Sunday, May 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலத்தில் ‘வாஷ் அவுட்’ திமுக; உள்ளடி வேலையால் ‘உள்ளதும்’ போச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மற்றெந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத கூடுதல் அனுகூலம் திமுகவுக்கு இருந்தது. ஆளுங்கட்சி அந்தஸ்து, ஜம்போ கூட்டணி, பண பலம், எண்ணற்ற நலத்திட்டங்கள் என பல சாதகமான அம்சங்கள் இருந்தும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. சேலம் மாவட்டத்தில் 2011க்குப் பிறகு மீண்டும் ‘வாஷ் அவுட்’ ஆகியிருக்கிறது திமுக.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் வாரிச் சுருட்டியது. 2016, 2021 தேர்தல்களில் சேலம் வடக்குத் தொகுதியை மட்டும் திமுக வசப்படுத்தியது. மற்ற 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியது.

இந்நிலையில், 2026 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் கைவசம் இருந்த ஒற்றைத் தொகுதியையும் இழந்து மொத்தமாக ‘வாஷ்அவுட்’ ஆகியிருக்கிறது சூரியக்கட்சி. எடப்பாடி பழனிசாமி மண்ணில் அடியோடு மண்ணைக் கவ்வ நேர்ந்ததில் அறிவாலய மேலிடமோ ரொம்பவே அப்செட்.

சேலத்தில் திமுகவின் சரிவுக்கான பின்னணி குறித்து மூத்த உடன்பிறப்புகளிடம் பேசினோம்.

”கடந்த 2016, 2021 தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டிருந்த அமைச்சர் ராஜேந்திரன், இந்தமுறை ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் வாய்ப்பை த.வெ.க.விடம் இழந்துவிட்டார்.

மத்திய மா.செ.வான அமைச்சர் ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. ‘ஈகோ’ மற்றும் ‘இன்செக்யூரிட்டி’ மனநிலை காரணமாக கட்சிக்குள் பிரித்தாளும் உத்தியைக் கையாண்டு வந்தார், ராஜேந்திரன். அதுவே அவருக்கும், கட்சிக்கும் பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது.

தனது ஆதரவாளர்கள், எதிரணியைச் சேர்ந்தவர்களிடம் எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கறாராக இருப்பார் ராஜேந்திரன். அப்படி யாராவது தொடர்பில் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக கட்டம் கட்டிவிடுவார்.

ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்து வந்த மாநகர செயலாளர் ஜெயக்குமார், சூரமங்கலம் ப.செ. சக்கரை சரவணன், கவுன்சிலர் குமரவேல், எஸ்.டி.கலையமுதன், கன்னங்குறிச்சி குபேந்திரன், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரை பொய்யான புகார்களைக் கூறி கட்டம் கட்டினார். மண்டல பொறுப்பு அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுடன் நெருக்கமான நட்பு இருப்பதால் ராஜேந்திரன் சொல் பேச்சுக்கெல்லாம் அவரும் ஆடுகிறார். இன்றைய நிலையில், மண்டலக்குழுத் தலைவர்கள் உமாராணி, அசோகன் உள்பட 25க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்கள்.

அரசியல் களத்தில் போட்டியாக உருவெடுப்பார்கள் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே மாஜி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், கிச்சிப்பாளையம் குணசேகரன், இளைஞரணி அருண் பிரசன்னா ஆகியோரை ஒதுக்கி வைத்தார். எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களை அழைப்பதில்லை. தனிப்பட்ட ‘ஈகோ’வால் தனக்கு எதிராக, ஒரு பெரிய அதிருப்தி கோஷ்டியை சீனப் பெருஞ்சுவர் போல அவரே கட்டி எழுப்பிவிட்டார். அவர்கள் எல்லோருமே இந்த தேர்தலில் ராஜேந்திரன் மீண்டும் ஜெயித்து விடக்கூடாது என அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வெளிப்படையாகவே இறங்கி வேலை செய்தனர். இத்துடன் த.வெ.க.,வின் திடீர் எழுச்சியும் ஒன்று சேர, ராஜேந்திரனுக்கு தோல்வியை பரிசளித்துவிட்டது.

கடந்த ஜன. 27, ‘புதிய அகராதி’ இணைய இதழில், ‘அமைச்சர் ராஜேந்திரன்: தரைதட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், ‘தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி பெறுவது ‘கேக் வாக்’ போல அத்தனை சுலபமல்ல’ என்று தீர்க்கமாக எழுதி இருந்தீர்கள். அதுதான் இப்போது நடந்தது. வேட்டி, சேலை, பாத்திரம் உள்ளிட்ட பரிரசுப் பொருட்களும், வாக்காளர்களுக்கு 2500 ரூபாய் என தாராளமாக பாசனம் செய்தும் சேலம் வடக்கில் ராஜேந்திரன் 14034 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க.,விடம் தோல்வி அடைந்தார். இது, அவர் வெற்றி பெற்றபோது இருந்த வித்தியாசத்தை விட அதிகம்.

