Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

”தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா…” என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.

 

வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ”தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?” என்றார்.

 

”இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு… எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ… கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்புலயோ என்கிட்ட கருத்துக்கணிப்பு நடத்துனாங்கனு போட்டதா இதுவரைக்கும் நான் பாத்ததுல்லப்பா…” என்றார் பேனாக்காரர்.

அதற்குள் செங்கழுநீராரும் திண்ணைக்கு வந்து சேர்ந்தார். அவரே லாவணியை ஆரம்பித்தார்…

 

”ஏதோ கருத்துக்கணிப்பு திணிப்புனு பேச்சு சத்தம் கேட்டதால, நானும் ஊடகங்கள் பத்தின சில சேதிகள சொல்றேன். தேர்தல் காலத்தில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் பத்தி எனக்கு சில தகவல்கள் கிடைச்சது. ஒரு வாரத்துக்கு முன்னாடியே தெரியும்னாலும் இப்போதானே உங்களலாம் நேர்ல பாக்குறேன்…

 

ஒரு வருடத்துக்கு முன்னாடி கோப்ரா போஸ்ட்னு ஒரு இணையதள பத்திரிகை, இந்தியா முழுக்க முன்னணில இருக்கற 24 அச்சு மற்றும் காட்சி ஊடக நிர்வாகிங்ககிட்ட ரகசியமாக ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்துச்சு. அதுல, கிட்டத்தட்ட 22 ஊடக முதலாளிங்க, மக்களவை தேர்தல் நெருக்கத்துல இந்துத்துவாவுக்கு ஆதரவான சேதிகளை போடறதுக்கும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கிற மாதிரியான சேதிகளை போடறதுக்கும் ஒத்துக்கிட்டாங்க. அதுக்காக அவங்க லகரத்தில ஆரம்பிச்சு பல கோடிகள் வரைக்கும் பேரமும் பேசுனாங்க.

 

அந்த ஆபரேஷன்ல தமிழ்நாட்டுல இருக்கற இரண்டு முன்னணி செய்தி சானல்களும் அடங்கும். அந்த சானல்கள்ல ஒன்று, ரொம்ப காலமாக பத்திரிகைகூட நடத்திட்டு வருது. வங்க மொழியில வெளியாகிட்டு இருக்கற வர்த்தமான், டைனிக் சம்பத்னு ரெண்டே ரெண்டு பத்திரிகை மட்டும்தான் காசுக்கு விலை போக மாட்டோம்னு நெஞ்ச நிமிர்த்தி சொன்னுச்சு….”

”இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச சேதிதானே… இப்போ புதுசா என்ன இருக்கு” ஆர்வம் மிகுதியால் பேனாக்காரர் கொஞ்சம் அவசரம் காட்டினார்.

 

”சொல்றேன் கேளுங்க”

 

”சட்டப்பேரவை தேர்தலில் ஒரு வேட்பாளர்
அதிகபட்சமா 28 லட்சம் ரூவா செலவு
பண்ணலாம். அதேபோல மக்களவை
தேர்தல்ல ஒரு வேட்பாளர் 70 லட்சத்துக்கு
மேல செலவு பண்ணக்கூடாதுங்கறது
என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும்.
இதையெல்லாம் எந்த ஒரு முன்னணி
கட்சியும் கொஞ்சமும் சட்ட பண்ணாது.
ஆனா, தேர்தல் ஆணையத்துக்கு
செலவுக்கணக்கு காட்டும்போது மட்டும்,
அவங்க நிர்ணயித்த வரம்புக்குள்ள
கணக்கு வழக்குகள தாக்கல்
செஞ்சிடுவாங்க.

