Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அருவி – சினிமா விமர்சனம்; “போலி சமூகத்தின் மீதான சாட்டையடி!”

சர்வதேச படவிழாக்களில் ஏற்கனவே பெரும் கவனத்தை பெற்ற ‘அருவி’, நேற்று (டிசம்பர் 15, 2017) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

விருது படம் என்றாலே மெதுவாக நகரக்கூடியது, குறிப்பிட்ட சாராரைப் பற்றியது போன்ற இலக்கணங்களை எல்லாம் உடைத்து, இந்த சமுதாயத்தில் இருக்கும் நம் ஒவ்வொருவரின் குண இயல்புகளை பல்வேறு பாத்திரங்களின் வழியாக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது அருவி.

நடிப்பு: அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சுவாமி, கவிதா பாரதி மற்றும் பலர்.

இசை: பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ்; ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்; படத்தொகுப்பு: ரேமாண்ட் டெர்ரிக்; தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ்; இயக்கம்: அருண்பிரபு புருஷோத்தமன்.

கதை என்ன?: அருவி என்பது இந்தப்படத்தில் மையப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ஒரு பெண்ணின் பெயர். தமிழகத்தின் அழகான ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் அருவியின் குடும்பம், அவளுடைய தந்தையின் பணியின் நிமித்தமாக சென்னைக்கு குடிபெயர்கிறது. யாருமே எதிர்பாராத வகையில் அருவியின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அதனால் அவளை குடும்பமே வெறுத்து ஒதுக்குகிறது. குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும் அருவி சந்திக்கும் வாழ்வியல் பிரச்னைகளையும், வலிகளையும் அற்புதமான திரைக்கதை மூலம் சொல்கிறது அருவி.

இந்த ஆண்டின் இறுதியில் அறம் படத்தைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் சமூகத்திற்குத் தேவையான மற்றுமொரு மாற்றுப்படம் அருவி. கழுத்தில் தொங்கும் பெரிய ரோஜாப்பூமாலை, கைகளில் எந்திர துப்பாக்கி, எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் மெய்மறந்து ஆனந்தமாய் சிரிக்கும் சிரிப்பு; இன்னொரு போஸ்டரில் வாயில் பெரிய சுருட்டு, கையில் மதுபாட்டில் சகிதம்.

இப்படி போஸ்டரிலேயே கவனம் ஈர்த்த அருவி, தமிழ் சினிமாவில் கதை சொல்லலில் இதுவரை ஆகிவந்த மரபுகளையும், இலக்கணங்களையும் அப்பட்டமாய் உடைக்கிறது. சீரியஸ் மோடில் கதை பயணிக்கும் அதே வேகத்தில் சரவெடி சிரிப்புக்கு மாறுகிறது. கதை சொல்லலில் நிச்சயம் இந்தப்படம் ஒரு புதிய மரபை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம்.

முதல் காட்சியே, அருவியை தீவிரவாதியாக கருதிக்கொண்டு காவல்துறை விசாரணை நடத்துகிறது. ”உனக்கு எந்த இயக்கத்தோட தொடர்பு இருக்கு? சொல்லு…. அல் உம்மா, மாவோயிஸ்ட், இல்ல நக்சல்பாரிகளா…” என விசாரணை நடத்துகிறது. உண்மையில் அருவி என்பவள் யார்? என்பதை ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் சொல்வதில் இருந்து ஒரு ‘நான் லீனியர்’ பாணியில் கதை விரிவடைகிறது.

அருவிக்கு நேர்ந்த கொடுமையை அறியாமல் அவளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தோழியின் தந்தை, ஆன்மீக சொற்பொழிவாளர், தையல் வேலை கொடுத்த முதலாளி என ஒவ்வொருவருமே தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அருவியிடம் அத்துமீற துடிக்கின்றனர். ஒரு பெண்ணை, ஆணுலகம் எப்படி அணுகுகிறது என்பதற்கு இதுபோன்ற காட்சிகள் சில உதாரணங்கள்.

