Tuesday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் வாரிச் சுருட்டும் நோக்கில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. நா.த.க., த.வெ.க., கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. வெற்றி நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம்.

கெங்கவல்லி (தனி):

இத்தொகுதியில், திமுக தரப்பில் மாஜி எம்எல்ஏ சின்னதுரை களமிறங்கியுள்ளார். தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் பெரிய அளவில் பெண்களிடம் ‘ரீச்’ ஆகியிருப்பது இவருக்கு பலம்.

அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., நல்லதம்பி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. எனினும், மக்களிடம் இவர் மீது அதிருப்தியும் இல்லை. தம்மம்பட்டி பேரூர், உலிபுரம், நாகியம்பட்டி, ஜக்கமசமுத்திரம் பகுதி வரை திமுகவுக்கும், கெங்கவல்லி முதல் தலைவாசல் வரை அதிமுகவுக்கும் களம் சாதகமாக இருக்கிறது.

வாக்காளர்களுக்கு 8000 ரூபாய் மாதிரி கூப்பன் பட்டுவாடா செய்தது திமுகவுக்கு நன்றாகவே ‘ஒர்க்அவுட்’ ஆகியுள்ளது. திமுக 1500ம், அதிமுக 1000 ரூபாயும் பட்டுவாடா செய்துள்ளது. இத்தொகுதியில் திமுக முந்துகிறது.

நிலவரம்: திமுக வெற்றி

ஆத்தூர் (தனி):

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் அர்த்தனாரி போட்டியிடுகிறார். 2011, 2016 தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திமுக இங்கு நேரடியாக போட்டியிடாததால் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் ஆதரித்து பரப்புரை செய்யாதது இவருக்கு சறுக்கல். களத்தில், பூதக்கண்ணாடி வைத்து தேடியும் கதர்ச்சட்டைகளும் தென்படவில்லை.

அதிமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ஜெயசங்கரன் மீண்டும் களம் காண்கிறார். தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர், கவுண்டர் சமுதாய வாக்குகள் இவருக்கு பலம். எடப்பாடியின் ‘நிழல்’ இளங்கோவனின் நேரடி பார்வை, திமுக நேரடியாக போட்டியிடாதது ஆகியவற்றால் மீண்டும் வெற்றி பெற்று விடும் நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயசங்கரன். அதிமுக, காங்கிரஸ் இருதரப்புமே வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் பாய்ச்சியிருந்தாலும் இத்தொகுதியில் அதிமுகவே முந்துகிறது.

நிலவரம்: அதிமுக வெற்றி

ஏற்காடு (தனி):

மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் ரேவதி களம் காண்கிறார். அதிமுக தரப்பில் உஷாராணி போட்டியிடுகிறார். இந்தமுறை இரு கட்சிகளிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கடந்த 2011, 2016, 2021 தேர்தல்களில் தொடர்ந்து இங்கு அதிமுக வெற்றி பெற்றிருந்த போதிலும் ஊரக பகுதிகளில் தரமான சாலைகள் இல்லாதது, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படாதது இலைக்கட்சிக்கு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர்களுக்கு திமுக 1500ம், அதிமுக 1000 ரூபாயும் பட்டுவாடா செய்துள்ளது. தவெக பெறும் வாக்குகள் அதிமுகவுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் உடன்பிறப்புகள் தீவிரமாக தேர்தல் களப்பணியாற்றினாலும், வாழப்பாடி ஒன்றியத்தில் உ.பி.க்கள் படுத்துக் கொண்டதாக கூறுகிறார்கள். இது திமுகவுக்கு மைனஸ். இரு கட்சிகளும் சம பலத்தில் மோதினாலும், வழக்கமான அதிமுக சென்டிமென்ட் இந்தமுறையும் கைகொடுக்கும் எனத்தெரிகிறது.

நிலவரம்: அதிமுக வெற்றி

ஓமலூர்:

இத்தொகுதியில் அதிமுக தரப்பில் சிட்டிங் எம்எல்ஏ மணி, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் ஏ.ஆர்.இளங்கோவன் களம் காண்கின்றனர். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், கொ.வெ.கவுண்டர் சமூகத்தினரின் ஆதரவு, பாமக கூட்டணி ஆகியவை அதிமுகவுக்கு சாதகம். தேமுதிகவுக்கு வலுவான வாக்கு வங்கி இல்லாதது, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர், ஆளுங்கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாதது ஆகியவை ஏ.ஆர்.இளங்கோவனுக்கு கடும் பின்னடைவு. ஓமலூர் தொகுதியில் இந்த முறை அதிமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

நிலவரம்: அதிமுக வெற்றி

மேட்டூர்:

திமுக சார்பில் கொளத்தூர் ஒ.செ. மிதுன்சக்கரவர்த்தி என்ற இளைஞர் களமிறக்கப்பட்டு உள்ளார். திமுக மேற்கு மா.செ. டி.எம்.செல்வகணபதிக்கு ‘ஒரு வகையில்’ உறவுக்காரர் என்பதால் சீட் பெற்றுக் கொடுத்துவிட்டதாக அதிருப்தி நிலவுகிறது. கடந்த தேர்தலில் 656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சீனிவாசபெருமாள், மேட்டூர் நகரம் காசி விஸ்வநாதன் ஆகியோருக்கு சீட் கிடைக்காததால் உள்ளூர் உ.பி.க்கள் பரப்புரைக் களத்தில் ஒதுங்கி இருக்கிறார்கள். அதேபோல், மறைந்த வீரபாண்டியாரின் ஆதரவாளர்களான மாஜி எம்எல்ஏ கோபால், அப்துல்சலாம், மாஜி ஒ.செ. தவசி ராஜா உள்ளிட்டோரும் ஒதுங்கிக் கொண்டனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கல்லா கட்டிவிட்டு ஏமாற்றி விட்டதாக மிதுன்சக்கரவர்த்தி மீது புகார் உள்ளது. எனினும், திமுக அரசின் நலத்திட்டங்களும், கொளத்தூர், மேல் மேட்டூர் பகுதிகளில் திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

அதிமுக தரப்பில் சேலத்தைச் சேர்ந்த மாஜி எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம் களம் காண்கிறார். இவருக்கு, கீழ் மேட்டூர் பகுதிகளில் ஆதரவு இருக்கிறது. வெளியூர்க்காரர் என்பது மைனஸ் ஆக இருந்தாலும், கூட்டணி மற்றும் கரன்சி பலம் அ.தி.மு.க.,வை கரை சேர்க்கும் என்கிறார்கள். திமுக தரப்பில் 2000 ரூபாயும், அதிமுக தரப்பில் 1000 ரூபாயும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. திமுகவின் உள்ளடிகளும், அதிமுக கூட்டணி பலமும் சிறிய வித்தியாசத்திலாவது அதிமுக வேட்பாளரை கரையேற்றி விடும் என்கிறது தேர்தல் களம்.

நிலவரம்: அதிமுக வெற்றி

எடப்பாடி:

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, 8வது முறையாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறார். கூட்டணியில் பாமக இருப்பதும், தவெக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதும், நகர்ப்புறத்திற்கு இணையாக தொகுதியில் வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதும் எடப்பாடியாருக்கு மிகப்பெரும் பலம்.

இவரை எதிர்த்து, திமுக தரப்பில் ஜலகண்டாபுரம் பேரூர் தலைவர் காசி போட்டியிடுகிறார். உள்ளூரில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. புகார் கறை படியாதவர். காசியை நிறுத்தியதன் மூலம் திமுக இந்தமுறை கடும் சவால் அளிக்கிறது என்றாலும், எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.

நிலவரம்: அதிமுக வெற்றி

சேலம் மேற்கு:

அதிமுக கூட்டணி தரப்பில் பாமக வேட்பாளர் மு.கார்த்தி, திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் நேருக்கு நேர் களம் காண்கின்றனர். ராமதாஸ் அணி தரப்பில் சிட்டிங் எம்எல்ஏ அருள், தவெக தரப்பில் மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோரும் திமுக, அதிமுக கூட்டணிக்கு இணையாக களமாடி வருகின்றனர். இதனால், மாங்கனி மாவட்டத்திலேயே சேலம் மேற்கு தொகுதி தேர்தல் களம்தான் படு சூடாக இருக்கிறது. தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகள் அதிமுக, பாமக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது.

கடந்த 2021 தேர்தலில் தேமுதிக இங்கு 2307 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கூட்டணி பலத்தை நம்பியே தேமுதிக களமாடுகிறது. தவெக லட்சுமணன், சுயேச்சை அருள் ஆகியோர் கணிசமாக வாக்குகளைப் பிரித்தாலும்கூட சேலம் மேற்கில் இலைக்கட்சிக்கென உள்ள வாக்குகளால் கார்த்தி முந்துகிறார்.

நிலவரம்: பாமக வெற்றி

சேலம் வடக்கு:

திமுக தரப்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் சேலம் வடக்கு தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக களம் இறங்கியுள்ளார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கன்னங்குறிச்சி குபேந்திரன், கவுன்சிலர்கள் ஜெயக்குமார், தெய்வலிங்கம், குமரவேல், கலையமுதன் உள்ளிட்ட ராஜேந்திரனின் முக்கிய தளபதிகளை ஓரங்கட்டி வைத்திருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கன்னங்குறிச்சி குபேந்திரன், செவ்வாய்பேட்டை ஜெயக்குமார் ஆகியோர் ராஜேந்திரனுக்கு எதிராக எவ்வாறு களமாடுகிறார்கள் என்பதும் கட்சியில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதேநேரம், தாராளமான கரன்சி பாசனமும், அரசின் சாதனைகளும் ராஜேந்திரனுக்குக் கைகொடுக்கும் என்கிறார்கள். சிறுபான்மையினர், பட்டியல் சமூக வாக்குகளை தவெக அதிகளவில் பெறும்பட்சத்தில் திமுகவுக்கு பாதகமாக அமையும்.