 

உதாரணமாக, சேலம் மக்களவை
தொகுதில 1800 வாக்குச்சாவடிங்க இருக்கு.
தேர்தலில் வெற்றி பெறும்னு எதிர்பார்ப்புல
இருக்கிற கட்சிகள், ஒவ்வொரு
வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய
கட்சிக்காரர்களோட செலவுக்குனு
நான்கு தவணைகள்ல கொடுத்துரும்.
இதுக்கே 18 கோடி ரூவா தேவைப்படும்.
அப்புறம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம்,
பொதுக்கூட்டங்களுக்கு ஆளுங்கள
அடிமாடுகள் கணக்கா விலை பேசி
கூட்டிட்டு வர்றது, பிரியாணி,
மது அது இதுனு குறைந்தப்டசம் 50 கோடி
ரூபா இல்லாம தேர்தல்ல போட்டியிடவே
முடியாதுங்கறதுதான் நிலம…
இது இல்லாம சீட் வாங்கறதுக்கு
கட்சிக்குனு வளர்ச்சி நிதி
வேற கொடுக்கணும்…”

 

”ஆனா சட்டம்னு ஒண்ணு இருக்கே….நாம சட்டத்துக்கு கட்டுப்பட்டுத்தானே ஆகணும்…” என நக்கலாகச் சொன்னார் நக்கல் நல்லசாமி.

 

”என்னதான் தெருத்தெருவா போய்
ஓட்டுக்கேட்டு பரப்புரை பண்ணினாலும்
டிவி சானல், பத்திரிகையிலயும் விளம்பரம்
கொடுக்க வேண்டியது தவிர்க்க
முடியாத ஒண்ணு. ஆனா, அப்படி
விளம்பரம் கொடுத்தா அதுக்கான
செலவுகளையும், வேட்பாளரோட
செலவுக்கணக்குல தேர்தல் ஆணையம்
சேர்த்துடும். தேர்தல் ஆணையம்
கெடுபிடியால தொழில்முறை குற்றவாளிகளான
அரசியல்வாதிங்க, பெய்டு நியூஸ்
மூலமாக தங்களுக்கான விளம்பரங்களை
செய்துட்டு வர்றாங்கப்பா.

 

பெய்டு நியூஸ்னா தெரியுமில்லே….
அதான்பா…. பார்க்கறதுக்கு வழக்கமான
செய்தி போலவே தெரியும். ஆனா,
அது சம்பந்தப்பட்ட பத்திரிகை, டிவிக்கு
காசு கொடுத்து வரவழைச்சது.
45 வருஷமா கச்சத்தீவை மீட்போம்னு
சொன்னாலும் இன்னும் நம்பிக்கிட்டு
ஓட்டுப்போடற சாமானியனுக்கு பத்திரிகை,
டிவில வர்றதுல எது பெய்டு நியூஸ்,
எது வழக்கமான செய்தினுலாம்
லேசுல கண்டுபுடிச்சிட முடியாது.
அந்தளவுக்கு அறிவு இருந்தா
நம்மாளு ஏன் இன்னமும் திராவிட
கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும்
மாறி மாறி ஓட்டு போட்டுட்டு
இருக்கப்போறான்…

 

இன்னும் உடைச்சே சொல்லிடறேன். நல்லா கேட்டுக்குங்கப்பா…

 

தமிழ்நாட்டுல சூரியக்குடும்பத்துக்குச் சொந்தமான நாளிதழில் வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரை சேதிகள வெளியிட, ஒவ்வொரு வேட்பாளர்கிட்டயும் 5 லகரங்கள் வரைக்கும் பேரம் பேசியிருக்காங்க. ஏப்ரல் 1ம் தேதில இருந்து 16ம் தேதி வரைக்கும் அவங்களோட பரப்புரை சேதிகள வெளியிடறதுக்குதான் இந்த ரேட்டு. குறைந்தபட்சம் 3 லகரம் வரைக்கும் வசூலிச்சிருக்காங்க.

 

காசு கொடுக்க வசதி இல்லாத சுயேச்சைங்ககிட்ட 500 பத்திரிகைகள் வாங்கிக்குங்க… சின்னதா ஒரு சேதி போட்டுத் தந்துடறோம்னும் சொல்றாங்களாம். ஆக மொத்தத்துல தேர்தல் காலத்துல எந்த சேதியும் சும்மா போட முடியாதுங்கறதுல கறாராக இருக்காங்கப்பா.

