Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா?

ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாச்சாரத்தில் அது மிகப் பெரிய விசேஷமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய விழாவும் நடத்தப்படுகிறது.

என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வம் மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.

என் சகோதரி `பெரியவள்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைத்தான் நானும் கேட்டேன்.

“நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?” என்று நான் கேட்டேன்.
என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள, எனக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

பூப்படைதல் என்றால் என்ன?

பூப்படைதல் என்பது, ஓர் உடல், இனப்பெருக்கம் செய்ய தயாராகி விட்டது என்பதை குறிக்கும் விஷயம். தமிழ் கலாச்சாரத்தில், பூப்படைதல் நிகழ்ச்சி நடத்தப்படுவது என்பது, பெண்களின் சக்தியை அடையாளப்படுத்துவதற்கே.

இது தூய்மையான, அபாயகரமான இயற்கை சக்தி என்பதால், இவை கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது.

இதன்மூலம், மாதவிடாயை அடைந்த பெண், மனப்பக்குவத்தை அடைந்துவிட்டார் என்று பார்க்கப்பட்டது. அதோடு, அவர் குறிப்பிட்ட சில தூய்மையற்ற பலவீனங்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் பார்க்கப்பட்டது.

ஆண் `வயதை அடைதல்` என்பது, தானாக நடக்கும் என்று பார்க்கப்பட்டாலும், மாதவிடாயை அடையாத பெண்கள், பெண்மையில் முழுமை அடையாதவராக பார்க்கப்படுகிறார்.

ஆகவே, இந்த விழா என்பது, இளம்பெண், பெண்மணியாக மாறுவதை பெருமையாக கொண்டாடும் நிகழ்ச்சி. இதன்மூலமாக அவர் திருமணத்திற்கும், குழந்தைகளை பெறவும் தயாராகிவிட்டார் என்பது மற்றவர்களுக்கு குறிப்பிடப்படுகிறது.

“என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? என்று கேட்கிறார், 22 வயதுடைய பெண் ஒருவர்.

முதல் மாதவிடாய், பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டது. அந்த கட்டுப்பாட்டில், சமைக்கப்படாத முட்டை சாப்பிடுவது, காலையில் கடலை எண்ணைய் குடித்தல், உணவிற்குப் பிறகு குறைந்த அளவு தண்ணீரே குடித்தல், இனிப்பு உணவுகளை சாப்பிடாமல் இருத்தல் ஆகியவையும் அடங்கும்.

அப்பெண்ணின் வயிறு வீங்குவதை தவிர்க்கவே, தண்ணீர் குறைவாக குடிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வரவிருக்கும் மாதவிடாய்களின் வலியை குறைக்கவும் இந்த உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மாதவிடாய் நேரத்தில் பெண் கோவிலுக்கு செல்லக்கூடாது, பூசைக்கான பாத்திரங்களை தொடக்கூடாது, பொதுவாக வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது ஆகியவையும் சில கட்டுப்பாடுகளே.

ஒரு பூப்படைதல் நிகழ்ச்சி என்பது, நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடப்படுவது. நிகழ்ச்சிக்கு வருவோர் அழகான பரிசுகளோடு வருவார்கள். அவர்களுக்கு நல்ல சுவையான உணவுகள் பரிமாறப்படும்.

முதல் மாதவிடாயின் முதல்நாள், அப்பெண், தனது நெருங்கிய உறவினர்களால், குளிப்பாட்டி, தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு, அவருக்கு மிகவும் சுகாதாரமான உணவுகள் அளிக்கப்படும்.
இந்த தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தபிறகு, மீண்டும் அவரை குளிப்பாட்டி, புடவை அணிவார். மீண்டும் வீட்டின் முக்கிய அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்.

புடவை அணிதல் என்பது, அப்பெண் பாலியல் ரீதியாக பக்குவப்பட்டுவிட்டார் என்பதை குறிக்கிறது.
இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாச்சாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாச்சார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது” என்கிறார் 25 வயது இளம்பெண் ஒருவர்.

“குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்” என்கிறார் 27 வயதாகும் பெண் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியை எவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் என்பது, அந்தந்த குடும்பத்தின் விருப்பத்தையும், பொருளாதார வசதியையும் பொருத்தது. மிகவும் நெருக்கமான உறவினர்களைக் கொண்ட ஒரு சிறிய நிகழ்ச்சியில் தொடங்கி, உள்ளூர் தபால்காரருக்குக்கூட தெரியும் அளவிற்கு இந்த கொண்டாட்டம் நடைபெறும்.

என் சகோதரியின் நிகழ்ச்சிக்காக, பெற்றோர் வீட்டின்கீழ் இருந்த ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து 100 பேர் வரை அழைத்து விழாவை நடத்தினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, என் உறவினரின் மகளின் நிகழ்ச்சி என்பது, ஆயிரம் பேர் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. வெவ்வேறு வகையான ஆடைகளையும் அவர் அணியவேண்டி இருந்தது.

“பெண்களுக்கான உரிமை என்பது, மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய் கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தை அவர்கள் அடையும், அந்த சாதாரண காலம் என்பது மரியாதையை இழக்கிறது” என்கிறார், 27 வயதாகும் டி.எஸ் என்னும் பெண்.

பண்டைய காலங்களில், பதின்பருவத்திலேயே பெண்கள் திருமணம் செய்ய அனுப்பப்படுவர். திருமணத்திற்கு, குறிப்பிட்ட அந்த பெண் தயார் என்பதை விளம்பரப்படுத்துவதற்கு, இந்தப் பூப்படைதல் நிகழ்ச்சிகள் பெரிய பங்கு வகித்தன.

ஆனால், இந்த காலத்தில், பெண்கள் பூப்படைதல் காலத்திற்கும், திருமணத்திற்கு இடையே பெரிய இடைவேளை உள்ளது. இளம் வயதில் இந்த உடல்ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் பெண்கள், அதிக வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், பல பெண்கள் பெற்றோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான கலாச்சார முக்கியத்துவத்தை பெண்களிடம் எடுத்துக்கூறி, அவர்களின் கருத்தையும் பெற்றோர் கேட்க வேண்டும்.

(தமிழ்கல்சர்.காம் (tamilculture.com) என்ற இணையதளத்தில் அனு என்பவர் எழுதிய கட்டுரை இது)