வாக்காளர்களுக்கு ஜான்சன்பேட்டை, பிள்ளையார் நகர், பொன்னம்மாபேட்டை, அல்லிக்குட்டை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாகப் போய்ச்சேரவில்லை. அவருடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே கணிசமான தொகையைச் சுருட்டிக் கொண்டனர்.

சேலம் மேற்குத் தொகுதியில் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு சீட் கொடுக்கப்பட்டதால், அழகாபுரம் மோகன்ராஜூக்காக மா.செ. தரப்பு ஆள்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மேலும், தவெகவின் ‘லட்சுமண’ வியூகத்திற்கு முன்னாள் தேமுதிக, பாமகவால் ஈடுகொடுக்க முடியாமல் இரு கட்சிகளுமே தோல்வி கண்டன.

ஓமலூர் தொகுதியில் தனிப்பெரும் செல்வாக்குடன் இருக்கும் மாஜி எம்எல்ஏ தமிழரசுவை கட்டம் கட்டியதால் பொறுமையிழந்த அவர், தேர்தல் நெருக்கத்தில் அதிமுகவில் இணைந்தார். பாமக கூட்டணி மற்றும் தமிழரசு வருகையில் அதிமுகவுக்கு மேலும் பலம் கூடியது. இதனால் அங்கு ‘சிட்டிங்’ எம்எல்ஏ மணி மீண்டும் அபாரமாக வெற்றி பெற்றார். தளபதி நற்பணி மன்றம் மகேந்திரன், இளைஞரணி அருண் பிரசன்னா ஆகியோரை ஓமலூரில் தேர்தல் பணிகளில் பயன்படுத்தத் தவறிவிட்டார் மா.செ.,

சேலம் தெற்கில் தனது ஆதரவாளர் என்ற ஒரே காரணத்தால் கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு இல்லாத கந்துவட்டி லோகநாதனை நிறுத்தியதால் அங்கும் திமுகவுக்கு தோல்வியே பரிசாகக் கிடைத்தது. ராஜேந்திரனின் தவறான அணுகுமுறையால் தன் தொகுதி உள்பட மத்திய மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்,” என்கிறார்கள் மூத்த உ.பி.க்கள்.

சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் திமுகவின் தோல்விக்குக் காரணம் குறித்தும் விசாரித்தோம்.

”எடப்பாடி தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்வதற்காக கட்சி மேலிடத்தில் இருந்து 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. அதில் 50 சதவீத தொகையை, கிழக்கு மா.செ. டி.எம்.செல்வகணபதி மேட்டூர் தொகுதிக்குக் கொண்டு சென்று விட்டார். அவருடைய உறவினரான மிதுன் சக்கரவர்த்தி மேட்டூர் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு மட்டும் வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாய் பட்டுவா செய்துள்ளார். ஆனாலும் அங்கும் 50 சதவீதத்திற்கு மேல் பணம் போய்ச்சேரவில்லை.

எடப்பாடி தொகுதியில் அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் தரப்பட்ட நிலையில், திமுக தரப்பில் வெறும் 500 ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது.

தான் பரிந்துரைத்த நபர்களுக்கு சீட் கொடுக்காததால் எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் செல்வகணபதி ஆரம்பத்தில் இருந்தே கவனம் செலுத்தவில்லை. மேலும், வேட்பாளர் காசி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ‘வளர் அன் கோ’ சுப்ரமணி, மாஜி இளைஞரணி அருணாச்சலம், ரவிச்சந்திரன், அம்மாசி, மேட்டூர் மாஜி எம்எல்ஏ கோபால், அப்துல் சலாம், கொளத்தூர் தவசிராஜா உள்பட வீரபாண்டியார் ஆதரவாளர்களை முற்றாக ஒதுக்கி வைத்திருக்கிறார். பந்தல் வன்னியர்களுக்கு மட்டும் கட்சியில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இதனால் டிஎம்எஸ் மீது கிழக்கு மாவட்ட திமுகவில் ஏகப்பட்ட அதிருப்தி நிலவுவதால் கழக நிர்வாகிகள் பலரும் தேர்தல் வேலைகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் மேற்கு மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய மூன்று தொகுதிகளுமே ‘வாஷ்அவுட்’ ஆகிவிட்டது. எடப்பாடியில் திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய பெருமை மா.செ.வையே சாரும். இதையெல்லாம் செல்வகணபதியிடம் சொன்னால் அவர் வழக்கம்போல் ‘பச்சைப்பொய்’ எனக்கூறிவிடுவார்.

