அத்துடன் நீங்களும் வீட்டுக்குப்
போய்விட வேண்டியதுதான்.
ஒரு துறை சரியாக இருந்தால் மாணவர்கள் வெளியே அதைப்பற்றி நல்ல விதமாகச் சொல்வார்கள். நமக்கும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கும். ஆனால் அவர்கள் வெளியே வேறு விதமாகச் சொல்லி இருக்கிறார்கள். மாணவர் சேர்க்கை குறைந்ததற்கான காரணங்கள் கண்டறிந்து களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்காக, எல்லா ஆசிரியர்களையும் குற்றம் சுமத்தவில்லை. ‘நாக்’ கமிட்டி வந்தபோது, ஆசிரியர்கள் எல்லோரும் இரவு, பகலாக வேலை செய்ததை நான் மறக்கவில்லை.
ஒரு துறையில், மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் குறைவாக போட்டுள்ளனர். பிடித்த மாணவர்கள், பிடிக்காத மாணவர்கள் என்று பாரபட்சம் பார்க்க வேண்டாம். நாம் மாணவர்களுக்காகத்தான் இருக்கிறோம்.
எல்லா விஷயங்களையும் ஊடகங்களில் தவறாக சித்தரித்து பரப்புவதால் யாருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நம்மை மற்றவர்கள் அசிங்கமாக நினைக்க மாட்டார்களா?
சங்கம் என்று சொல்லிக்கொண்டு ஒருத்தர் மட்டும்தான் இருப்பார் பாருங்க. அவரும், இன்னும் சிலரும் என்னைப் பற்றி தப்பு தப்பாக ஊடகங்களில் பேட்டி கொடுக்கின்றனர். வெளியில் இருந்து மூன்றாம் நபர்களும் தவறான செய்திகளைப் பரப்புகின்றனர்.
தேசிய அளவிலான தர வரிசையில் 70வது இடத்தில் இருந்த பெரியார் பல்கலையை இப்போது 49வது இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம். இனி அதேபோன்ற தர வரிசை கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
ஆசிரியர்கள் மீது புகார்கள் வருவதன் பேரில்தான் விசாரணைக்குழு அமைக்கிறேன். நடவடிக்கை எடுக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எதுவாக இருந்தாலும் நேரில் சொல்லலாம். அதைவிட்டுவிட்டு ஏன் ஊடகங்களில் பேசுகிறீர்கள்? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பேன்.
உதவி பேராசிரியர் ஒருவர் என்னைப் பற்றி ஊடகங்களில் பேட்டி கொடுக்கிறார். அவருடன் சேர்ந்து கொண்டு இன்னும் சிலரும் பேசுகிறார்கள். இத்தனை நடந்தும் ஒருவர்கூட, துணைவேந்தர் தவறானவர் இல்லை என்று சொல்லாதது வருத்தம் அளிக்கிறது.
இன்டர்னல் டெஸ்ட் எல்லாம் ஒழுங்காக நடத்தணும். மதிப்பீட்டுப் பணிகளைச் சரியாக பண்ணுங்க. இன்னும் 11 மாதங்கள் நான் இங்குதான் இருக்கப் போகிறேன். தொடர்ந்து பல்கலை வளர்ச்சிக்கு நிறைய பணிகளைச் செய்வேன். செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஒரு சிலரால் அதில் தடங்கல் ஆகிறது,” என ஆரம்பத்தில் இருந்தே துணைவேந்தரின் பேச்சில் அனல் தெறித்தது.
இதையடுத்து அவர் அரசியல் பிரமுகர்கள் பற்றி குறிப்பிட்டார்.
”சேலத்தில் உள்ள முன்னாள் எம்.பி., ஒருவர் எத்தனையோ பேருக்கு மாணவர் சேர்க்கைக்காக என்னிடம் உதவி கேட்டிருக்கிறார். நானும் சேர்க்கை அனுமதி கொடுத்திருக்கிறேன். ஆனால் நான் கைது செய்யப்பட்டபோது எனக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. அதேநேரம், நாமக்கல்லில் உள்ள முன்னாள் எம்.பி., ஒருவர் எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார்,” என்றார்.
