புத்தாண்டின் முதல் வாரத்திலேயே பங்குச்சந்தையில் இப்படி ஒரு பேரிடி வந்திறங்கும் என்று முதலீட்டாளர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில், கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி ஆறு மாதங்கள், பங்குச்சந்தை பெரும்பாலும் சரிவிலேயே இருந்தன. புதிய ஆண்டிலாவது எழுச்சி பெறும் என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு மீண்டும் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது பங்குச்சந்தை.
ஜனவரி 6ஆம் தேதியான
நேற்றைய தினம்,
இந்தியப் பங்குச்சந்தைகள்
கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
வர்த்தக நேர முடிவில்,
மும்பை பங்குச்சந்தையான
சென்செக்ஸ், 1258 புள்ளிகள்
(1.59%) சரிந்து, 77964
புள்ளிகளில் முடிந்தது.
தேசியப் பங்குச்சந்தையான
நிஃப்டி குறியீடு 23616 புள்ளிகளுடன்
வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நிஃப்டி 388 புள்ளிகளை
(1.62%) இழந்தது.
பங்குச்சந்தை தடாலடியாக
சரிந்ததற்கு சில முக்கிய
காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சீனாவில் தற்போது ஹெச்எம்பிவி
என்ற புதிய வைரஸ் தொற்று
வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தொற்று போல
இந்த காய்ச்சலின் தாக்கமும்
உலகம் முழுவதும் ஏற்படலாம் என்றும்,
மீண்டும் ஊரடங்கு உத்தரவு
அமல்படுத்தப்படலாம் என்ற
தகவலும் கசிகிறது.
அதற்கேற்றார்போல்,
பெங்களூருவில் இரண்டு
குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி
வைரஸ் தொற்று இருப்பதை
ஐசிஎம்ஆர் உறுதி செய்துள்ளது.
எனினும், ஊரடங்கு உத்தரவு
குறித்து இந்திய அரசிடம் இருந்து
எந்தத் தகவலும் இல்லை
என்றாலும் கூட, முதலீட்டாளர்களிடம்
அதுகுறித்த அச்சம் இருப்பதாகச்
சொல்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
அடுத்து,
ஜப்பான் நாட்டின்
மத்திய வங்கியின் வட்டி
அதிகரிப்பு குறித்த
அறிவிப்பும் சர்வதேச
பங்குச்சந்தைகளில் கணிசமான
சரிவை ஏற்படுத்தி உள்ளதாகச்
சொல்கின்றனர். இதன் தாக்கமும்
இந்திய சந்தைகளில்
எதிரொலித்ததன் விளைவுதான்
பங்குகளின் வீழ்ச்சிக்குக்
காரணம் என்கிறார்கள்.
இந்த பதற்றம் காரணமாக
இந்திய பங்குச்சந்தைகளில்
நேற்று ஒரே நாளில்
8.30 லட்சம் கோடி ரூபாய்
வரை முதலீட்டாளர்களுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி,
இந்திய பங்குச்சந்தையின்
மதிப்பு 441.48 லட்சம் கோடி
ரூபாயாக உள்ளது.
கடந்த வெள்ளியன்று (ஜன. 3)
சந்தை மதிப்பு 449.78 லட்சம்
கோடி ரூபாயாக இருந்தது.
எஸ்பிஐ (2.13%), யூனியன் வங்கி (7.53%), மஹாராஷ்டிரா வங்கி (4.50%) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், கோட்டக் வங்கி (3.26%), ஹெச்டிஎப்சி வங்கி (2.23%) உள்ளிட்ட தனியார் வங்கிகளின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. ஆர்விஎன்எல், ஐஆர்எப்சி, ரயில்டெல், என்சிசி, இர்கான் உள்ளிட்ட ரயில்வே பங்குகள் மட்டுமின்றி என்பிசிசி, ஹட்கோ, சுஸ்லான் என இந்திய பொதுத்துறை பங்குகள் பெரும்பாலானவை பலத்த அடி வாங்கின.
சந்தை,
ரத்தக்களரியான போதிலும்
டைட்டன், ஐசிஐசிஐ வங்கி
மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை
1.15 சதவீதம் வரை உயர்ந்தன.
பங்குச்சந்தை பலவீனமாக
இருந்தபோதும், நேற்றைய
வர்த்தகத்தில் 159 பங்குகளின்
விலை 52 வார உச்சத்தை
பதிவு செய்துள்ளன.
பிஎஸ்இ சந்தையில்
பட்டியலிடப்பட்டு உள்ள
54 பங்குகளின் விலை
52 வாரங்களில் இல்லாத
அளவுக்கு கடும்
சரிவைச் சந்தித்துள்ளன.
தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1564 புள்ளிகள் (2.70%) சரிந்து 56366 புள்ளிகளில் நிறைவு அடைந்தது. நிஃப்டி வங்கி பங்குகள் 1066 புள்ளிகளை இழந்து 49922 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று கொரோனா அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் சொன்னாலும், இன்னும் சில நாள்களுக்கு பங்குச்சந்தைகள் சரிவுடன்தான் இருக்கும் என்கிறார்கள் சந்தை ஆராய்ச்சி நிபுணர்கள்.
- ஷேர்கிங்