Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திராவிட மண்ணில் மூக்கறுப்பு போர்! சேலம் கல்வெட்டில் ஆதாரம் #மூக்கறுப்புபோர்

பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்? என்பதைவிட பல திடுக்கிடும் திருப்பங்களும், மர்ம முடிச்சுகளும் கொண்டது, மூக்கறுப்புப் போர். யுத்தத்தில் வீரர்கள் வெல்வர்; அல்லது, மடிவர். ஆனால் எதிரிகளை மட்டுமின்றி எதிரி நாட்டில் எதிர்ப்படும் எல்லோரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து, மூட்டையில் கட்டிச்செல்லும் யுத்தமும் நம் திராவிட மண்ணில் நடந்திருக்கிறது.

 

இப்படி ஒரு மூர்க்கத்தனமான போர், மதுரை திருமலை நாயக்கருக்கும், மைசூர் அரசன் கந்தீரவனுக்கும் இடையே நடந்துள்ளதாகச் சொல்கிறார், சேலம் வரலாற்று ஆய்வாளர் ஆறகழூர் வெங்கடேசன். போர்க்களம், சேலம் அல்ல; ஆனால் மூக்கறுப்பு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் சேலத்தில்தான் கிடைத்திருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரை சேர்ந்த வெங்கடேசன், அடிப்படையில் ஒரு மருந்தாளுநர். தீவிர கடவுள் மறுப்பாளர்; அறிவியல் சிந்தனையாளர். ஆனால், தற்போது கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். வழிபாட்டிற்காக அல்ல; வரலாற்று ஆராய்ச்சிக்காக.

 

“முகநூல் பக்கங்களில் சிலர், அவரவர் சொந்த ஊர் குறித்த வரலாற்று பெருமைகளை பதிவிடுவர். அதைப்படிக்கும்போது ஏன் நாம் நம் ஊரைப்பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடாது என்று யோசித்தேன். அதன்பின், தீவிரமாக வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினேன்.

 

ஆறகழூரின் வரலாற்றுப் பின்னணி பற்றி, குறித்து சின்ன வயதில் இருந்தே கேள்விப்பட்டு வந்திருக்கிறேன். இப்போது சின்ன கிராமமாக சுருங்கிக் கிடக்கும் ஆறகழூர், கி.பி. 12ம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகரமாக திகழ்ந்து இருக்கிறது.

 

பொன்பரப்பி வாணகோவரையன் என்ற சிற்றரசன், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆளுகையின் கீழ் இந்த பகுதியை ஆண்டு வந்திருக்கிறான். இதுபற்றிய தகவல்கள் தெரியவர, வரலாற்று ஆராய்ச்சியின் மீது மேலும் ஆர்வம் அதிகரித்தது.

ஒருநாள் நண்பர் ஒருவர், “மாப்ள, வயலில் ஒரு நடுகல் கிடக்கு மாப்ள. அதுல ஏதோ பொம்ம வரைஞ்சிருக்கு” என்று தகவல் கொடுத்தார். ஆர்வத்துடன், அந்த நடுகல்லை அகழ்ந்து எடுத்து ஆய்வு செய்தோம்.

 

அதில் இரண்டு குத்துவிளக்குகளும், அமர்ந்த நிலையில் கடவுள் சிற்பமும் இருந்தது. தொல்லியல்துறை ஆய்வாளர் ராஜகோபால் மூலம் ஆய்வு செய்தபோது, அந்தக் கல்வெட்டு, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், வணிகக்குழு கல்வெட்டு என்பதும் தெரியவந்தது.

 

காமநாதீஸ்வரர் கோயிலில் இருந்து உலோகத்தால் ஆன மூன்று சமணர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறகழூர், தியாகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பவுத்தம், சமண மதங்கள் செழிப்புடன் இருந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.

 

எங்கள் ஆய்வில் முக்கியமான கல்வெட்டு என, பெரியேரி வண்ணான்குளம் பகுதியில் கிடைத்ததைச் சொல்லலாம். அந்தக் கல்வெட்டில் பெருச்சாளி உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது.

எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு விழுப்புரம் வீரராகவன் அய்யாதான் குரு. அவர் மூலம் அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தோம். பெருச்சாளி உருவத்துடன் தமிழகத்தில் கிடைத்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதும், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. ஆறகழூர் பைரவர் கோயிலுக்கு 5000 குழி நிலத்தை தானமாக கொடுத்த செய்தி அந்த கல்வெட்டில் இருந்தது.

