Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

(பூவனம்)

 

தமிழ்ச்சிற்றிதழ்கள் உலகில் தனக்கென்று தனித்த இடத்தை தக்க வைத்திருக்கும் கவிஞர் பெ.அறிவுடைநம்பியின் நான்காவது படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, ‘காற்றில் மிதக்கும் வானம்’. கவிதை நூல். ‘விழியில் ததும்பும் நீர்’, ‘நீரில் ஆடும் நிலா’, ‘மழையில் நனைந்த மின்னல்’ ஆகியவை இவருடைய முந்தைய படைப்புகள்.

 

கவிதை நூலுக்கு இவர் இடும் தலைப்பே ரசனையானது. ஆனால், காற்றில் வானம் மிதக்குமா? என்பது கவிஞனுக்கேயுரிய முரண். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்காரர். எனினும் அவர், கற்பனை வளத்திற்கும், கவி புனையவும் ஒருபோதும் பூட்டிட்டுக் கொண்டதில்லை. அதனால்தான், கூட்டுறவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, கவி உலகில் தும்பியாய் பறந்து கொண்டிருக்கிறார்.

 

படைப்பு நோக்கில் சொல்ல வேண்டுமானால் கவி-ஞர் பெ.அறிவுடைநம்பியிடம் எப்போதுமே ஓர் எள்ளல்தனம் இருக்கும். குறுங்கவிதைகளை ‘நறுக்’கென்றும், நையாண்டியாகவும், ஒருவித எள்ளலுடனும் வெளிப்படுத்துவது அவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருக்கிறது. அந்த இயல்புணர்வை அவர் உள்வாங்கிக் கொண்டாரா இல்லையா என்பது விளங்கிக்கொள்ள இயலவில்லை. ஏனெனில் அவர் நெடுங்கவிதைகளுக்குள் பயணித்து, மாட்டிக் கொள்வதாகவே நான் உணர்கிறேன்.

நெடுங்கவிதைகளில் சலிப்பூட்டும் வகையில் ஒரே விதமான கற்பனையும், உவமைகளும், உருவகங்களும் படையெடுத்து, அயற்சியை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்னைகள், குறுங்கவிதைகளில் இல்லை எனலாம். அவையே, காற்றில் மிதக்கும் வானத்தை கீழே விழாதபடி தாங்கிப் பிடிக்கின்றன.

 

அவரின் குறுங்கவிதைகளில் இருந்து சில…

 

”கடன் வாங்கிப் படித்தான்
வேலைவாய்ப்பை இழந்தான்
புதிய கல்விக் கொள்கை!”

 

”கடன்சுமை நேற்று
வரிச்சுமை இன்று
மரணம் விடு தூது
ஏழை உழவன்!”

(பக்கம் 45)

 

என சாமானியர்களின் வதைகளையும், துயர்களையும் தோட்டாக்களாய் தெறிக்க விட்டுள்ளார்.

 

மற்றோர் இடத்தில்…

 

”கடவுளர் சிலைகள் கடத்தல்
காணும் தொகைகள் கூடுதல்
எல்லாம் அவன் செயல்!” (பக். 50)

 

என கடவுளை எள்ளி நகையாடுகிறார் கவிஞர். சிலை கடத்தலும், கடத்தல் சிலைகளை மீட்பதிலும் தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வரும் சமகாலத்தில் இந்தக்கவிதை நிறையவே பொருந்திப் போகிறது. தன்னையே காத்துக்கொள்ளாத கடவுள், மக்களை எப்படிக் காக்கப் போகிறார்? எனச் சொல்லாமல் சொல்லிப் போகிறார் இந்தத் திண்டுக்கல் பெரியார்.

 

இதே பக்கத்தில்,

 

”தர்மயுத்தம் முடிந்தது
பட்டாபிசேகம் நடந்தது
அரிதாரம் கலைந்தது
அரசியல் நாடகம்!”

 

வாழ்க்கையே ஒரு நாடக மேடை என்றார் ஷேக்ஸ்பியர். அரசியல் நாடகம், நாடக அரசியல் எல்லாமே இந்திய ஜனநாயகத்தில் புரையோடிப்போனதுதானே?

 

”தண்ணீர் கோரும் தமிழ்நாடு
தர மறுக்கும் கர்நாடகம் – நாம்
எல்லோரும் இந்திய மக்கள்!”

