Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது.

இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது.

அண்மையில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பெரும் சரிவு, அக்கட்சியை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. இத்தனைக்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சியிலிருக்கும் உத்தரபிரதேசத்திலேயே இந்த நிலை. அங்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் ஒரே அணியாக எதிர்த்து நின்றதை பாஜக மோசமான சமிக்ஞையாகவே கருதுகிறது.

இந்த கூட்டணியை, அகில இந்திய அளவில் தலித்துகளை பாஜகவுக்கு எதிராக அணிதிரட்டும் துவக்கப்புள்ளியாகவே பார்க்கிறது.

சீர்கேடு 1:

ரிசர்வ் வங்கி, நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன்கூட கலந்தாலோசிக்காமல் சர்வாதிகாரத்துடன் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துவிட்டதாக அக்கட்சிக்குள்ளிருந்தே யஷ்வந்த் சின்ஹா மேடைக்கு மேடைக்கு முழங்கி வருகிறார். பணமதிப்பிழப்புக்குப் பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும், பொருளாராதார வளர்ச்சியும் மோசமான நிலையில் சரிந்து வருவதை பொருளியல் வல்லுநர்கள் கவலையுடன் நோக்குகின்றனர். ஸ்திரமான வளர்ச்சியை எட்ட இன்னும் சில காலம் ஆகும் என்கின்றனர். ஆனால், புதிய இந்தியா பிறந்துவிட்டதாக மோடி பேசி வருகிறார்.

சீர்கேடு 2:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தாறுமாறாக எகிறிக் கொண்டே இருக்கிறது. இதன் ஆச்சர்யமான முரண்பாடுகளை நாட்டில் உள்ள லெட்டர்பேடு கட்சிகள் வரை விமர்சனம் செய்தும், முறையான பதில்களை அளிக்கவில்லை பாஜக.

சீர்கேடு 3:

தொடக்கத்தில் இருந்தே பாஜக, உயர் வகுப்பினருக்கான கட்சியாகவும், உயர் குடியினராகக் கருதிக்கொள்ளும் பிற இடைநிலைச்சாதியினருக்கான கட்சியாகவுமே பார்க்கப்பட்டு வருகிறது. தலித்துகளின் மீதும் கரிசனம் உண்டு என்று காட்டிக் கொள்வதற்காக கிருஷ்ணசாமிகளை விலைக்கு வாங்கினாலும்கூட, அக்கட்சிக்கு உள்ளூர அப்படியொரு சித்தாந்தம் கிடையாது. அதன் உள்ளக்கிடக்கையைத்தான் அண்மையில் உச்ச நீதிமன்றமும் பிரதிபலித்தது.

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்து இருந்தது. அதை ரத்து செய்யக்கோரி, வட இந்தியாவில் அண்மையில் பாஜக மற்றும் உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இதில், 9 பேர் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் எம்எல்ஏக்கள் இருவர் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இவ்விவகாரத்தில் நடுவண் பாஜக அரசு மீது நாடு முழுவதும் தலித் பிரிவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சீர்கேடு 4:

நாடு முழுவதும் 52 பல்கலைக்கழகங்களுக்கும், 2 தனியார் கல்லூரிகளுக்கும் கடந்த மாதம் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம், கல்வி மற்றும் இதர பொது செலவினங்கள் அதிகரிக்கக் கூடும் என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். முற்றிலும் கல்வியை தனியார்மயப்படுத்தலுக்கான முயற்சி என்றும் கண்டனனங்கள் எழுந்துள்ளன. இதுவும் ஆளும் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்கேடு 5:

கடந்த மக்களவை தேர்தல் பரப்புரையின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்ப்படும் என்றது. ஆனால் ஆட்சிக்கு வந்து 48 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் கொள்கையில் 25 விழுக்காடு தொலைவுகூட பயணிக்கவில்லை. 90 ஆயிரம் ரயில்வே பணியிடங்களுக்கு 25 மில்லியன் பேர் விண்ணப்பிக்கக் கூடிய அவல நிலையில்தான் இந்தியாவின் வேலைவாய்ப்புகள் உள்ளன.

சீர்கேடு 6:

கடந்த மாதம் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் போட்டித்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள் கடும் கொதிப்புக்கு உள்ளாகினர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதம், பிளஸ்2 பொருளியல் தேர்வுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்தன. இதனால் வேலை தேடும் இளைஞர்களும், மாணவர்களும் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இளைஞர் சமூகத்தையே இந்த அரசு காவு கொடுத்துவிட்டதாகவும் கருத்துகள் எழுந்தன.

சீர்கேடு 7:

15வது நிதிக்குழுவில் தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தவிர்த்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதி ஒதுக்கீடு குறைப்பைக் கண்டித்து, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறினார். மேலும், பாஜக மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் கொண்டு வந்தார்.

மக்களவையில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தன. அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இடம் கொடுக்காத வகையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மூலம் புத்திசாலித்தனமாக அவையைக் கொண்டு போனது பாஜக. பகடையாக பயன்படுத்தப்பட்டது அதிமுக. மக்களவை கூட்டத்தொடரும் முடிவுக்கு வந்தது.