அவர் பெயர்களைக் குறிப்பிடாமல் பேசினாலும், சேலத்தைச் சேர்ந்த அந்த முன்னாள் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் என்றும், நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் என்றும் கிசுகிசுக்கிறார்கள் பேராசிரியர்கள். இப்போதும்கூட அவர் பாஜக பாசத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் கே.பி.ராமலிங்கத்தைப் பற்றி நல்லவிதமாக பேசுகிறார் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
”உங்கள் சொந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். என்னால் முடிந்ததை செய்கிறேன்,” என்று இறங்கி வந்து பேசியபோதும் ஆசிரியர்களிடையே ‘நோ ரியாக்ஷன்’.
மேலும் அவர், ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்ததைக்கூட தவறாக சித்தரித்து விட்டனர். அவருடனான சந்திப்பு யதேச்சையாக நடந்ததுதான். அவரிடம் கூட பெரியார் பல்கலை வளர்ச்சிக்காக உதவி கேட்டு புரபோசல் அளித்திருக்கிறேன்.
ஆனால் இந்த சந்திப்பை, ஊடகங்களில் தப்பு தப்பாக பரப்பி விட்டனர். அப்போதுகூட ஆசிரியர்கள் யாருமே என்னை ஆதரித்துப் பேசவில்லை. ஏன் இந்தப் பல்கலையில் ஆசிரியர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை,” என மீண்டும் புலம்பினார்.
துவக்க உரையின் இறுதிக்கட்டத்தில் அவர், ”நான் இறைவனை நம்பவில்லை. இயற்கையை நம்புகிறேன். இயற்கை என்றைக்குமே பொய் சொல்லாது. அது கண்டிப்பாக நம்மை தண்டிக்கும். கொரோனா ரூபத்தில் இயற்கை எப்படி தண்டித்ததோ, அதுபோல என்னைப் பற்றி தவறாக பேசுபவர்களையும் இயற்கை ஒருநாள் தண்டிக்கும்,” என சாபம் விட்டு எண்டு கார்டு போட்டார் துணைவேந்தர் ஜெகநாதன்.
என்னதான் ‘பஞ்ச்’ வசனத்துடன் உரையை முடித்தாலும், கூட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் யாருமே கைத்தட்டி உற்சாகப்படுத்தவில்லை. எல்லோருமே கடப்பாரையை விழுங்கியவர்கள் போல அமைதியாக அமர்ந்து இருந்தனர்.
பகல் 12 மணிக்குத் தொடங்கிய கூட்டம், 45 நிமிடங்களில் முடிந்தது.
இது இப்படி இருக்க, துணைவேந்தரின் பேச்சுக்கு பேராசிரியர்கள் மத்தியில் சில விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.
”ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவருக்கு ஆளுங்கட்சி சிட்டிங் எம்.பி., ஆக இருப்பவர் எப்படி உதவி செய்ய முடியும்?. அதனால் அந்த முன்னாள் எம்.பி., உதவி செய்யாமல் போயிருக்கலாம். அதையெல்லாம் பொது அரங்கில் ஒரு குறையாகச் சொல்கிறார் துணைவேந்தர்.
மாணவர் சேர்க்கை இல்லாத துறைகளில் ஆசிரியர்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கேட்கிறார்.
அதேநேரம், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த முதல்வர்கள் வெங்கடேஸ்வரன், மருதமுத்து, செல்வவிநாயகம், வெங்கடேசன், கார்த்திகேயன் ஆகியோர் பல்கலை பணிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பல்கலையில் முதல்வர் பணியிடமே இல்லாத நிலையில் அவர்களை சும்மாவே உட்கார வைத்துக்கொண்டு ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டியாக சம்பளம் கொடுத்து வருகிறார். இவர்களில் மருதமுத்து மட்டும் அண்மையில் ஓய்வு பெற்று விட்டார். இதையும் துணைவேந்தர் கவனத்தில் கொண்டு பேசியிருக்க வேண்டும்,” என்கிறார்கள் பேராசிரியர்கள்.
பதவி நீட்டிப்பு பெற்றுள்ள துணைவேந்தர் அடுத்த 11 மாத காலத்தில் பழிவாங்கும் நடவடிக்கையில் அவருக்கு எதிரான பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்வார் என்ற பொருமலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
– பேனாக்காரன்