பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார்.
முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது.
இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்பு காரணமாக அவரால் சரியாக கேட்கவும் முடியவில்லை.
பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் சொன்னது குறித்து மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் கருணாநிதியின் காதருகே சென்று சத்தமாக சொன்னார். சிலவற்றைக் கேட்டு அப்போது அவர் ஒரு குழந்தையைப் போல சிரித்தார்.
தன்னை நேரில் சந்தித்த பிரதமருக்கு, முரசொலி பவள விழா ஆண்டு மலரை கருணாநிதி பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், திமுக எம்பி கனிமொழி, துரைமுருகன், ராஜாத்தி அம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
https://twitter.com/twitter/statuses/927468475244675072
இந்த சந்திப்பு குறித்து கனிமொழி கூறுகையில், ”இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. மூத்த அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் நேரில் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை,” என்றார்.
பிரதமர் சென்ற பின்னர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்து வாயில் பகுதிக்கு வந்தார். அப்போது வாயில் முன்பு திரண்டிருந்த திமுக தொண்டர்களைப் பார்த்து அவர் உற்சாகமாக கையசைத்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில், ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்று முழங்கினர்.