ஒரு பெண் நன்றாக இருக்கும்போது அவளை எந்த உச்சத்திற்கும் தூக்கிக் கொண்டாடும் நாம்தான், அந்தப்பெண் ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்குச் செல்லும்போது அவளை எந்த எல்லைக்கும் சென்று ஒடுக்குகிறோம் என்பதை நாமே வெட்கப்பட்டு தலைகுனியும் அளவுக்கு இந்தப்படம் கேள்வி எழுப்புகிறது.

பெற்றோரின் ஒதுக்குதல், தான் எதிர்கொண்ட ஆண்களிடம் இருந்து துரத்தல்கள் என தன் சோகத்தைச் சொல்ல அருவி, ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற ஒரு தனியார் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறாள்.

அங்கும் அவளின் துயரத்தை வணிகமாக்கும் முனைப்பிலேயே டிவி நிர்வாகம் செயல்படுகிறது. அதைப் புரிந்து கொள்கிறாள் அருவி. அதற்கு அவள் காட்டும் எதிர்வினையை தாங்க முடியாத டிவி நிர்வாகமும், காவல்துறையும், அரசாங்கமும் அவளை ஒரு தீவிரவாதியாக சித்தரிக்க முயல்கிறது. தான் தீவிரவாதி அல்ல; அன்புக்கும் அடைக்கலத்திற்கும் ஏங்கும் தீவிர நோயாளி என்கிறாள் அருவி.

ஒரு படத்திற்கு பாத்திரம் உணர்ந்து நடிக்கக்கூடிய நடிகர்கள் கிடைத்துவிட்டாலே அந்தப்படம் பாதி வெற்றியைத் தொட்டுவிட்டதாகக் கருதலாம். அதை இந்தப்படம் செய்திருக்கிறது. அந்தளவுக்கு இந்தப்படத்தின் ஒவ்வொரு நடிகர்களும் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தவிர, நாயகி உள்பட அனைத்து கதாபாத்திரங்களுமே புதுமுக கலைஞர்கள்தான். ஆனால், அனைவருமே நம்ப முடியாத அளவுக்கு தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக, அருவி பாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன், பள்ளிச்சிறுமியாக பார்த்தால் பள்ளிச்சிறுமி; பருவப்பெண்ணாக பார்த்தால் பருவப்பெண்; உடல்நலம் குன்றிய பெண் என்றால் அதுவாகவே வாழ்ந்திருக்கிறார். அந்த பாத்திரத்தின் கணம் உணர்ந்து உடல் எடையைக் குறைத்திருக்கிறார். நடிகர் விக்ரமிடம் இருக்கும் அதே உழைப்பு, ‘அருவி’ அதிதி பாலனிடமும் இருக்கிறது.

அடுத்து, அருவியின் தோழியாக எமிலி என்ற பாத்திரத்தில் அஞ்சலி வரதன் என்ற திருநங்கை நடித்திருக்கிறார். அதிதிபாலனுக்கு அடுத்து ரொம்பவே கவனம் ஈர்க்கிறார். ”ஐஸ்வர்யா ராய் போனால்கூட இந்த ஆம்பளைங்க எதுவும் பேச மாட்டானுங்க. எங்கள மாதிரி அரபாடி போனா மட்டும் வெச்சக்கண்ணு வாங்காம பார்ப்பாங்க. நாங்க என்ன அவ்வளவு அழகா…?” என்ற வசனத்தின் மூலம் திருநங்கைகளின் வலியை பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார் அஞ்சலி வரதன். இயக்குநரும், எமிலி பாத்திரத்தை உயர்வாகவே சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது.

