Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

”கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை” என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார்.

உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறார். எல்லாமே இயல்பாய் அமைந்தது.

நீதிபதி அலமேலு நடராஜன்

இத்தனைக்கும் தீர்ப்பு நாளன்று, தமிழகத்தின் மிகப்பெரிய சினிமா நட்சத்திரத்தின் பிறந்த நாளும்கூட. அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களைக்கூட எடுபடாமல் நீர்த்துப் போகச்செய்தது இந்த தீர்ப்பு.

முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்பட பலதரப்பினரும் தீர்ப்பை வரவேற்றுள்ள நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பாராட்டியும் வாழ்த்துச் செய்திகள் குவிந்தன. ட்விட்டரில், ‘ஜஸ்டிஸ் ஃபார் கவுசல்யா’ என்று ஹேஷ்டேக் செய்யும் அளவுக்கு கவுசல்யாவின் சட்டப்போராட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதேநேரம், பருவ வயது தினவெடுத்ததால்தான் இன்றைக்கு பெற்ற தந்தைக்கே தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று கவுசல்யா மீது வசைச்சொற்களும் எழாமல் இல்லை. சிலர், அவருடைய சிகை அலங்காரத்தைக்கூட கேலி செய்திருந்தனர்.

பட்டியல் வகுப்பைச் சேர்ந்த உடுமலை சங்கரும், தேவர் சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவும் ஒரே கல்லூரியில் பொறியியல் படிக்கும்போது காதல் கொண்டனர். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2015ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அப்போதே கவுசல்யா தன் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் எனக்கோரி, மடத்துக்குளம் காவல் நிலையத்தில் காதல் கணவருடன் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

காவல்துறையினரும் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்திருக்கின்றனர். ஆனாலும், சாதி வெறியுடன் இருந்த கவுசல்யாவின் பெற்றோர், பலமுறை இளம் காதல் தம்பதியினரை தீர்த்துக்கட்ட முயற்சித்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தே, மிகக்கடுமையான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதுவும், சாதிப்பெருமைகள் பேசப்படும் கொங்கு மண்டலத்தில் இருந்து.

சாதி திமிரும், ஆதிக்க உளவியலும்தான் உடுமலை சங்கரை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு போய்விட்டிருக்கிறது. அதற்கு சமூக அழுத்தம்கூட காரணமாக இருக்கலாம். தீர்ப்பையொட்டி, எந்தளவுக்கு சாதிக்கு எதிராக, சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தனவோ, அதற்கு நிகராகவே சாதி ஆதரவு செய்திகளும் சமூகவலைத்தளங்களில் உலா வந்தன.

கரூரைச் சேர்ந்த பொன்குமார் கொங்கு என்ற பதிவர், ”மக்களே இனியாவது கேமரா இல்லாத இடமா பாத்து செஞ்சு விடுங்க. இப்ப பாருங்க கண்டவன்லாம் பேசறான். எது எப்படியோ செஞ்சது சந்தோஷம்தான். என்ன போய் தண்டனை? மனசு தளரவிடாம அடுத்த சம்பவத்துக்கு தயாராகுங்க,” என்று சாதித்திமிருடன் பதிவிட்டுள்ளதையும் காண முடிந்தது.

இதற்கு கடுமையான கண்டனங்கள் எழவே, சிறிது நேரத்தில் அந்தப் பதிவு, ட்விட்டர் பக்கத்தில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது. சிலர் இ ந்தப் பதிவை சென்னை காவல்துறைக்கும்கூட அனுப்பி வைத்துள்ளனர்.

தீர்ப்புக்கு முதல் நாள், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் சிறுமிகளுடன் பறை இசைக்கிறார் கவுசல்யா.

உண்மையில் சாதி – மதம் – கடவுள் – சாத்திரங்கள் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. கடவுள் வகுத்தவைதான் சாத்திரங்கள் என்ற கருத்து, சமுதாயத்தில் ஆழப்பதிந்துள்ளது. அந்த சிந்தனை வழிவழியாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. அதனால்தான் உழைப்பின் அடிப்படையில் அல்லாமல் பிறப்பின் அடிப்படையில் சாதியும், வருணமும் தோன்றி இருக்கின்றன.

அப்படியெனில் சாதிகளை ஒழிக்கவே முடியாதா? என்றால் அதற்கும் அம்பேத்கர் அப்போதே பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். தனது ‘சாதி ஒழிப்பு’ குறித்த நூலில், கலப்புத் திருமணங்களால்தான் சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்த முடியும் என்கிறார் அவர். ஒரு கட்டத்தில் காந்தியும் அதை வழிமொழிந்தார். பெரியாரும் அதையே பேசினார்.