சீர்கேடு 8:

இந்து தேசியம் குறித்த சித்தாந்தத்தில் முனைப்பு காட்டும் சங்க பரிவாரத்தினர், மேற்கு வங்கத்தில் பார்வையற்ற முஸ்லீம் தம்பதியை கட்டாயப்படுத்தி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடச் செய்த கொடுமையும் அரங்கேறியது. இதன்மூலம் எப்படியாவது இந்நாட்டின் பன்மைத்தன்மையை ஒடுக்கி விட வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது.

சீர்கேடு 9:

மாட்டிறைச்சி மற்றும் கால்நடை இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக கிராமப்புற பொருளாதாரம் கணிசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதை மீட்பது சற்று சவாலானது என்றும் பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

சீர்கேடு 10:

தலைநகர் தில்லியில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக உச்ச நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது. அந்தளவுக்கு அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சியை ஒடுக்கும் வகையில் வன்முறைகளை காவல்துறையினர் மூலமே கட்டவிழ்த்து விடுகிறது பாஜக அரசு. தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு குடைச்சல் கொடுத்து வருவதோடு, தேர்தல் ஜனநாயகத்தையும் சீர்குலைத்து வருகிறது.

சீர்கேடு 11:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஆதார் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக, ஆட்சிக்கு வந்த பிறகு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் ஆதார் மயமாக்கியது. உச்ச நீதிமன்றமே, ரத்த மாதிரிகள், டிஎன்ஏ ஆய்வு முடிவுகளைக் கேட்டாலும் ஆச்சர்யமில்லை போலிருக்கு என்று நடுவண் அரசை கிண்டல் செய்தது. ஆதார் அட்டை இல்லாததால் நலத்திட்ட உதவிகள் மறுக்கப்பட்ட நிகழ்வுகளும் மக்களிடம் நரேந்திர மோடி அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சீர்கேடு 12:

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தைக் கொண்டு வந்த பாஜக அரசு, அதிலும் சொதப்பியுள்ளது. அதிகபட்சமாக 18 விழுக்காடு வரி வரம்பு இருக்கலாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றோரின் ஆலோசனைகள் புறந்தள்ளப்பட்டு, உச்சபட்சமாக 22 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்டது.

கார்ப்பரேட் நிறுவன பொருள்கள் பலவற்றுக்கு 0 முதல் 5 விழுக்காடு வரி வரம்பும், குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு 8 முதல் 12 விழுக்காடு வரியும் விதித்து, கிராமப்புற பொருளாதாரத்தை நசுக்கியது பாஜக. நாடு முழுவதும் எழுந்த கடும் அதிருப்தி காரணமாக ஒவ்வொரு ஜிஎஸ்டி அமர்வின்போதும் கணிசமான பொருள்களின் உச்சபட்ச வரி வரம்பை குறைத்தது நடுவண் அரசு.

ஜிஎஸ்டி வரி விதிப்பால், பல அத்தியாவசிய பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் நடுத்தர மக்களின் மாதாந்திர வரவு செலவும் கணிசமாக கூடியிருக்கிறது.

ஜனநாயக குரல்வளையை ஒடுக்கும் அரசு:

பாஜக அரசு பல துறைகளிலும் கடும் தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில், அதைப்பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகை, டிவி சேனல்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. செய்தி ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்றும் பல செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன. அச்சு ஊடகங்களுக்கு டிஏவிபி விளம்பரங்கள் கிடைக்காது என்றும் நெருக்கடி கொடுக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களையும் ஒடுக்கும் நோக்கில் போலியான செய்திகளை ஒளிபரப்பும், வெளியிடும் செய்தியாளர்களின் தேசிய அங்கீகாரத்தை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை ரத்து செய்யவும், மீண்டும் தவறுகள் தொடரும்பட்சத்தில் நிரந்தரமாக செய்தியாளர் அங்கீகாரத்தை முடக்கப்படும் என்றும் அண்மையில் அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக தலையிட்டு, உத்தரவை திரும்பப் பெற வைத்தார்.

அடுத்த ஆண்டில் அமலாக்கம்:

இப்போதைக்கு இவ்விவகாரம் அமுங்கி விட்டாலும் அடுத்த ஆண்டின் (2019) தொடக்கத்திலேயே, ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அச்சு ஊடக பிரதிநிதிகள், நேஷனல் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் சமூக ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள பிரதான ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களைக் கண்டே பாஜக அச்சத்தில் உள்ளதாக அக்கட்சியின் வட்டாரத்தில் கூறுகின்றனர். தேர்தல் நெருக்கத்தில், பணமதிப்பிழப்பு, ஆதார், காவிமயம் குறித்த செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டால், அதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலிக்குமே என கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ-ன் படி, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது. அல்லது தேர்தல் நெருக்கத்தில் இந்தியாவில் மட்டும் சமூக ஊடகங்களை முடக்கி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நடுவண் அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கிடையே, இங்குள்ள பிரதான ஊடகங்களை நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றில் பாஜக மீதான எதிர்மறை கருத்துகளை திட்டமிட்டே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அதன்மூலமாக பாஜகவுக்கு ஆதரவான பேச்சுக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஒரு சாரார் யோசனை தெரிவித்துள்ளனர்.

ஃபாசிஸ பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் ஊடகங்களின் குரல்வளையையும் நெறித்துவிட அக்கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

– பேனாக்காரன்.