 

அவங்க அப்படினா…. இன்னொரு முன்னணி பத்திரிகை… அதாம்பா… எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதுக்கு முதல் பக்கத்துல சொம்படிக்குமே… ஆங்… அந்த பத்திரிகையேதான்…. இந்தியால தந்தி முறை வழக்கொழிஞ்சு போனாலும், அந்த பத்திரிகை மட்டும் இன்னமும் தந்தி அடிச்சுட்டு இருக்குப்பா… அந்தப் பத்திரிகையில் தேர்தல் பிரச்சார சேதிகள் வெளியிடணும்னா தினமும் குறைந்தபட்சம் ஆயிரம் பிரதிகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர் வாங்கிக்கணும். அதுதான் ஒப்பந்தம். அதாவது 5000ல இருந்து 6000 ரூவா வரைக்கும் செலவாகும்.

 

இப்படி செய்றதுல அந்த பத்திரிகைக்கு இன்னொரு அனுகூலமும் இருக்கு. தேர்தல் நேரத்துல எங்க பத்திரிகையதான் அதிகம்பேர் படிச்சாங்கனு வழக்கம்போல் பீத்திக்கனும்ல அதுக்குத்தான்.

 

இன்னொரு பத்திரிகைதான் இதுலலாம் டாப். காவி கட்சியோட சின்னத்த தாங்கியிருக்கற அந்தப் பத்திரிகையும் இதுல விதிவிலக்கு இல்ல…” என்று முடிப்பதற்குள் இடை மறித்தார் நக்கல் நல்லசாமி.

”அட… அந்த பத்திரிகை உண்மைக்கெல்லாம் உரைகல்லாக இருக்குமேப்பா… அது கூடவா இப்படி…? தோளை சுத்தி நூல் போட்டவங்க நியாயமா இருப்பாங்கனுல நினைச்சேன்…” நக்கல் நல்லசாமி வெள்ளந்தியாக கேட்டார்.

 

”வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு வடிவேலு மாதிரி நினைச்சிட்டு இருந்தா அது உன் தப்பு. அந்த பத்திரிகைதான் வேட்பாளர்கள்கிட்ட செய்திகள் போடறதுக்காக 6 லகரம் வரை கறாராக பேரம் பேசி வசூலிச்சிருக்கு. இப்படி எல்லா பத்திரிகைகளுமே பேக்கேஜ் முறையிலதான் இப்போ செய்தி போட் டுட்டு இருக்கு. இதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கும் நல்லாவே தெரியும். ஆனா தடுக்க வழி தெரியாமத்தான் தடுமாறிட்டு இருக்காங்க.

 

இப்படி குறுக்கு வழிகள்ல கல்லா கட்டற பணம் எதுவும் அந்தந்த பத்திரிகை நிறுவனங்களும் கள்ளக்கணக்குலதான் சேர்க்கும். இதெல்லாம் வருமானவரி கணக்குலயே வராது. ஜிஎஸ்டி வந்ததுக்குப் பிறகு, எல்லாரும் ஒழுங்க வரி கட்டிடறாங்கனு நினைச்சா… அது பாஜகவாலதான் இந்த தேசத்த காப்பாத்த முடியும்னு நம்புறதுக்கு சமம்” என்றார் செங்கழுநீரார்.

 

”இப்படிலாம் மக்கள்கிட்ட செயற்கையாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தறதுலாம் ஒரு பொழப்பா…. இதுல நான்காவது தூணுனு பெருமையாக சொல்லிக்கிறாங்க. இதுக்கு பேருதான் ஜனநாயகம்னு சொன்னா நாமளும் நம்பிடனுமாக்கும்…. இதுதான் போலி ஜனநாயகம்…” சலிப்புடன் சொன்னார் பேனாக்காரர்.

 

திண்ணை காலியானது.

 

– ஞானவெட்டியான்.