Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயமில்லை!; உச்சநீதிமன்றம்

சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேசப்பற்றை வளர்க்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா திரையரங்குகளிலும் படம் தொடங்குவதற்கு முன்பு, கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் எழுந்தன. திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் பலர், தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன.

 

சில இடங்களில் தேசப்பற்று என்ற பெயரில், தேசிகீதத்தை அவமதிப்பதாகக் கூறி அப்பாவி மக்கள் மீது தாக்குதலும் நடந்துள்ளன. சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் உள்ள காசி தியேட்டரிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பாக ஷ்யாம் நாராயண் என்பவர் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என இன்று உத்தரவிட்டுள்ளது.