என்னதான் பெரியார் மண், திராவிட பூமி என்று நாம் பெருமை பேசினாலும் தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை 2.5%க்கும் குறைவுதான்.

சாதி மறுப்புத் திருமணம் குறித்து கடந்த 2005ம் ஆண்டில் நாடு முழுக்க பெண்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. 1981ல் 3.5% ஆக இருந்த சாதி மறுப்புத் திருமணங்கள், 2005ல் 6.1% உயர்ந்திருந்தது. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 0.1% அதிகரித்திருக்கிறது. அவ்வளவுதான். அதே ஆண்டில் தமிழக நிலவரம் என்ன தெரியுமா? மொத்த திருமணங்களில் 2.2% விழுக்காடுதான் சாதி மறுப்பு திருமணங்கள் என்கிறது அந்த ஆய்வு.

இதே வேகத்தின் அடிப்படையில் கணக்கிட்டால்கூட 50% அளவுக்கேனும் சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்க வேண்டுமெனில் இன்னும் 500 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். ஆக, இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் சமூக அடுக்குகளில் சாதி உணர்வு உயிர்ப்புடன் அப்பிக்கிடக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.

எனில், சாதி வெறியை, சாதி உணர்வை அப்படியே குழி தோண்டி புதைத்து விட முடியாதா என்றால் ஒரே நாளில் முடியாது. சாத்தியமும் இல்லை. சுவரில் முட்டிக்கொள்வதற்குச் சமம். ஆனால், தீர்வு இல்லாமல் இல்லை.

உடுமலை சங்கர் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றாலும், உலகம் முழுவதும் தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற தளத்தில் குரல் கொடுக்கிறார் தோழல் ராஜலிங்கம். அவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். சாதிய போக்கிற்கு எதிராக சில தீர்வுகளை முன்வைக்கிறார்.

”உடுமலை சங்கர் வழக்கில் கடுமையான தீர்ப்பு கொடுக்கப்பட்டதால் எல்லாம் ஆணவப்படுகொலையை தடுத்துவிட முடியும் என்று சொல்லிவிட முடியாது. இன்னும் தொடரும். ஆணவப் படுகொலைக்கு எதிராக அரசாங்கம் தனிச்சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

வயது வந்த ஓர் ஆணும், பெண்ணும் காதல் கொள்வது இயற்கை. காதலின் முடிவு செக்ஸ் என்பதுதான். அதனால் பள்ளியில் செக்ஸ் கல்வி குறித்தும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். அப்போதுதான் எது காதல் அல்லது இனக்கவர்ச்சி என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

பட்டியல் சாதி இளைஞனுக்கும், பிற இடைநிலைச்சாதியைச் சேர்ந்த பெண்ணுக்குமான காதல், கொலை என்று ஒருதலைப்பட்சமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகள், பட்டியல் சாதிகளுக்குள்ளேயேகூட உண்டு. பறையர், பள்ளர், அருந்ததியர் சமூகத்தினர் தங்களுக்குள் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. இந்த சமூகத்தைச் சேர்ந்த பையனும், பெண்ணும் காதலித்தால் காவல்நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து பிரிக்கப்படுவது இன்னும் தொடர்கிறது. அதெல்லாம் ஊடகங்களில் வெளியே வராததால் பிரச்னைகள் தெரிவதில்லை.

ராஜலிங்கம்

எனில், சாதி மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. பண்பாட்டு தளத்திலும், பொருளாதார தளத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் வந்தால் ஒழிய சாதிகளை ஒழிக்க முடியாது. மக்களின் ஆழ்மனதில் இருந்து முதலில் சாதியை அகற்ற வேண்டும். அதற்கு பண்பாட்டுத் தளத்தில் மாற்றம் வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மேற்கு வங்கம், கேரளாவில்கூட சாதிகள் ஒழிக்கப்படவில்லையே. கலப்புத்திருமணச் சட்டம் இருந்தும் அரசாங்கங்கள் அதுபற்றி ஏன் முழுவீச்சில் விழிப்புணர்வு செய்வதில்லை? எனெனில், அரசாங்கமே சாதிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஹெச்ஐவி எய்ட்ஸ் பற்றி எப்படி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல் கலப்புத்திருமணம் பற்றியும் அரசாங்கம் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

பட்டியல் சாதிகளிடையே பொருளாதார விடுதலையும், அரசியல் அதிகாரமும் கிடைக்கும்போது சாதி கட்டமைப்புகள் வேகமாக உடையும்,” என்கிறார் ராஜலிங்கம்.

