Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை? : மக்கள் மனநிலை என்ன?

 

தமிழகத்தில், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் காலம் கடத்துவதன் பின்னணி என்ன என்பதை உலகறியும். ஒருபுறம் இரட்டை இலை சின்னம் முடக்கம்; மற்றொருபுறம், கட்சிக்குள் பிளவு என தடுமாறிக் கொண்டிருக்கும் அதிமுக, உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லைதான்.

அதிலும், இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலை சந்திப்பது என்பது ஜெயலலிதா அற்ற சூழ்நிலையில் உகந்தது அல்ல. அதனால்தான் பல்வேறு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு, உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்தாமல் ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து வருகிறது ஆளுங்கட்சி.

இட ஒதுக்கீடு பிரச்னையில் முதன்முதலில் நீதிமன்றம் சென்றவர்கள் யாரோ அவர்களால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் உள்ளதாக அதிமுகவினர், திமுகவை பார்த்து சப்பைக்கட்டு வாதம் செய்கிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒரே அணியாக இணைந்த பின்னர், எல்லோருமே யூகித்தபடி அவர்களுடைய அணிக்கே இரட்டை இலை சின்னமும் ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இதன் பின்னணியில் பாஜக மேலிடமோ, பிரதமர் மோடியின் கண்ணசைவுகளோ இல்லை என்று அவர்கள் சொல்வதை நாமும் நம்பித்தொலைப்போம்.

சிபிஐ, வருமாவரித்துறையைப் போல் தேர்தல் ஆணையத்தையும் மோடி அன் கோ கையகப்படுத்திவிட்டனர் என்று சொன்னால், நம்மீது தேச விரோதி முத்திரை குத்துவார்கள்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாளே, ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். தாமரை மலருடன் இலைகள் இணைந்திருப்பது இயற்கையானதுதான் என்றாலும், இலை சமாச்சாரத்தில் பாஜக இல்லவே இல்லை என்று நாம் நம்பியே ஆக வேண்டும்.

இரட்டை இலை சின்னத்திற்காக இத்தனை பகீரத பிரயத்தனங்கள் தேவையா? சின்னம்தான் அதிமுக என்ற பெருங்கட்சிக்கு வெற்றியின் முகமா? என்றால் அதிலும் சிக்கல் இருக்கிறது.

மக்களின் மனம் கவர்ந்த எம்ஜிஆர் உயிருடன், அவர் ஆட்சியில் இருந்தபோதே கூட பலமுறை மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் அவரை சறுக்கி விட்டிருக்கிறது என்பதுதான் வரலாறு. கட்சி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டாலும், 1977ல் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு 17 இடங்களே கிடைத்தன.

மீண்டும் 1980ல் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவே ஆட்சி அமைத்தது. ஆனால், அதே ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அவர் மீண்டும் பெரிய சறுக்கலை சந்திக்க நேர்ந்தது. அப்போது நடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு வெறும் 2 இடங்களே கிடைத்தன. 1984 மக்களவை தேர்தலிலும் அக்கட்சிக்கு கிடைத்தது 12 இடங்கள்தான்.

எம்ஜிஆர் இருந்த வரை இருந்த நிலை இப்படி. திமுகவுடன் ஒப்பிடுகையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் அப்படி ஒன்றும் இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு மக்களவை தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெற்றதில்லை (2014 மக்களவை தேர்தல் தவிர).

ராஜிவ் காந்தி கொலையுண்ட நேரம். 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், கூட்டணி கட்சிகளும் பேரவை தேர்தலில் 164 இடங்களை கைப்பற்றி, முதன்முதலாக ஜெயலலிதா முதலமைச்சரானார். ஆனால், அதே ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது.

ஆக, இரட்டை இலை சின்னம் மட்டுமே அதிமுகவின் வெற்றிக் குறியீடாக நாம் கருதிவிட முடியாது என்பதற்காகச் சொல்கிறேன். ஆளுங்கட்சி மீதான வெறுப்புணர்வு, கூட்டணி, அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட காரணங்களே தேர்தல் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன.

