Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் – சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.

 

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும் அத்திட்டத்தின் முக்கிய அம்சம். இதில் 1.20 கி.மீ. தூர பாதை, சேர்வராயன் மலையைக் குடைந்து அமைக்கப்படுகிறது. இதற்காக 100 ஹெக்டேர் மலை மற்றும் வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட வேண்டியுள்ளது.

மலைப்பகுதியை குடைந்து சுரங்கப்பாதை அமைப்பதால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கும் என்றும், இத்திட்டத்துக்காக 90 சதவீதம் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் உணவு உற்பத்தி குறையும் என்றும் இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் உரத்த குரலில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வந்தனர்.

 

இதையெல்லாம் எடப்பாடி அரசும், மோடி அரசும் கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் விவசாயி மோகனசுந்தரம் உள்ளிட்டோர் இந்த திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

இத்திட்டப்பணிகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்கும்படி கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் இறுதித்தீர்ப்பு திங்களன்று (ஏப்ரல் 8, 2019) கூறப்பட்டது.

 

தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

சேலம் – சென்னை பசுமைவழிச்சாலை
திட்டத்திற்காக காஞ்சிபுரம் உள்ளிட்ட
6 மாவட்டங்களில் நிலத்தை
கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு
பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.
பொதுவாக இதுபோன்ற மிகப்பெரிய
திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக,
அந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல்
பாதிப்பை முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

 

அவ்வாறு ஆய்வு செய்யாமல்,
மிகப்பெரிய திட்டத்தை அரசு
அமல்படுத்தும்போது அதனால்
சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று
தெரிய வரும்போது ஒவ்வொரு
குடிமகனும் அதை எதிர்த்து
வழக்கு தொடர உரிமை உள்ளது.

எட்டு வழிச்சாலைத் திட்டத்தால்
சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு
உள்ளது. விவசாய நிலங்கள், கிணறுகள்,
குளங்கள், ஏரிகள், மலைகள் எல்லாம்
சேதப்படுத்தப்பட உள்ளது. எனவே,
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு
முன்பு சுற்றுச்சூழல் துறையிடம்
ஒப்புதல் பெறுவது அவசியம் ஆகும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு
தனியார் நிறுவனம் வழங்கிய ஆலோசனை
அறிக்கையையும் ரத்து செய்கிறோம்.
மேலும் இத்திட்டத்தால், பொதுமக்களுக்கு
பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி
இருக்கும்போது, விவசாய நிலம்,
நீர்நிலைகள், மலைகள் எல்லாம்
அழிக்கப்படும் என்று அச்சம்
கொள்ளும் விவசாயிகளிடம் கருத்து
கேட்பு கூட்டத்தை நடத்தி
இருக்க வேண்டும்.

 

ஒரு திட்டம் என்றால்,
பொதுமக்களின் கருத்தையும்
கேட்க வேண்டும். அந்த திட்டத்தினால்
அவர்களுக்கு உள்ள அச்சத்தையும்
போக்க வேண்டும். அதை எட்டுவழி
பசுமைச்சாலைத் திட்டத்தில்
மேற்கொள்ளவில்லை. இந்த
திட்டத்துக்கு நிலங்களை
கையகப்படுத்துவது தொடர்பாக
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை
ரத்து செய்கிறோம். கையகப்படுத்தப்பட்ட
நிலங்களை உடனடியாக அந்தந்த
நில உரிமையாளர்களிடம்
ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஒரு திருவிழாபோல உற்சாகமாக கொண்டாடினர்.

 

சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து வேண்டுதல் வைத்திருந்தனர். விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அம்மனுக்கு இன்று பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர். அப்போது வள்ளி என்ற விவசாயி திடீரென்று அருள் வந்து சாமியாடினார். பூசாரி முருகேசனும் சாமி ஆடினார். மேலும், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடித் தீர்த்தனர். பெண்களும், ஆண்களும் வட்டமாக சேர்ந்து கொண்டு பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும், தீர்ப்புக்கு நன்றி சொல்லியும் கும்மியடித்து பாட்டுப்பாடினர்.

சேலம் ராமலிங்கபுரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் நிலத்தை அளந்து நடப்பட்டு இருந்த எல்லைக்கற்களை விவசாயிகளே பிடுங்கி எறிந்தனர். வீரபாண்டி அருகே கூமாங்காடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

தீர்ப்பு குறித்து குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம், சித்ரா, செல்வி, வீரமணி, கவிதா ஆகியோர் கூறுகையில், ”எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக எங்களுடைய வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலங்கள் முழுமையும் பறிபோகும் நிலை இருந்தது. ஒருவேளை, இந்த திட்டம் அமலுக்கு வந்திருந்தால் நாங்கள் இந்நேரம், தெருவில் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருப்போம். இல்லாவிட்டால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்போம்.

 

எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், கல்யாணம் காட்சி பண்ண முடியாமல் ரொம்பவே தவித்துப் போயிருப்போம். என்றைக்கு எங்கள் நிலத்தை அளக்க வந்தார்களோ அப்போது இருந்தே நாங்கள் நிம்மதியை தொலைத்து, தூக்கத்தை தொலைத்து, சாப்பாட்டை தொலைத்து தவித்துக் கிடந்தோம். நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு இப்போதுதான் தீர்ப்பின் மூலம் நிம்மதி கிடைத்திருக்கிறது.

இந்த திட்டத்துக்காக போடப்பட்ட அரசாணையை உடனடியாக எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் மேல்முறையீட்டுக்குப் போகக்கூடாது,” என்றனர்.

 

கூமாங்காட்டைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ”உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பலர் மன உளைச்சலில் இறந்து போயுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். என் வீட்டில்கூட எங்கள் மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாள். அதற்கெல்லாம் இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

 

நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்த்து இந்த தேர்தலில் வாக்களிப்போம். ஐந்து மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சொந்தபந்தங்களிடம் செல்போன் மூலம் பேசி வருகிறோம். நிச்சயமாக அவர்கள் இந்த தேர்தலில் தோற்றுப்போவது உறுதி,” என்றார்.

 

– பேனாக்காரன்.