 

தர்மயுத்த நாடகம் போன்ற கூறுகளில் ஒன்றுதான் காவிரி விவகாரமும். காவிரியை வைத்து, அரசியல் நாடகம்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாகச் சொல்கிறார், கவிஞர்.

 

கவிதைக்கு, முரண் அழகு. ‘புதிர்கள்’ எனும் தலைப்பில், பெ.அறிவுடைநம்பியும் அத்தகைய முரண்களை அழகாகக் கையாண்டிருக்கிறார்.

 

”கோயில்களை நிர்மாணித்து
வெளியில் நின்றே தரிசித்தோம்!”

(பக். 54)

என்ற இரண்டே வரிகளில் பாரதியிடம் தெறித்த அக்னிக்குஞ்சுகளின் கனலை அறிவுடைநம்பியிடமும் உணர முடிகிறது. அது, தனித்து ஒலிக்கும் குரல் அன்று; ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளின் கோர முகம்.

 

இதே பக்கத்தில்,

 

”மரங்களை வெட்டிவிட்டு
நிழல்தேடித் திரிகின்றோம்!”

 

”விதை நெல்லை பறிகொடுத்து
வயல்தேடி அலைகின்றோம்!”

 

”வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு
ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்டோம்!”

 

என யதார்த்த வாழ்வின் அங்கங்களாகிவிட்ட முரண்களை பதிவு செய்கிறார். ஆதார் எண்ணை மையப்படுத்திய தேசத்தில், அதைப்பற்றி விமர்சிப்பதே குற்றமாகப் பார்க்கப்படுகிறது. காவி கும்பல், தேச விரோதி என்கிறார்கள். அறிவுடைநம்பியும் தேச விரோதி அடைமொழிக்குள் வந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதே நம் அவா.

 

”பிணங்கள் ஒதுங்கும் அவலங்கள்
பின்னாளில் வந்த செய்திகளால்
தண்ணீரில் தொடங்கும் மீனவர் வாழ்வு
கண்ணீரில் முடியும் காட்சிகளாய்
நெஞ்சைப் பிழியும் சோகங்கள்
மீளாத்துயரின் சாபங்கள்!”

(பக். 66)

 

என்று கடலோடிகளின் துயரங்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார். மீனவர்களுக்கு, வாழ்வும் சாவும் ஒரே நேர் க்கோட்டில் இருப்பதை நுட்பமாகச் சொல்கிறார், கவிஞர்.

 

இப்படி பாராட்ட நிறைய இருப்பினும், பக்கங்கள்தோறும் மலிந்து கிடக்கும் எழுத்துப்பிழைகளை சகித்துக் கொள்ள இயலவில்லை. ஏன் கவிஞரே? எதனால் நிகழ்ந்தது? மொத்தமுள்ள 112 பக்கங்களில் பிழைகள் இல்லாத பக்கங்கள் குறைவு.

 

பிறமொழிச் சொற்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் கவிஞர் மிகுந்த அக்கறை காட்டுகிறார் என்பதில் மொழிப்பயன்பாட்டில் உணர முடிகிறது. ஆனாலும், ‘கோஷம்’ என்ற வடமொழிச் சொல்லை ‘கோசம்’ என்றால் தமிழாகி விடுமா? ‘முழக்கம்’ என்று கையாண்டிருக்கலாமே?

 

துரோகமிளை (பக். 48), புரமைக்க (பக்.48), அவைகள் (பக்.95), கவணி (பக்.87), பெண்ணால் (பக்.91), வந்விடு (பக்.99), குடும்ப கார்டு, நாடாக (பக்.53), நிர்மானித்து (பக்.54) என பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ‘அவை’ என்ற சொல்லே பன்மையில் சுட்டுவதுதான். ‘அவைகள்’ என்ற சொல், தமிழில் இல்லை.

 

அடுத்த படைப்பு, இன்னும் செறிவுடன் குறைகளற்று வரும் என எதிர்பார்க்கிறோம்.

 

நூல்: காற்றில் மிதக்கும் வானம்
வகை: கவிதை
வெளியீடு: கிங்ஸ் பப்ளிகேஷன்
விலை: ரூ.80/-
கவிஞரை தொடர்புகொள்ள: 97872 74443.

 

– பேனாக்காரன்.