Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தாயின் சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் மகன்; ஆம்புலன்ஸ் வராததால் அவதி

இந்தியாவில் எந்த ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் என்றாலும், சந்தேகமே இல்லாமல் அத்தகைய நிகழ்வுகள் நடக்கும் இடம் உத்தரபிரதேச மாநிலம்தான் என்று சட்டென சொல்லி விடலாம்.

மாட்டிறைச்சி உண்போரை தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக் கொல்வது; பசுமாடுகளை ஏற்றிச்செல்லும்போது வாகன ஓட்டுநரை சாலையில் இழுத்து வந்து சாகடிப்பது; கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனைக்குச் சென்ற ஹிந்து பெண்ணை ஊர் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி எரிப்பது; சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை உருட்டுக் கட்டையால் கதறக் கதற தாக்கிக் கொல்வது;

ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியானது; ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க மறுத்ததால் தாயின் சடலத்தை துணியில் சுற்றி மகனே சுமந்து செல்வது… என உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்கும்.

இப்போதும் அதேபோன்ற ஒரு துயரமான நிகழ்வு…

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்துடன் அவருக்கு செயற்கை சுவாசமும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அந்த மூதாட்டியும், அவருடைய மகனும் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தனர். செயற்கை சுவாசம் அளிப்பதற்காக பொருத்தப்பட்ட முகக்கவசத்துடனும், அவருக்கு சிறுநீர் வெளியேறுவதற்காக பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பையுடனும் வெளியே நின்று கொண்டிருந்தார். மூதாட்டியின் அருகில்,

அவருடைய மகன் ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடியும், மற்றொரு கையில் தாய்க்கு பொருத்தப்பட்ட சிறுநீர் பிளாஸ்டிக் பையை பிடித்தபடியும் நின்று கொண்டிருந்தார்.

இந்தக் காட்சியை பத்திரிகை புகைப்படக்காரர்கள் சிலர் புகைப்படம் எடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்தப் படங்கள், #ஆக்ரா என்ற பெயரில் ஹேஷ்டேக் செய்திருந்தனர். நோயாளியான தாயும், உதவிக்கு யாருமின்றி ஆக்ஸிஜன் சிலிண்டரை மகன் சுமந்து நிற்கும் காட்சி, பலரையும் உருக வைத்தது.

உத்தரபிரதேசத்தில் நிலவும் மருத்துவமனை சீர்கேடுகளையும், பாஜகவைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் பலர் கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

யோகியின் ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம், சோமாலியாவைக் காட்டிலும் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், உத்தரபிரதேசம் மருத்துவ சிகிச்சையில் ஒரு நூற்றாண்டு பின்தங்கி இருப்பதாகவும் பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ”நோயாளியை இதே மருத்துவமனையின் வேறு ஒரு கட்டடத்தில் உள்ள வார்டுக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை, அழைத்திருந்தோம். அதற்குள் சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுவிட்டனர்,” என்று மழுப்பலான பதிலைக் கூறியுள்ளனர்.