Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைக் காட்டிலும் மிகக்குறைவான வாக்குகள் பெற்று மண்ணைக் கவ்விய பாஜகவை, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நேற்று (டிசம்பர் 24, 2017) எண்ணப்பட்டன.

சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

தமிழக தேர்தல் களம் எப்போதுமே திமுக, அதிமுக என இருதுருவ அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தினகரனுக்கும் இடையிலான மோதலாகத்தான் பார்க்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டாலும்கூட, அக்கட்சி யாதொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆளுங்கட்சியை ஒரு சுயேச்சை வேட்பாளர் தோற்கடித்தார், மிகப்பெரும் வல்லமை படைத்த திமுக டெபாசிட் இழந்திருக்கிறது என்பதையெல்லாம் கடந்து, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பாஜக ரொம்பவே கேலி கிண்டலுக்குள்ளானது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நாகராஜன், 1368 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிக்கும் ‘நோட்டா’வில் கூட 2348 வாக்குகள் பதிவாகி இருந்தது. நோட்டாவைக் காட்டிலும்கூட பாஜக 980 ஓட்டுகள் குறைவாக பெற்றிருந்தது.

அதாவது நோட்டா 1.33 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பாஜகவால் 0.77 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா போன்றோர் எதைச் சொன்னாலும் சும்மாவே வலைத்தளவாசிகள் சும்மாவே வெச்சி செய்வார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி, நோட்டாவைக் காட்டிலும் குறைவான வாக்குகள் பெற்றிருந்தால் விட்டுவிடுவார்களா?. நேற்று முழுக்க சமூக வலைத்தளங்களில் அக்கட்சியைக் கிழித்து தோரணம் தொங்கவிட்டுள்ளனர்.

குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் சொல்லி இருந்தார். அதேநேரம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் மனநிலையாக கருத முடியாது என நேற்று கூறினார்.

இதை சிலர், குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்காது. ஆனால், ஆர்கே நகர் தேர்தல் முடிவு மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

பலர், தமிழிசைக்கு இலவச அறிவுரையும் வழங்கியுள்ளனர். கிண்டலாகவும், பாசத்துடனும் அவரை அக்கா என அழைக்கின்றனர். ”நீங்களாக கட்சியைவிட்டு ஒதுங்கிக் கொண்டால் உங்களுக்கும், பாஜகவுக்கும் நல்லது. உங்களுக்கும் கவுரவமாக இருக்கும்,” என்று கூறியுள்ளனர்.

இன்னும் சிலர், ‘கைக்காசை செலவு செய்தாவது, உங்களை வேறு ஒரு கட்சியில் சேர்த்து விடுகிறோம்,’ என்றும் கிண்டலாகக் கூறியுள்ளனர்.

தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், ”ஆர்.கே.நகர் மக்கள் பணத்திற்கு விலை போய்விட்டார்கள். பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி. நடந்து முடிந்தது தேர்தலே அல்ல,” என்றார்.

அதைப்பற்றி சிலர், ”மக்கள் எல்லோரும் விலை போய்விட்டதாக எப்படி சொல்லலாம்?,” என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு பதிவர், ”தேர்தல் ஆணையமே உங்கள் கையில்தானே இருக்கிறது. அதை வைத்து பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தியிருக்கலாமே? வேட்பாளர் நாகராஜனை ஏமாற்றி விட்டீர்கள்,” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

”பணம் கொடுத்ததால்தான் ஓட்டு போட்டார்கள் என்றால் நோட்டாவுக்கு யாரு பணம் கொடுத்தது?” என்றும் கேலியாக கேட்டுள்ளனர்.

நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவானதைப் பார்த்து பாஜக தலைவர் அமித்ஷா, ”சீக்கிரம் அந்த நோட்டாவை கட்சியில் சேர்த்து விடுங்கள்;” என்று சொல்வதுபோலவும் கிண்டல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பாஜக சார்பில் கங்கை அமரன் நிறுத்தப்பட்டார். இந்தமுறை அவர் உடல்நலம் சரியில்லை என்று ஒதுங்கிக்கொண்டார்.

முக்கியஸ்தர்கள் பலரும் போட்டியிட விருப்பமனுகூட வழங்காத நிலையில், வேறு வழியின்றியே சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜவில் தஞ்சமடைந்த நாகராஜனை வேட்பாளராக்கியது. இதையும் பலர் கிண்டல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் ஒருமுறை கூறினார். அதில் ஒரு சதவீத வாக்குகள்கூட ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜகவுக்கு கிடைக்காதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், எந்த ஒன்றும் நிரந்தரமானது அல்ல என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் சேதி. என்னதான் பெரியார் மண், திராவிட பூமி என்று சொன்னாலும், பாஜகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என்றெல்லாம் முற்றாக சொல்லி விட முடியாது.

ஒரு காலத்தில் நாடு முழுவதும் காங்கிரஸின் ஆட்சிதான் இருந்தது. 1949ல் தொடங்கப்பட்ட திமுக என்ற சிட்டெறும்புதான், 1967ல் தமிழக தேர்தலில் காங்கிரஸ் என்ற யானையை கவிழ்த்தது. அதனால் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டிய தேவையில்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம்கூட தோற்ற பாஜகதான், கடந்த 2016ல் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 1228692 (2.86%) வாக்குகளை அள்ளியிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளியிருக்கும் நாம் தமிழர் கட்சி (3802 ஓட்டுகள்), கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிட குறைவான வாக்குகளே (1.07%) பெற்றிருந்தன.

மாறி வரும் சூழ்நிலைகள் எந்த வரலாறையும் அழித்துவிட்டுப் புதிதாக எழுதும்.