சேலம் கிழக்கு மா.செ.வான எஸ்.ஆர்.சிவலிங்கம், சத்துணவு, ரேஷன் கடை ஊழியர் பணிகளை பாமக, அதிமுகவினருக்கு விற்றுவிட்டார் என்ற புகார் பலமாக கிளம்பியது. அதிமுக ‘நிழல்’ இளங்கோவனுடன் நெருக்கம், ஏற்காட்டில் பங்களா, நிலபுலன்கள் என அவர் மட்டுமே வளப்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டாலும் ஆக்டிவான உ.பி.க்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

இதனால் ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய மூன்று ரிசர்வ் தொகுதிகளிலும் திமுக தோற்றது. ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் பரப்புரையில் தீவிரம் காட்டினர். அதேநேரம் வாழப்பாடி ஒன்றியத்தில் நிர்வாகிகள் படுத்துக் கொண்டனர்.

வீரபாண்டி தொகுதியில் கிழக்கு மா.து.செ. பாரப்பட்டி சுரேஷ்குமார் சீட் எதிர்பார்த்து, தொகுதி முழுக்க வீட்டு மனைப்பட்டா, மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கடைகள், மின் இணைப்பு வசதி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே கிட்டத்தட்ட அமைச்சர் போல தொகுதி முழுக்க சுழன்றடித்தார் சுரேஷ்குமார்.

அதேபோல வீரபாண்டி ஒ.செ. வெண்ணிலா சேகரும் முடிந்தளவுக்கு அரசுத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளார். அதனால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு மாறாக, கட்சித் தலைமை கடந்த முறை இங்கு தோல்வி அடைந்த டாக்டர் தருணை மீண்டும் களமிறக்கியது.

இந்த ட்விஸ்ட்டை சற்றும் எதிர்பார்க்காத பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர் ஆகியோர் தேர்தல் களப்பணியில் இருந்து முற்றாக ஒதுங்கிக் கொண்டனர்.

வீரபாண்டியார் மகன் டாக்டர் பிரபுவும் கட்சிப் பணிகளில் இருந்து ஓராண்டுக்கு மேலாகவே ஒதுங்கி இருக்கிறார். அவரும் தருணுக்கு ஆதரவாக பெயரளவுக்கு வந்து போனதோடு சரி. களத்தில் ஆர்வம் காட்டவில்லை.

டாக்டர் தருண் மீது ‘கிளீன் இமேஜ்’ இருந்தாலும், தேர்தல் பார்முலா அறிந்து வேலைகள் செய்யவோ, களத்தில் வழிநடத்தவோ அங்கு விவரம் அறிந்த நிர்வாகிகள் துணை நிற்கவில்லை. வீரபாண்டியாரின் ஆதரவாளர்கள் ஒதுங்கி நின்றதும் பின்னடைவாக அமைந்தது. உட்கட்சி அதிருப்தியைச் சரிக்கட்டும் பணிகளில் கிழக்கு மா.செ.வும் மெனக்கெடவில்லை. ஏர்வாடி வாணியம்பாடி, காமாட்சிக்காடு உள்பட வீரபாண்டியில் சில பகுதிகளுக்கு தருண் பரப்புரைக்குச் செல்லவே இல்லை என்கிறார்கள். வாக்காளர்களுக்கு 1500 ரூபாய் கொடுத்தாலும் அந்தப் பாசனம் சரியாகப் போய்ச்சேரவில்லை.

ஒருபுறம் தவெகவினர் டிஜிட்டல் பிரச்சாரத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்க, தருண் அந்தப் பக்கமே ஆர்வம் காட்டவில்லை. இதனால் வீரபாண்டி தொகுதியில் திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது,” என்கிறார்கள் விவரம் புள்ளிகள்.

ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கியிருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவது மற்றும் அரவணைத்துச் செல்லும் ஆள்களை பொறுப்பாளராக நியமிப்பதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இழந்த செல்வாக்கை மீட்க முடியும். உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சிக்குள் இருக்கும் களைகளை அகற்ற வேண்டும் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

சும்மாவே வைத்திருக்கும் அந்த சாட்டையை இப்போதாவது சுழற்றுவாரா மு.க.ஸ்டாலின்?

  • பேனாக்காரன்

Leave a Reply