Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின்
லாப வெறியால் மலைவாழ் மக்கள்
சூறையாடப்படுவதையும், பெருமுதலாளியிடம்
லாபம் அடையும் ஆளுங்கட்சி எம்பி,
சாதிக்கட்சித் தலைவர் உள்ளிட்ட
அரசியல்வாதிகளையும் நையப்புடைக்கும்
படமாக ஏப்ரல் 5ல் வெளிவந்திருக்கிறது, உறியடி 2.

மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு படம் தமிழில் வெளிவந்திருப்பதை நோக்கும்போது, கருத்துச்சுதந்திரம் இன்னும் இந்த தேசத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அல்லது சமகால அரசியல் பிரச்னைகளையும், அரசியல்வாதிகளையும் துகிலுறியும் காட்சிகள் இருப்பதை அறியாமல் படத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதோ என்றும் கருத வேண்டியதிருக்கிறது.

 

நடிகர்கள்:

 

விஜய்குமார்
விஸ்மயா
சுதாகர்
மற்றும் பலர்

 

ஒளிப்பதிவு: பிரவீண்குமார்

இசை: கோவிந்த் வசந்தா

எடிட்டிங்: லினு.எம்

தயாரிப்பு: 2டி எண்டர்டெயின்மென்ட்

இயக்கம்: விஜய்குமார்

 

ஒரு வரி கதை:

 

பன்னாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான
ஒரு பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து
வெளியேறும் விஷ வாயுவால்
ஏராளமான மலைவாழ் மக்கள்
மூச்சுத்திணறி பலியாகின்றனர்.
இதனால் வெகுண்டெழும் மக்களால்
அந்த ஆலை என்ன ஆனது?
அவர்களை அரசும், அதிகார வர்க்கமும்
எப்படி எல்லாம் ஒடுக்குகிறது?
இறுதியில் வெற்றி பெற்றது யார்?
என்பதை நெற்றிப்பொட்டில்
அடித்தாற்போல் சொல்கிறது உறியடி 2.

 

திரைமொழி:

 

செங்கதிர்மலை என்ற ஊரில் ராஜ் பிரகாஷ் என்ற பன்னாட்டு நிறுவன முதலாளிக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. ஆலையை தணிக்கை செய்யும் அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக்கொண்டு தடையில்லா சான்றிதழ் அளித்து விடுகின்றனர். இதனால் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படாமலேயே ஆலை தொடர்ந்து இயங்குகிறது.

 

திடீரென்று ஒருநாள், ஆலையில் இருந்து கசிந்த எம்ஐசி எனப்படும் மெத்தைல் ஐசோ சயனைடு நச்சு வாயுவால், ஏராளமான மலை கிராம மக்கள் மூச்சுத்திணறி கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். அந்த ஆலையில் பணியாற்றி வரும் நாயகனும் அவருடைய நண்பனும் ஊர் மக்களை திரட்டி போராட்டம் நடத்துகிறார். அவர்கள் மீது காவல்துறை மூலம் அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்படுகிறது. இதைப்பயன்படுத்தி, உள்ளூர் சாதிக்கட்சித் தலைவரின் குண்டர்கள் நாயகனை கொல்லத் துடிக்கின்றனர். அதிலிருந்து நாயகன் மயிரிழையில் தப்பிக்கிறார்.

 

ஒட்டுமொத்த மக்களின் கோபமும், அரசியல் அதிகாரம், பணம் ஆகியவற்றை எல்லாம் தூள் தூளாக்கி எப்படி வென்று காட்டுகிறது என்பதை பரபரப்பான திரைக்கதை, உயிர்த்துடிப்பான இசைக்கோவை, அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன் தத்தகிட தத்தகிட தித்தோம் என்று முண்டாசுக்கவியின் கனல் தெறிக்கும் பாடலுடன் படம் நிறைவடைகிறது.

 

ஷொட்டு!

படத்தின் காட்சியமைப்புகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சி, போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக்கசிவு ஆகிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக துணிச்சலாக படமாக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் வசனங்கள், அதிகார போதையில் மக்களை மறந்த அரசியல்வாதிகளை செவுளில் அறையும் வகையில் இருக்கின்றன.

 

‘விசாரணை எல்லாம் வேணாம்… எங்களுக்குத் தேவை உடனடி தண்டனைதான்’ ‘அரசியல்வாதிகள் நம்மள ஒதுக்கிடலாம். ஆனா…அரசியல் நம்மள ஒதுக்கித்தள்ளிடாது’ ‘எல்லார்க்கும் பொதுவான காத்தை தனி ஒரு ஆளு எப்படி மாசுபடுத்தலாம்?’ என்பது போன்ற வசனங்கள் செறிவுடன் இருக்கின்றன.

 

ஒரு காட்சியில், நாயகனை பார்த்து
சீருடையில் இருக்கும் காவலர் ஒருவர்,
‘டேய் இங்க வாடா’ என்று அழைப்பார்.
அதற்கு நாயகன், ‘என்ன சொல்லுடா’
என பட்டென்று கேட்பார்.
அதிர்ச்சியில் உறைந்து நிற்கும்
காவலரிடம், ‘இங்கே மரியாதை
கொடுத்தாதான் மரியாதை கிடைக்கும்’
என்று சொல்லும் காட்சியை
ரசிகர்கள் சீழ்க்கை அடித்து
கொண்டாடுகின்றனர்.

