Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

நாடு முழுவதும் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 496 துணைவேந்தர்களில் 48 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமூகநீதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதில் அய்யம் எழுந்துள்ளது.

இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் நிலவும் நாடுகளில் இடஒதுக்கீடு சட்டம் இல்லாவிட்டால், பல இனங்களே எழுத்தறிவின்றி போய்விடும். அந்த சாபம், தலைமுறை தலைமுறையாக தொடரவும் கூடும். இதை உணர்ந்ததால்தான் திராவிட இயக்கங்கள், சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. வருகின்றன.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ‘கிரீமி லேயர்’ குறித்து அடிக்கடி பொது விவாதத்திற்கு வருவதை அறியலாம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்பொடிகள் கூட்டமோ, இட ஒதுக்கீடு என்பதை பிச்சை இடுவது அல்லது பிச்சை பெறுவதற்குச் சமம் என்பதுபோல் பேசுகின்றனர். என்னளவில் இட ஒதுக்கீடு என்பது இழிவுக்குரியதல்ல. உரிமை மறுக்கப்பட்டோருக்கான உந்து சக்தியாகத்தான் கருதுகிறேன்.

ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதியிடம், இலவச திட்டங்கள் தேவையா? என ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தமிழ்நாட்டின் கடைசி ஏழையின் வாழ்க்கைத்தரம் உயரும் வரை இலவசங்கள் தொடரும் என்று பதில் அளித்தார். (தமிழகத்தைப் பொருத்தவரை, 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்க ஆட்சியாளர்களும் காரணம்தானே என்ற கேள்வியை அப்போது ஏன் கேட்கப்படவில்லை எனத் தெரியவில்லை.).

இட ஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராகப் பேசுவோருக்கும் கருணாநிதி கூறிய பதில்தான் சரியாக இருக்கும் என்கிறேன். நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முன்வரிசைக்கு வரும்வரை சமூகநீதி காக்கப்பட வேண்டியது அவசியமாகப்படுகிறது.

ஆட்சியர், செயலர், நீதிபதிகள் போன்ற உச்ச அதிகார பதவிகளில் இன்னும் பட்டியலினத்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை என்று எவராவது மறுக்க முடியுமா?

கடந்த 2015-2016ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 496 துணைவேந்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் எஸ்.சி. பிரிவினர் 6 பேர், பழங்குடியினர் பிரிவினர் 6 பேர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 36 பேர். ஆக மொத்தம் 48 துணைவேந்தர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டு பிரிவுக்குள் வருகின்றனர். அதாவது ஒட்டுமொத்த துணைவேந்தர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு பிரிவினரின் பங்கெடுத்தல் என்பது 10 சதவீதத்திற்கும் சற்று குறைவுதான்.

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்ட தகவலுக்கு, அகில இந்திய உயர்கல்வித்துறைக்கான கணக்கெடுப்பு மையம் மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளது. இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனர் யோகேந்திர யாதவ், துணைவேந்தர் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படாதது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற, ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகனாக உருவெடுத்துள்ள ஜிக்னேஷ் மேவானி, ”தற்போது நியமிக்கப்பட்டுள்ள பட்டியலினத்த்தைச் சேர்ந்த துணைவேந்தர்களின் மதிப்பெண் சான்றிதழ்களையும், பொதுப்போட்டியில் நியமிக்கப்பட்ட மற்ற துணைவேந்தர்களின் மதிப்பெண் சான்றிதழ்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இன்னொரு மனு தாக்கல் செய்வோம்,” என்ற யோசனையையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், யோகேந்திர யாதவ், ஜிக்னேஷ் மேவானி போன்றோரின் கருத்துக்கு எதிரான விமர்சனங்ளும் கிளம்பாமல் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதியம் ஊடுருவியுள்ள சமூகத்தில், சமத்துவத்தைக் கொண்டு வந்து விட முடியுமா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர், ”துணைவேந்தர் பணியிடங்கள் வெறும் சமூகநீதி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுவதில்லை. பட்டியலினத்தவர்களில் எத்தனை பேர் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் பிஹெச்.டி, முடித்திருக்கிறார்கள்?, எத்தனை பேர் ‘ரீடர்’ பணி அனுபவம் பெற்றிருக்கின்றனர்? அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்,” என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இக்கேள்விகளை முற்றிலும் நாம் புறந்தள்ளிட முடியாது.

இப்போது தென்னாப்பிரிக்கா சென்றிருக்கும் 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில், எத்தனை பேர் பட்டியலினத்தவர் என்று சொல்ல முடியுமா? என்றும் குதர்க்கமாக கேள்வி கேட்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

இன்னும் சிலர், திறமையைப் புறந்தள்ளிவிட்டு இன்னும் இடஒதுக்கீட்டு சட்டத்தைக் கட்டிக்கொண்டு அழுவதால்தான் உலகளவில் இந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட முதல் பத்து இடத்திற்குள் இன்னும் இடம்பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

திறமை முக்கியம்; அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், ஒடுக்கப்பட்டவர்களுக்கான வெளியை ஏற்படுத்திக் கொடுத்தால்தானே அவர்களும் பொதுப்போட்டியில் களமாட முடியும்?

கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று முதலில் லேசாக நூல் விட்டுப் பார்ப்பார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பினால் அதை கிடப்பில் போட்டுவிட்டு, அடுத்ததாக மனுவை சட்டமாக்கிட வேண்டும் என்று துடிப்பார்கள். அந்தக் கூட்டத்திற்கு வால் பிடிப்பவர்கள்தான் இட ஒதுக்கீட்டையும் அறவே நீக்க வேண்டும் என்கிறார்கள்.

இங்கே சமூகநீதியை தூக்கிப்பிடித்தவர்கள்கூட, பார்ப்பன எதிர்ப்பில் நீர்த்துப்போய், காலப்போக்கில் இடைநிலை ஆதிக்க சாதியினரின் நலன்களுக்காக மட்டுமே குரல் எழுப்பும் அளவுக்கு தங்கள் நோக்கத்தை சுருக்கிக் கொண்டவர்கள் அதிகம். பெரியார் மீதும் இதுபோன்ற விமர்சனங்கள் உண்டு.

சமூகநீதியைப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள், 71 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இன்னும் பட்டியலினத்தவர் மேலே எழுந்து வர முடியாமல் ஒடுங்கிப்போய் கிடப்பதும் ஏன் என்பதும் ஒரு கணம் யோசிக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ப்புகள் மறுதலிக்கப்படும்போது, பட்டியலினம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் என 70 சதவீதம் நிறைந்திருக்கும் இந்தியாவில் மீண்டும் ஓர் அடிமைச் சமூகம் உருவாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. அதை இந்திய அரசும் உணர வேண்டும்.

 

– இளையராஜா சுப்ரமணியம்.