அதிமுக கூட்டணியில், பாமக சார்பில் மேட்டூர் சிட்டிங் எம்எல்ஏ சதாசிவம், இந்தமுறை சேலம் வடக்கில் களம் காண்கிறார். கூட்டணி பலமும், திமுகவின் உட்கட்சி பூசல்களும் பாமகவுக்கு சாதகமாக இருக்கிறது. ராஜேந்திரன் தரப்பில் தாராளமாக வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ராஜேந்திரனுக்கு வெற்றி எளிதானதல்ல என்கிறார்கள். சேலம் வடக்கில் திமுக, பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நிலவரம்: கடும் போட்டி

சேலம் தெற்கு:

இத்தொகுதியில், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த திமுக த.செ.உறுப்பினர் லோகநாதனும், அதிமுகவில் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் அணி வினோத்தும் மோதுகின்றனர். சேலம் தெற்கில் பெரும்பான்மையாக உள்ள கன்னட, தெலுங்கு தேவாங்க செட்டியார்கள், சவுராஷ்டிரா, வன்னியர், கவுண்டர் சமூக வாக்குகளில் பெரும்பகுதி அதிமுகவுக்கு சாதகமாக இருக்கிறது. முதலியார், பட்டியல் சமூக வாக்குகளில் கணிசமாக திமுகவுக்கு ஆதரவாக உள்ளது.

தவெக தரப்பில் களம் காணும் விஜய் தமிழன் பார்த்திபன், பிள்ளை சமூக வாக்குகளில் சேதாரத்தை ஏற்படுத்துவார் என்கிறார்கள். இஸ்லாமியர்கள், பட்டியல் சமூக வாக்குகளை தவெக கணிசமாக பெரும்பட்சத்தில் அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். சேலம் தெற்கில் 2011, 2016, 2021 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றியைத் தக்க வைக்க வாய்ப்பு உள்ளது.

நிலவரம்: அதிமுக வெற்றி

வீரபாண்டி:

திமுக சார்பில் ஐ.டி. விங் மாநில நிர்வாகி டாக்டர் தருண் களமிறங்கியுள்ளார். கடந்த தேர்தலில் வீரபாண்டியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். மறைந்த வீரபாண்டியாரின் தம்பி மகனும், கிழக்கு மா.து.செ.வுமான பாரப்பட்டி சுரேஷ்குமார், வீரபாண்டி ஒ.செ. வெண்ணிலா சேகர் ஆகியோர் சீட் எதிர்பார்த்து தொகுதியில் வேலைகளைச் செய்து வந்தனர். ஆனால் தருணுக்கு சீட் தரப்பட்டதால் அவர்களின் ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. ஏர்வாடி வாணியம்பாடி, காமாட்சிக்காடு, வெள்ளக்கணவாய், மூக்குத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கவனம் செலுத்தவில்லை. வீரபாண்டியார் ஆதரவாளர்கள் தேர்தல் வேலைகளில் இருந்து ஒதுங்கி நிற்பது தருணுக்குப் பின்னடைவு. திமுக, அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு தலா 1000 ரூபாய் தரப்பட்டுள்ளது. கூட்டணி, அரசின் நலத்திட்டங்கள் கைகொடுத்தால் திமுக கரையேறலாம்.

அதிமுக தரப்பில் மாஜி எம்எம்ஏ மனோன்மணி மகன் டாக்டர் ஸ்ரீபாலாஜி சுகுமார் களம் காண்கிறார். பாமக, அமமுக கூட்டணி, வன்னியர், கவுண்டர் சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு பெரும் பலம். மனோன்மணி எம்எல்ஏ ஆக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் கல்லா கட்டிவிட்டு கம்பி நீட்டியது பலவீனம். எனினும், கூட்டணி பலம், கவுண்டர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு பலம்.

நிலவரம்: அதிமுக வெற்றி

சங்ககிரி:

அதிமுக சார்பில் ஓமலூர் மாஜி எம்எல்ஏ வெற்றிவேல் களம் காண்கிறார். திமுகவில், இளைஞரணி மேற்கு மா.செ. மணிகண்டன் போட்டியிடுகிறார். வெற்றிவேல், கொ.வெ.கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் சமுதாய வாக்குகளும், பாமக கூட்டணியும் வெற்றிவேலுக்கு சாதகமான அம்சங்கள்.

மணிகண்டன், மண்ணின் மைந்தர் என்பதும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் பிளஸ். நிலம் ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மணிகண்டனுக்கு பெரிய மைனஸ். அரசின் நலத்திட்டங்கள், கூட்டணி பலத்தை நம்பி திமுக வேட்பாளர் களத்தில் சுற்றி வருகிறார். திமுக 2000, அதிமுக 1000 ரூபாய் வாக்காளர்களுக்கு பாய்ச்சியிருந்தாலும் இத்தொகுதியில் இலைக்கட்சியே ஆதிக்கம் செலுத்துகிறது.

நிலவரம்: அதிமுக வெற்றி

சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த கள நிலவரம்:

அதிமுக கூட்டணி – 9
திமுக கூட்டணி – 1
கடும் போட்டி – 1

  • பேனாக்காரன்

Leave a Reply