 

வாணகோவரையர்கள் 11ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை ஆறகழூரை தலைநகராகக் கொண்டு, மகத நாட்டை ஆட்சி செய்து வந்தனர். முன்ஜென்மத்தில், ஒரு சிவாலயத்தில் உள்ள விளக்கு அணையாமல் இருக்க, அதன் திரியை ஒரு பெருச்சாளி தூண்டிவிட்டுக் கொண்டே இருந்ததாம்.

 

அதன் பலனாக அடுத்த ஜென்மத்தில் அந்த பெருச்சாளி மாவலி மன்னனாக அவதரித்தது. மாவலி மன்னன் வம்சத்தைச் சேர்ந்த வாணகோவரையர்கள் (வாணர்கள்), பெருச்சாளியை குலச்சின்னமாக கொண்டதாக ஆய்வில் தெரியவந்தது,” என்கிறார் வெங்கடேசன்.

 

காமக்காபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கு தனிச்சிறப்பு உள்ளதாக கூறும் வெங்கடேசன், அந்தக் கல்வெட்டில் முழுவதும் கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததாகச் சொன்னார். நாயக்கர்கள் காலத்தில், மைசூர் மன்னர்களின் ஆட்சிப் பரப்பளவு சேலம் வரை நீண்டிருந்ததற்கான ஆதாரமாக இந்தக் கல்வெட்டைச் சொல்லலாம் என்றார்.

 

காமக்காபாளையம் வழியாக திருச்சிக்கு செல்லும்போது, வழியில் உள்ள  8 கிராமங்களில் வரிவசூல் செய்ததற்கான செய்திகள் அந்தக் கல்வெட்டில் இருந்துள்ளன. இந்தக் கல்வெட்டு, 16ம் நூற்றாண்டுக்குரியது.

 

இதுவரை தனித்து செயல்பட்டு வந்த வெங்கடேசன், தன்னைப்போல் வரலாற்றுத் தேடலில் இயங்கிக் கொண்டிருக்கும் நண்பர்களை ஒருங்கிணைக்கிறார். ஆசிரியர் கலைச்செல்வன், டாக்டர் பொன்னம்பலம், பெருமாள், ஓமலூர் சீனிவாசன், விழுப்புரம் வீரராகவன் ஆகியோர் கொண்ட குழுவாக வரலாற்றுத் தகவல்களைத் தேடத் தொடங்கினார்.

 

இக்குழுவின் தேடலுக்கு கைமேல் பலன்.  10ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்று உடைந்த நிலையில் கிடைக்கிறது. பேளூரில் கண்டெடுக்கப்பட்ட அந்தக்கல்வெட்டு, முதலாம் பராந்தகச்சோழன் ஆட்சிக் காலத்துக்குரியது. ‘நரசிங்கபுரம் சிவன் கோயில் விளக்கு எரிக்க தானம்’ என்ற தகவல் அதில் பொறிக்கப்பட்டு இருந்தது.  எதை தானமாகக் கொடுத்தனர்? என்ற விவரங்கள் அதில் இல்லை.

அதேநேரம், பேளூர் அங்காளம்மன் கோயில் முன்பு, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில், பூமிக்கு மேல் மூன்று அடி நீண்டிருக்கும் ஒரு கல்வெட்டு இருக்கும் தகவல் கிடைக்கிறது.

 

பொக்லின் இயந்திர உதவியுடன் கல்வெட்டை தோண்டி எடுத்தபோது, அது 6 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட கல்வெட்டாக இருந்தது. கல்வெட்டின் நாலாபுறங்களிலும் ஏராளமான எழுத்துகள் இருந்தன. அவை 16ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள்.

 

பூமிக்கு மேல் நீண்டிருந்த கல்வெட்டு பகுதியில், “மீசையுடன் மூக்கறுப்பிச்சே” என்று மட்டுமே தெரிந்தது. ஆனால், பல திடுக்கிடும் கதைகளும், மர்மங்களும் நிறைந்த தகவல்கள் இருக்கும் என கல்வெட்டைத் தோண்டி எடுக்கும்வரை அந்தக் குழுவினர் கொஞ்சமும் யூகித்திருக்கவில்லை.

 

ராமாயண கதையில் ராவணன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை, ராமன் தம்பி லட்சுமணன் துண்டித்திடுவான். இதிகாசத்தில் மட்டுமே கேட்டுப்பழகிய இதுபோன்ற மூக்கறுப்பு சம்பவம், நிஜத்திலும் நடந்ததற்கான ஒரே ஆதாரம் இந்தக் கல்வெட்டு என்றே சொல்லலாம்.

