Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது.

அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய அரசு தரப்பில் ரொம்பவே உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

நான்கு நீதிபதிகளும் தீபக் மிஸ்ரா மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகளை சக நீதிபதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் (ரோஸ்டர்) பாரபட்சமாக நடந்து கொள்கிறார். இன்னொன்று, சில வழக்குகளை அவர் கையாண்டதில் சந்தேகம் இருப்பதுடன், சர்ச்சைகளும் இருக்கிறது என்றனர்.

நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டுகள் உச்சநீதிமன்ற நிர்வாக நடைமுறையில் நிலவும் குழப்பங்கள், விதிமீறல்களாக மட்டுமே கருதிவிட முடியாது. மேலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இன்னும் சில விவகாரங்களையும் அவர்கள் மேலோட்டமாக சுட்டிக்காட்டினர்.

மூத்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான பிரஷாந்த் பூஷன், செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகளின் அறச்சீற்றத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், மருத்துவக்கல்லூரி வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதியின் அணுகுமுறை அதிருப்தி அளிப்பது குறித்தும் குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல், மூத்த பத்திரிகையாளரான ‘இந்து’ என். ராமும், வரவேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரஷாந்த் பூஷன் குறிப்பிட்டிருந்த மருத்துவக்கல்லூரி வழக்கு குறித்து நாம் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்தன. அந்த விவகாரம் என்ன என்பதை விரிவாகச் சொல்கிறோம்.

லக்னோவில் இயங்கி வந்த பிரசாத் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான மருத்துவக்கல்லூரி உள்பட 46 மருத்துவக்கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக்கூறி மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்றுத்தருவதற்கான லாபியில் ஒடிஷா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி (2004 – 2010) ஐ.எம்.குட்டூஸி ஈடுபட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த வழக்கில் ஹவாலா டீலர் ராம்தேவ் சரஸ்வத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

இவ்வளவு வலுவான நிகழ்வுகளுக்குப் பின்னரும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ”பிரசாத் அறக்கட்டளை தொடர்பான வழக்கில் மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு இப்படி இருந்தாலும், அதை செயல்படுத்தாமல்தான் இருந்தது அப்போதைய காங்கிரஸ் அரசு.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் லஞ்சம், ஊழல் புரையோடிக் கிடப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர், அதை தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். ஆனால், செல்லமேஸ்வர் உத்தரவை ரத்து செய்த அரசியல் சாசன அமர்வு, ‘இந்த வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவே இறுதியானது’ என்றது.

தீர்ப்பால் அதிருப்தி அடைந்த மனுதாரர் பிரஷாந்த் பூஷன், ‘இந்த நாள் நீதித்துறையின் கறுப்பு நாள்’ என்றார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் அவருடைய கருத்துக்கு மறைமுக ஆதரவு அளித்தனர்.

செல்லமேஷ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதின் சீற்றத்துக்கு இன்னொரு முக்கிய விவகாரமும் சொல்லப்படுகிறது. அந்த விவகாரம், பாஜக தலைவர் அமித் ஷாவுடன் முடிச்சிடப் படுகிறது.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2004-ம் ஆண்டில், குஜராத் மாநில முதல்வராக இருந்தார். அப்போது, உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. நரேந்திர மோடியை கொல்லத் திட்டம் தீட்டியதாக சொராபூதின் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தனிப்படை போலீசார், சொராபுதினையும் அவருடைய மனைவியையும் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது சுட்டுக்கொன்றனர்.

இது ஒரு போலி என்கவுன்ட்டர் என்று அப்போது பரபரப்பு கிளம்பியது. இந்த நிகழ்வை நேரில் பார்த்த ஒரே சாட்சியான பிரஜாபதி என்பவரும் கஸ்டடியில் இருக்கும்போதே போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த இரண்டு என்கவுன்ட்டர் வழக்குகளையும் சிபிஐ போலீசார் விசாரித்தனர். குஜராத் டி.ஐ.ஜி வென்கசரா, ராஜஸ்தான் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபுல் குமார் ஆகியோருக்கும் இந்த என்கவுன்டரில் தொடர்பு இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக அமித் ஷாவுக்கு போலி என்கவுண்ட்டர் வழக்கில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவருடைய ஃபோன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், டி.ஐ.ஜி வென்கசாரா, எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபுல் குமார் ஆகியோரிடம் அவர் தொடர்ச்சியாகப் பேசியிருப்பது சிபிஐ தரப்பு உறுதி செய்தது.

இதையடுத்து, 2010-ம் ஆண்டு போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டு, சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

குஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணை நடந்தால், நேர்மையாக நடைபெறாது என்பதால், 2012-ம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை மும்பைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி பிரிஜ்பால் லோயா வழக்கை விசாரித்து வந்தார். அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்து வந்தபோது நீதிபதி லோயா கடும் கண்டனம் தெரிவித்தார்.

நீதிபதி லோயா, சொராபுதீனும் அவருடைய மனைவியும் மற்றும் அமித் ஷா.

இப்படி வேகமாக அந்த வழக்கு நடந்து வந்த நிலையில், 2014-ம் ஆண்டு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டில் போலி என்கவுன்டர் வழக்கின் விசாரணை முடிந்து, 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் நிலைக்கும் வந்தது. தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், டிசம்பர் 1-ம் தேதி நீதிபதி லோயா திடீரென்று மரணம் அடைந்தார்.