ராஜலிங்கம் கூற்றில் இருந்து அப்படியே முரண்பட்ட செய்திகளைச் சொல்கிறார் தொழில் அதிபரும் முக்கிய பிரமுகருமான ஒருவர். நாட் டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அவர், சாதி கட்டமைப்பு இருந்தால்தான் மரபுப்படி திருமண சடங்குகள் செய்ய முடியும் என்கிறார்.

”குடும்பம் என்பதன் விரிவான அமைப்புதான் சாதி. மணமகன் அல்லது மணமகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு சாதி கட்டமைப்புதான் பயன்படுகிறது. சாதி கட்டமைப்புகள் இல்லாவிட்டால் தவறான உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்யக்கூடிய விபரீத போக்கும் ஏற்படும். சாதி வேண்டும். ஆனால் சாதி வெறிதான் இருக்கக் கூடாது,” என்கிறார் அந்த முக்கிய பிரமுகர்.

பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் சாதிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததை, பட்டியலின மக்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பு அளித்ததன் மூலம் திராவிட சிந்தனைக்கு மாற்று வடிவம் கொடுத்தார், காமராஜர். அதையொட்டி பேசுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரான சேலத்தைச் சேர்ந்த மெய்யழகன்.

உடுமலை சங்கர் வழக்கில் வழக்கப்பட்ட தீர்ப்பு சாதி பாகுபாடுகளைக் களையுமா என்று கேட்டதற்கு, எடுத்த எடுப்பிலேயே அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்றார். ‘இங்கு சாதியவாதம் என்பதே போலித்தனமானது,’ என்கிறார் அவர்.

”வயது வந்த பெண்ணும், ஆணும் காதல் கொள்வதும், எதிர்பாலினரால் ஈர்க்கப்படுவதும் இயற்கையாக நிகழ்வது. அதை சாதியைக் காட்டி பிரித்தல் ஆகாது. குழந்தையில் இருந்து கண்ணே, மணியே என்று சீராட்டி, பாராட்டி வளர்த்த பிள்ளையை சாதி காரணமாக கொல்லத் துணியும்போது பெற்றோரின் அன்பே அங்கு கேள்விக்குறியாகி விடுகிறது. தனிப்பட்ட அகங்காரமும் தனிப்பட்ட கவுரவத்திற்காகவும் கொலை செய்யவும் துணிகின்றனர். எனில் அன்பு, பாசம் எல்லாமே பொய்தானே?

மெய்யழகன்

அடுத்து, சாதியவாதம். இங்கு சாதிப்பெருமை பேசுபவர்களிடமும் போலித்தனம்தான் உள்ளது. சாதிப்பெருமை பேசக்கூடியவர்கள் கர்ப்பக்கிரக அறைக்குள் பெண்களிடம் தவறாக நடக்கும்போதும், வீட்டு வேலைக்கார பெண்ணிடம் தவறாக நடக்கும்போதும் சாதியைப் பார்ப்பதில்லை. பெரிய வீடு கட்டும்போது சாதி பார்ப்பார்கள்; ‘சின்னவீடு’ வைத்துக்கொள்ளும்போது சாதியை விட்டுவிடுவார்கள். என் சாதி என் சாதி என்பவர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் அவருக்கு சொந்த சாதியினர்கூட சோறு போட மாட்டார்கள்.

அந்தஸ்து என்பதே ஒருவித கற்பனை. அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார் என்ற சிந்தனையின் காரணமாக ஆணவக் கொலை போன்ற காட்டுமிராண்டித்தனங்களில் ஈடுபடுகின்றனர். பொருளாதாரமும், கல்விச் சுதந்திரமும் எல்லோருக்கும் பரவலாக்கப்படும்போது சாதிய கட்டுமானங்கள் உடைந்துவிடும். வெறும் சட்டம் போட்டு மட்டும் சாதிகளை உடைத்துவிட முடியாது,” என்கிறார் ஆசிரியர் மெய்யழகன்.

சாதிகள் இல்லாவிட்டால் நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் செய்ய போக்கிடம் இல்லையே! எனில், சாதி வளர்த்தெடுத்தலின் ஊற்றுக்கண் யார்?

 

– அகராதிக்காரன்.