 

மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும்
என்பதுதான் கார்ல் மார்க்ஸின் கோட்பாடு.
அதை காட்சிமொழிகளால் உணர்த்துகிறார்
படத்தின் நாயகனும், இயக்குநருமான விஜய்குமார்.
பல காட்சிகளின் பின்னணியில்
சிவப்பு நிறம் தென்படுகிறது. அந்த நிறம்,
உழைக்கும் மக்களின் குறியீடாகவும்,
படைப்பாளியின் சிந்தனையாகவும்
வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. பூச்சிக்கொல்லி
ஆலைக்கு எதிராக கிளர்ந்து எழும்
காட்சியின் பின்னணியில் நாயகனின்
வீட்டு சுவரில் மார்க்ஸூம், சே குவேராவும்
தென்படுகின்றனர்.

 

முக்கியமான சமகால பிரச்னையைப் பற்றி பேசும் இந்தப்படத்திலும் காதல் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை மையக்கதைக்கு எந்த விதத்திலும் ஊறு ஏற்படுத்தாமல் ரசிக்கும்படி இருக்கின்றன. ஒருகட்டத்தில் நாயகி விஸ்மயாவும், மையப்பிரச்னையில் மக்களுடன் ஒன்றிணைந்து போராடக்கூடிய போராளியாகவும் உருவெ டுப்பதுபோல் காட்டியிருப்பது வணிக சமரசமற்ற சிந்தனையாக கருதுகிறேன். நாயகி விஸ்மயா, நம் பக்கத்துவீட்டுப் பெண் போல இருப்பதும் கவர்கிறது.

 

நாயகனின் நண்பர்களாக வரும் ‘பரிதாபங்கள் புகழ்’ சுதாகர் மற்றும் இன்னொரு நண்பராக வருபவரும் கதையின் போக்கை உணர்ந்து நடித்திருக்கின்றனர். படத்தில் எல்லோருமே யதார்த்த முகங்களாக வருவதுகூட கதையின் போக்கை கனமாக நகர்த்திச் செல்ல பெரிதும் பயன்பட்டிருக்கிறது. செங்கை குமார் பாத்திரத்தில் நடித்த நடிகரின் ஒப்பனையும், உடல்மொழியும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த நிஜ அரசியல்வாதி ஒருவரை பிரதிபலிப்பதுபோல் உள்ளது.

 

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. அதிலும், ‘இறைவா…’ பாடல் காட்சிகளின் கனத்தையும், துயரத்தையும் பார்வையாளர்களுக்கு எளிதில் கடத்தி விடுகிறது. உச்சக்கட்ட காட்சியில் பாரதியின், ‘அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தத்தகிட தத்தகிட தித்தோம்’ என்ற பாடலின் பின்னணியோடு பன்னாட்டு பெரு முதலாளி, சாதிக்கட்சித் தலைவர், ஆளுங்கட்சித் தலைவர் என எல்லோரையும் வதம் செய்வது பார்வையாளர்களுக்கும் உக்கிரத்தை ஏற்படுத்தி விடுகிறது.

 

அந்தப்பாடலின் இசைக்கோவை, பார்வையாளர்களிடம் உணர்ச்சியை கொப்பளிக்கச் செய்கிறது. காலம் கடந்தும் உணர்ச்சிப் பிழம்பை ஊட்டுகிறான் பாரதி. அண்மைய படங்களில் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு, பார்வையாளர்கள் கடைசியில் எழுந்து நின்று கைத்தட்டுவது இந்தப் படத்திற்குதான்.

 

பாக்சினோ பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து ராட்சத குழாய் வழியே எம்ஐசி விஷ வாயு வெளியேறும் காட்சியில் ஒருவித பதைபதைப்பு ஏற்படுத்தி விடுகிறது பிரவீன்குமாரின் கேமரா. மலைக்கிராம மக்கள் கொத்து கொத்தாக மடியும் காட்சியிலும், மருத்துவமனையில் பலர் உயிருக்குப் போராடும் காட்சிகளிலும், ஒரே இடத்தில் பல சடலங்களை எரியூட்டப்படும் காட்சிகளிலும் பெரிதும் கவனம் ஈர்க்கிறது ஒளிப்பதிவு.

 

குட்டு:

 

ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக சொல்ல வேண்டிய படத்தை, மிகச்சிறு பட்ஜெட்டில் சொல்லி இருப்பது காட்சிகள்தோறும் தெரிகிறது. விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறு அரசு மருத்துவமனையிலேயே சேர்க்கப்படுவது, எம்ஐசி வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல் மருத்துவர்கள் குழம்பித் தவிப்பது, நாயகி மருத்துவர் என்பதால் அவரை பல காட்சிகளில் வெள்ளை சீருடையிலேயே நடிக்க வைத்திருப்பது என சில குறைகள் இருக்கின்றன.

 

பெரு முதலாளி, ஆளுங்கட்சி எம்பி, சாதிக்கட்சித் தலைவர் என முக்கிய பிரமுகர்களை சில இளைஞர்கள் கடத்திச்சென்று பழி தீர்ப்பது போன்ற நம்பகத்தன்மையற்ற காட்சியும் இருக்கிறது.

 

படம் பார்க்கலாம்:

 

சில குறைகள் இருந்தாலும், அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கருத்தை பதிவு செய்த விதத்தில் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இரண்டாவது முறையாகவும் வெற்றிகரமாக உறியடித்திருக்கிறார் இயக்குநர் விஜய்குமார். இப்படி ஒரு கதையை படமாக்க துணிந்த நடிகர் சூர்யாவுக்கும் இந்த வெற்றியில் முக்கிய பங்கு இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 

– வெண்திரையான்