நாக்பூரில் நடந்த சக நீதிபதியின் மகள் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற நீதிபதி லோயாவுக்கு, ரவிபவன் என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். லோயாவுக்குப் பிறகு, பொறுப்பேற்ற நீதிபதி எம்.பி. கோசவி, டிசம்பர் 30-ம் தேதி அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளித்தார்.

தீர்ப்புக்கு சிறப்பு நீதிமன்றம் சொன்ன காரணம்தான் பெரிய டிவிட்ஸ்ட் எனலாம். ”குஜராத்தில் தீவிரவாதிகள் தலையீடு அதிகமானதால், கீழ்நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் அவசியம் கருதி அமித்ஷா பேசியிருக்கலாம். அதனால், ஃபோன் அழைப்புகளை முக்கிய சாட்சியங்களாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றும் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அதேவேளையில், நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்க லோயாவுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த செய்தியாளர் பி.ஆர்.லோனே, ‘நீதிபதி லோயா சாவில் மர்மம் இருப்பதாகவும் சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்றும்’ ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, கடந்த 11.1.2018ம் தேதி, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம். சந்தனாகவுடர் அடங்கிய அமர்வுக்கு மாற்றியது.

அதில்தான் மூத்த நீதிபதிகளிடையே பெரும் அதிருப்தி கிளம்பியது. இதற்கு அடுத்த நாள்தான், நான்கு நீதிபதிகளும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ள 4 நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் வெடித்துக் கிளம்ப வேறு சில காரணங்களும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், அவை முற்றிலும் அரசியலுடன் முடிச்சுப் போட்டு உலா வருகின்றன.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்தான் தீபக் மிஸ்ரா. அதனால் அவரை, பாஜகவின் ஆதரவாளர் என்றும், பாஜகவை மையப்படுத்திய அரசியல் வழக்குகளில் அவர் மத்திய அரசின் கண்ணசைவுகளுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்ற புகார்களையும் முன்வைக்கின்றனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக 186 வழக்குகள் சிபிஐ குழுவால் மூடப்பட்டது. அந்த வழக்கு இன்றளவும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

அவற்றை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சில நாள்களுக்கு முன்புதான் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ரொம்பவே கலகலத்துப் போனதாகவும் சொல்கிறார்கள் டெல்லி அரசியலை நன்கு அறிந்தவர்கள்.

இந்து மல்ஹோத்ரா

அதோடு, ராமஜென்ம பூமி வழக்கில் விரைவில் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தீபக் மிஸ்ரா கூறியிருந்தார். இவ்விரு வழக்குகள் குறித்த விவகாரங்களிலும் காங்கிரஸ் கட்சியின் தலையிட்டதாகவும், குறிப்பாக ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பை 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை ஒத்திப்போட காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சிலர் மூலமாக உச்சநீதிமன்றத்தில் காய்களை நகர்த்தியதாகவும் சொல்லப்படுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் தூண்டுதலின் காரணமாகவே ஊடகங்களைச் சந்தித்திருப்பதாகவும்கூட யூகங்கள் கசிந்துள்ளன. போதாக்குறைக்கு, ஊடகத்தினருடனான சந்திப்பு முடிந்த அன்று மாலையே நீதிபதி செல்லமேஸ்வரரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா நேரில் சந்தித்துப் பேசியிருப்பதும் இந்த நேரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் 2019ம் ஆண்டு வரவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என்பதால், நீதிபதிகளின் பாய்ச்சலுக்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கலாம் என்கிறார்கள்.

இவை மட்டுமின்றி, இரு நாள்களுக்கு முன்புதான் இந்து மல்ஹோத்ரா என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் முதன்முதலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு கொலீஜியத்தில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளுக்கு முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும், வேறு சில அரசியல் அழுத்தங்களால் அந்த நியமனத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா, நீதிபதி செல்லமேஸ்வரரை சந்திக்கிறார்.

பல மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களில் தகுதிவாய்ந்த மூத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதி பணிக்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும்போது, ஒரு வழக்கறிஞரை நேரடியாக நீதிபதியாக நியமித்ததற்கும் நான்கு நீதிபதிகளும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிக் கிடப்பது குறித்து நான்கு நீதிபதிகள் ஊடகங்கள் பார்வைக்குக் கொண்டு வந்ததற்கு பரவலாக ஆதரவு இருந்தாலும், இந்த விவகாரத்தை சட்ட அமைச்சர் அல்லது குடியரசுத்தலைவரிடம் விவாதித்து சுமூக முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

நாடாளுமன்றம், நிர்வாகம், ஊடகம் என ஏற்கனவே மூன்று ஜனநாயக தூண்களுமே லஞ்சல், ஊழலால் செல்லரித்துக் கிடந்த நிலையில், ஜனநாயகத்தின் முக்கியத் தூணான நீதித்துறையும் அதிலிருந்து தப்பவில்லை என்பதற்கு நான்கு நான்கு நீதிபதிகளின் சீற்றமே சான்று.

– அகராதிக்காரன்.