அதேநேரம், கிராமப்புறங்களில் இரட்டை இலை சின்னத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கக் கூடிய மக்களும் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் யார் என்றுகூட தெரிந்திருக்காது. அத்தகையவர்கள், எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா ஆகியோரே எல்லா தொகுதிகளிலும் வேட்பாளராக நிற்பதாகவே கருதிக்கொள்ளக் கூடியவர்கள்.

கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது ஒரு மலைப்பகுதி வாக்குச்சாவடியில் எனக்குத் தெரிந்த ஆசிரியர் நண்பர் ஒருவர் பணியாற்றினார். அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் பெயர் அகர வரிசைப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கீழிருந்து இரண்டாவது இடத்தில் அமைந்து இருந்தது.

ஓட்டுப்போட வந்த பார்வையற்ற மூதாட்டி ஒருவர், கீழிருந்து இரண்டாவது பொத்தானில் தன்னுடைய விரலை வைத்து அமு க்குமாறு சொன்னாராம். அந்தளவுக்கு இரட்டை இலை சின்னம் எங்கு பொருத்தப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து வைத்திருக்கிறார். ஆனால், அவருக்கு வேட்பாளர் பெயர் தெரியாது என்று சொன்னதாகவும் அந்த நண்பர் சொன்னார்.

இதுபோன்ற பாமர வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாக குறைந்திருக்கும். படித்த வாக்காளர்கள் அதிகரி க்கும்போது, கண்மூடித்தனமாக சின்னத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து அங்கீகரிப்பது கேள்விக்குறிதான்.

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதைக்கூட சமூக வலைத்தளங்களில் கடுமையான கேலி, கிண்டல் விமர்சனத்துக்கு உள்ளாவதும் அதனால்தான். சின்னம் கிடைத்துவிட்டாமல் மட்டுமே வெற்றி பெற்றுவிடுவோம் என்று கருதிவிட வேண்டாம் என்று பகிரங்கமாக தங்கள் அதிருப்தியை பதிவு செய்கின்றனர்.

அதிமுக என்ற லேபிள்கூட இல்லாவிட்டால், இப்போதுள்ள அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அனைவருக்குமே ‘லெட்டர் பேடு’ கட்சித் தலைவர்களுக்கு உள்ள மரியாதைதான் கிடைக்கும் என்பதையும் அவர்கள் உணரும் தருணம் இது. அதனால்தான் அதிமுக அமைச்சர்களை சமூகவலைத்தளவாசிகள் ‘மீம்ஸ்’களால் வெச்சி செய்கிறார்கள்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை ஒருவர் கிண்டலாக, ‘போதும்பா. உங்களுக்கு ஓட்டு போட்டதும் போதும். எங்கள வெச்சி செஞ்சதும் போதும்,’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், சின்னதம்பி படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘ஹை எனக்குக் கல்யாணம்’ என்று கூச்சல் போட்டுக்கொண்டே தாலிக்கயிறை கையில் எடுத்துக்கொண்டு தெருவில் ஓடுவார். அதைப் போலவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூச்சல் போடுவதாக கிண்டல் செய்துள்ளனர்.

இந்நிலையில், போயஸ் கார்டன் பங்களாவில் நடந்த வருமானவரி நிகழ்வையும் கிண்டல் செய்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நரேந்திர மோடியின் கையை பிடித்துக்கொண்டு, ‘போயஸ் கார்டன்ல ரெய்டு பண்ணுங்க. ஆனா என் பதவி மட்டும் போகாம பாத்துக்கங்க,’ என்று கெஞ்சுவது போலவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘அம்மா கல்லறைய உடச்சுக்கூட ரெய்டு பண்ணுங்க. முதல்வர் பதவி மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க,’ என்று கேட்டுக்கொண்டே அவருக்கு கால் அமுக்கி விடுவதுபோலவும் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

சின்னத்தை வைத்து வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானித்த காலம் மலையேறி விட்டதாகவே இதுபோன்ற பதிவுகள் உணர்த்துகின்றன. ஆளுங்கட்சியாக இருந்தாலும், ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை எதிர்வரும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அறிந்து கொள்ளலாம்.

– பேனாக்காரன்.