மூக்கறுப்பு யுத்தம் பற்றிய தகவல் அடங்கிய கல்வெட்டு.

“மீசையுடன் மூக்கறுப்பிச்சே” வரிகளின் பின்னணியில் உள்ள கதைகளையும், கல்வெட்டு தகவல்களையும் ஆறகழூர் வெங்கடேசனே சொன்னார்…

 

“கல்வெட்டின் முதல் பக்கத்திலும், இரண்டாம் பக்கத்திலும் தலா 29 வரிகளும், மூன்றாம் பக்கத்தில் 41 வரிகளும், நான்காம் பக்கத்தில் 32 வரிகளும் பொறிக்கப்பட்டு இருந்தன. மூக்கறுப்புப் போர் பற்றிய தகவல் அடங்கிய முதல் கல்வெட்டு இதுதான்.

 

மைசூர் நாட்டு மன்னன் கந்தீரவனுக்கும், மதுரை திருமலை நாயக்கருக்கும் இடையே ஏற்பட்ட மூக்கறுப்பு போர் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன. கந்தீரவனுக்கு எதிராக திருமலை நாயக்கர் தொடர்ந்து வாலாட்டியதால் கடும் ஆத்திரம் அடைந்த மைசூர் மன்னன், அவர் மீது போர் தொடுக்கிறான்.

திருமலை நாயக்கர் சிற்பம்.

போரில் வீரர்களைக் கொல்வது தான் மரபு. ஆனால், எதிரி நாட்டில் எதிர்ப்படுவது யாராக இருந்தாலும் அவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வந்தால் வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கிறான்.

 

அப்படி கொண்டு வரப்படும் மூக்கு, மேலுதட்டுடன் மீசையும் இருந்தால் வெகுமதிகள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். மூக்கறுப்புக்காக விசேஷ கருவியையும் வீரர்கள் வைத்திருந்தனர். கந்தீரவனின் படை வீரர்கள், தமிழ்நாட்டில் புகுந்து பலரின் மூக்கு, மேலுதடுகளையும் அறுத்துச் செல்கின்றனர்.

 

அடுத்து, கந்தீரவனின் பாணியிலேயே இதற்கு பதிலடி கொடுத்தார் திருமலை நாயக்கர்.

 

அவருடைய ஆணையின் பேரில், ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி தலைமையில் 25000 படை வீரர்கள், பாளையக்காரர்களின் 35000 படை வீரர்கள் என 60 ஆயிரம் வீரர்கள் மைசூர் ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்து, எதிரிகளின் மூக்குகளை அரிந்து சாக்குப்பையில் கட்டி திருமலை நாயக்கருக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்தப் போர் 1656ம் ஆண்டு நடந்துள்ளதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அப்போது பேளூர் பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடத்தி வந்துள்ளனர். அதனால், மூக்கறுப்பு போர் குறித்த கல்வெட்டு, இந்தப் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கலாம்,” என்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.

 

தமிழகத்துடன் 
உரசும் கர்நாடகா…

 

“மைசூர் மன்னன் கந்தீரவன், பிறவியிலேயே வாய் பேச இயலாதவன்; காதுகளும் கேட்காது. அவரை பலர் கேலி செய்திருக்கலாம். அந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள, எதிரி நாட்டவர்களின் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்துக் கொண்டு வரச்சொல்லி இருக்கலாம்,” என்றும் சொல்கிறார் ஆறகழூர் வெங்கடேசன்.

 

இது ஒருபுறம் இருக்க, மைசூர் மன்னன் கந்தீரவனின் முக்கையும் மேல் உதட்டையும் ரகுநாதசேதுபதியின் படை வீரர்கள் அறுத்து வந்து திருமலை நாயக்கரிடம் ஒப்படைத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

 

பிறரை அவமானப்படுத்த இன்றும் ‘அவனை எப்படியாவது மூக்குடைக்க வேண்டும்’ என்றே சொல்கிறோம். எனில், மூக்கறுத்தல் என்பது ஒருவரை மானமிழக்கச் செய்தல் என்பதாகத்தான் இந்தச் சமூகம் கருதி வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் மூக்கையும், மேல் உதட்டையும் அறுத்து வரச்சொல்லி இருக்கலாம்.

 

எனினும், மைசூர்க்காரர்களுக்கு (கர்நாடகா), தமிழ்நாட்டுடன் 360 ஆண்டுகளுக்கு முன்பே பகை இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்று.

 

(புதிய அகராதி, 2017-பிப்ரவரி திங்கள் இதழில் இருந்து…)

 

வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்க: 98409 61947

 

– இளையராஜா எஸ்.