இவர்கள் மட்டுமின்றி, சின்னச்சின்ன பாத்திரங்களில் வந்துபோகும் துணை நடிகர்கள்கூட அனாயசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக, படத்தின் பெரும்பகுதி காட்சிகள் (கிட்டத்தட்ட 1 மணி நேரம்) டிவி ரியாலிட்டி காட்சியாகத்தான் நகர்கிறது. அந்த செட்டுக்குள் வந்துபோகும் ஆபீஸ் பையன், கேமரா ரோலிங் சார்ர்ர்…எனக்கூறும் கேமரா உதவியாளர், செக்யூரிட்டி, தொகுப்பாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் நிஜ பாத்திரங்களாக மாறியிருக்கின்றனர். இந்த பாத்திரங்கள் அல்லது அவர்களின் வசனங்கள் படம் முடிந்து வெளியே வந்த பின்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பதிந்து விடுகின்றன/ர்.

ஒரு பெண் பூப்பெய்துவிட்டாள் என்பதை அவளுடைய பள்ளி புத்தக பைக்குள் ‘சானிடரி நாப்கின்’ வைத்து எடுத்துச் செல்வதன் மூலம் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். சக மாணவி, நாப்கினை தயக்கத்துடன் ஓசி கேட்பது போன்ற காட்சிகள் ரொம்பவே ஈர்க்கின்றன.

”காதலை எப்படி வார்த்தையால எக்ஸ்பிளெய்ன் பண்ண முடியும்?” என்று மென்மையாக பேசும் அருவிதான், ஓரிடத்தில், ”இந்த ஒலகம் என்ன சொல்லுது. நீ எப்படி வேல செய். எவனவேணா சொரண்டித்தின்னு. காக்கப்புடி. அடிமையா இரு. ஊழல் பண்ணு. லஞ்சம் வாங்கு. குத்து. அடி. கொலகூட பண்ணு. ரேப் பண்ணு. எத்தன பேரோட வயித்துலவேணா மிதி. எவனவேணா முட்டாளாக்கு. வயித்துல மிதி. லட்சம் கோடிகூட கொள்ளையடி. யாரும் உன்ன தூக்கிப்போட்டு மிதிக்க மாட்டாங்க,” என்ற கனல் தெறிக்கும் நீளமான வசனத்தைப் பேசுகிறார் அருவி.

இதுபோன்ற கூர்மையான, இந்த சமூகத்தின் முகத்தில் அறையும் வசனங்களும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன. பிந்து மாலினி – வேதாந்த் பரத்வாஜ் என இரட்டை இசையமைப்பாளர்கள். அவர்களுக்கும் இதுதான் முதல் படம். பின்னணி இசை, இடத்திற்கேற்றபடி இசைத்தும், மவுனித்தும் கவனம் ஈர்க்கின்றன.

அதேபோல், ஒளிப்பதிவு. கிராமத்து அழகைக் காட்டுவதிலாகட்டும். நகரத்தின் வேகத்தைக் காட்டுவதிலாகட்டும். எந்த இடத்தில் ரிச் லுக், எந்த இடத்தில் சுமாரான அல்லது யதார்த்தமான வண்ணம் வேண்டும் என்பதை ஷெல்லி கேலிஸ்ட் கேமரா அழகாக காட்சிப்படுத்துகிறது. ரேமாண்ட் டெர்ரிக், படத்தொகுப்பு கனகச்சிதம்.

உண்மையில் நம்முடைய வாழ்க்கையை நாம்தான் வாழ்கிறோமா?, பிறருக்காக எங்கெங்கெல்லாம் போலியாக நடிக்கிறோம்?, பணம் மட்டுமே வாழ்க்கைக்கு போதுமா?, பெண்களை இந்த சமூகம் எப்படி அணுகுகிறது? என பல கேள்விகளுக்கான பதிலை வணிக சமரசமின்றி சொல்கிறாள் அருவி.

பல பிரிவுகளில் அருவி, தேசிய விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அம்மா, சகோதரிகள், தோழிகள் என பெண்ணுலகத்தோடு தொடர்புடைய அத்தனை பேரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம், அருவி.

– வெண்திரையான்.