உதயநிதி, இளைஞர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே?
பழைய மாணவர்கள் பற்றி ரஜினி பேசிய பேச்சுக்கு துரைமுருகன் எதிர்வினையாற்றியது குறித்து அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கடிந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதனால் அவரை குளிர்விக்கவே இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் துரைமுருகன்.
பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது எதைக் காட்டுகிறது?
நடிகர் விஜயை அரசியல் ரீதியாக
அவரை வழிநடத்த சரியான ஆள் இல்லை
என்ற விமர்சனம் கிளம்பிய நிலையில்,
பெரியார் பிறந்தநாளில் அவருடைய
சிலைக்கு மாலை அணிவித்து அரசியல்
களத்திலும் தான் ஒரு கில்லிதான்
என்பதை நிரூபித்திருக்கிறார் தளபதி.
ஏற்கனவே சமூக ஊடகங்களில் விஜயை,
திமுகவின் இணையக்கூலிகள் ஆபாசமாக
அடித்து துவைத்து வரும் நிலையில்,
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது
ஆளும்தரப்பை மேலும் எரிச்சலடைய வைத்திருக்கிறது.
அடுத்து வரும் தேர்தலில் ஆளுங்கட்சி மீதான
அதிருப்தி வாக்குகள் மட்டுமின்றி
திமுகவின் வாக்குகளையும் கபளீகரம்
செய்வதற்கான தொடக்கமாகவே
பெரியார் சிலைக்கு மரியாதை
செலுத்திய செயலைப் பார்க்கிறேன்.
கவிஞர் வைரமுத்து, தன்னிடம் ‘வழிந்த’தாக பாடகி சுசித்ரா பரபரப்பைக் கிளப்பி இருக்கிறாரே?
பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது
பாலியல் புகார் புஸ்தகம் வாசித்தபோதே
திரைத்துரையில் பெரிதாக அவருக்கு
ஆதரவுக்குரல் எழவில்லை.
இப்போது பாடகி சுசித்ராவும்
அவருக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்.
எது எப்படியோ, வைரமுத்துவுக்கு
பேன்ட்டீன் ஷாம்பூதான் பிடிக்கும் என்பது
சுசித்ரா மூலம் தெரிய வந்துள்ளது.
திமுகவின் கூலிகளான கம்யூ.க்களின்
மாதர் சங்கங்கள் எல்லாம் இந்த விவகாரத்தில்
ஆரம்பத்தில் இருந்தே அடக்கி
வாசிப்பது வியப்பளிக்கிறது.
திருமா….?
அறிவாலயத்திற்குள் சிறுத்தைபோல்
சீறிக்கொண்டு போனவர், சிறு பூனைபோல்
வெளியேறினாரே அவரைப்
பற்றியா கேட்கிறீர்கள்?
திருப்பதி லட்டுவில் கலந்த நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலப்படம் செய்திருப்பது தெரிய வந்துள்ளதே?
ஏற்கனவே சிலை திருட்டு,
உண்டியல் உடைப்பு குற்றங்களை
எல்லாம் தடுக்க இயலாத கடவுள்,
கலப்பட நெய்யை மட்டும்
கண்டுபிடித்து விடுவாரா என்ன?
அந்த திருப்பதிக்கே மொட்டை
என்பார்களே அது, இதுதான்.
உதயநிதி துணை முதல்வர் ஆவாரா?
அஜித்குமார் வலிமை படம் நடித்துக் கொண்டிருந்தபோது,
சமூக ஊடகங்கள், பிரஸ் மீட், பொதுக்கூட்டங்கள்,
சாலைப் பயணங்களில் கூட ‘வலிமை அப்டேட்’
என்று நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
உதயநிதி துணை முதல்வர் ஆவாரா?
என்ற வினாவும் அதே நினைவூட்டுகிறது.
நாட்டுக்குத் தேவையானதை மட்டும் பேசுவோம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா சீனிவாசனை நடத்திய விதம் சர்ச்சை ஆகியுள்ளதே?
அது அவரின் அதிகாரத் திமிரைக் காட்டுகிறது.
சீனிவாசன் வைத்த கோரிக்கை மீதான
உள்ளடக்கத்தை விட்டுவிட்டு,
அவரின் சொற்களைப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருந்ததன் விளைவுதான்
நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்குக் காரணம்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்
சீனிவாசனுக்கு திமுகவோ, காங்கிரஸோ
எம்எல்ஏ சீட் கூட கொடுக்கலாம்.
அப்படி நடந்தால் அதற்கு முழு காரணமும்
நிர்மலாவாகத்தான் இருப்பார்.
உயர்கல்வி பெறுவோரில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது திராவிட மாடல் அரசுக்குச் சான்றுதானே?
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக
திமுக, அதிமுக ஆகிய ஆட்சியில் இருக்கின்றன.
இரு திராவிட அரசுகள் கொண்டு வந்த
பல்வேறு நலத்திட்டங்களால் உயர்கல்வி
பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேநேரம், அரசுக் கல்லூரிகளில் போதுமான
உதவி பேராசிரியர்கள் இல்லாமல்
கவுரவ ஆசிரியர்களைக் கொண்டு
ஒப்பேற்றி வருவது திராவிட மாடல்
அரசுக்கு சிறுமை என்பதையும்
மறந்துவிடக்கூடாது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமா?
சாத்தியமே இல்லை என்பது
காவி கும்பலுக்கும் தெரியும்.
ஒரே கட்சி ஆட்சி என்பதும்கூட
பாஜகவின் உள்ளக்கிடக்கை.
இந்தியாவின் பன்முகத்தன்மையை
சிதைக்க நினைக்கும் யாரும் இந்த
வரலாற்றில் இருந்து மறைந்து போவார்கள்
என்பதை ஆர்எஸ்எஸ் கும்பல்
உணரும் காலம் வரும்.
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததும்,
நேர்மையான இயக்கங்கள் இல்லாததும்
பாஜகவை இப்படியெல்லாம்
கொக்கரிக்க வைக்கிறது.
– பேனாக்காரன்