Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கேப் டவுன் டெஸ்ட்: தென்னாப்ரிக்காவிடம் சுருண்டது இந்தியா!

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்றது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, வெற்றிக்கு வழிகோலினார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது.

தென்னாப்பிரிக்கா அணியை 130 ரன்களில் சுருட்டிய மகிழ்ச்சியில் விராட் கோலி.

தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து, 77 ரன்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

நான்காம் நாள் ஆட்டம் இன்று (ஜனவரி 8, 2018) நடந்தது. இன்றைக்கும் அந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமாக இருந்தது. இதனால் இந்திய வேகங்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு 65 ரன்கள் சேர்ப்பதற்குள் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா அணி, இரண்டாம் இன்னிங்சில் 130 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 

அதன்பின், 208 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்களும் தடுமாறினர். குறிப்பாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டரின் பந்துவீச்சில் அனல் பறந்தது.

இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை கபளீகரம் செய்த தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டரை சக வீரர்கள் பாராட்டுகின்றனர்.

பிலாண்டரின் தாக்குதலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்பட 6 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்திய அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது.

அந்த அணியின் ரபடா, மோர்னே மோர்கல் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா 1&0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த மைதானத்தில் 250 ரன்கள் வரை சேஸ் செய்து வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருந்தும், பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஆட்டம், தோல்வியில் முடிந்திருக்கிறது.