Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது.

ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்துவதற்கேற்ப அதிமுகவில் இயல்பாகவே பல நிகழ்வுகள் அரங்கேறின.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் முழு இயக்கமும் பாஜக கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. இப்போதுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு என்பது டெல்லியின் ரிமோட் அசைவுகளுக்கு ஏற்ப இயங்கக் கூடியது. இரட்டை இலை என்ற சின்னம் இல்லாவிட்டால் அக்கட்சிக்கு இனி தமிழ்நாட்டில் எதிர்காலமே இருக்காது எனக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறது பாஜக.

இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெற 55 சதவீத வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற ஓர் ஆய்வு சொல்கிறது. வேறு சில அமைப்புகளின் கள ஆய்வுகளும், திமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றன.

அதிமுக&பாஜக கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் அவ்விரு கட்சிகளுக்கும் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்பதும் அந்த ஆய்வின் முக்கிய சேதி.

எனில், இயல்பாகவே வெற்றிக்காக காத்திருக்கும் பாஜகவின் அடுத்த சாய்ஸ் திமுகவாகத்தான் இருக்க முடியும். அல்லது ரஜினி, கமல் போன்றவர்களை களமிறக்கி அவர்களின் முதுகில் சவாரி செய்ய நேரிடலாம்.

சரி. திமுகவை எப்படி எப்போது சந்திப்பது என்ற சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த வேளையில்தான் தினத்தந்தி நாளிதழின் பவள விழா அழைப்பிதழ் வந்தது. ஆரம்பத்தில், இந்த விழாவை துணை ஜனாதிபதியான வெங்கய்யா நாயுடுவை வைத்து முடித்து விடவும் ஒரு திட்டம் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

அப்படியெனில் திமுகவை சந்திப்பதற்கான வாய்ப்பு நழுவிடக்கூடுமே. அதனால்தான் பிரதமர் நரேந்திரமோடி இன்று நடந்த பவள விழா நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறுகிறார்கள். இதுவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அதே பழைய பார்முலாதான்.

இன்னொருபுறம், சென்னை மக்கள் பருவ மழையால் பாதிக்கப்பட்டபோதும்கூட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சுற்றுப்பயணத்தில் இருந்தார். பிரதமர் வீடு தேடி வருகிறார் என்ற தகவலை உறுதி செய்த பிறகே, தன் சுற்றுப்பயணத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

பிரதமர் மோடி கோபாலபுரத்திற்கே நேரில் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்ததில் அரசியல் ஏதுமில்லை; மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திமுகவின் கனிமொழியும், பாஜகவின் தமிழிசையும் வெளிப்படையாகக் கூறி வந்த £லும், இங்கு பேசப்படாத ஓர் அரசியல் செய்தி ஒளிந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

தமிழிசை அக்கா உண்மையிலேயே பாவம். அவர் கற்ற அரசியல் பாடமும் அவ்வளவுதான். பிரதமர் மோடி கோபாலபுரத்திற்குச் செல்வது குறித்து தமிழிசை அக்காவுக்கு இன்று காலை வரை தெரியாது. அந்தளவுக்குதான் டெல்லி மேலிடம், தமிழக பாஜக தலைமைக்கு மதிப்பு கொடுத்து வைத்திருக்கிறது. இதுபோன்று நடப்பது முதல்முறை அல்ல.

என்னைப் பொறுத்தவரையில், அரசியலில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது ஒரு கயாஸ் கருத்தியல் போல. அரசியலில் ஒரு கூடாரத்தில் நிகழும் ஒரு நிகழ்வும், பேச்சும் கூட எதிரும் புதிருமாய் இரு ந்தவர்களை ஒரே புள்ளியில் இணைத்து விடும்; அல்லது, பிரித்து விடும்.

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை நம்பி பாஜக இல்லை; பாஜக நினைத்தால் திமுகவை நோக்கியும் செல்ல முடியும் என்பதை தமிழக ஆளுங்கட்சிக்கு உணர்த்தவே இந்த திடீர் சந்திப்பு என்ற யூகங்களும் எழுந்துள்ளன.

இன்னொருபுறம், இப்போது திமுக முன் இருக்கும் மிகப்பெரும் சவாலே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்புதான். இந்த தீர்ப்பு திமுகவுக்கு எதிராக இருக்கும்பட்சத்தில் நிச்சயமாக தமிழகத்தில் இனி திமுகவால் எழுச்சி பெறவே முடியாது. ஒருவேளை, திமுகவுக்கு தீர்ப்பு சாதகமாக இருந்தால் அதன்பின் திமுகதான் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்.

ரூ.242700 கோடி மதிப்புள்ள (உத்தேசமாக) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், முந்தைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுக்கு கிடைத்தது வெறும் ரூ.66770 கோடிதான். இதன்மூலம் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டார்கள் என்பதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் சாராம்சமே.

இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்பதையும் அப்போதே சிலர் கருத்துகளை தெரிவித்து இருந்தனர். 2011, 2017ம் ஆண்டுகளில் நடந்த தமிழக பேரவை தேர்தல்களில் திமுகவின் தோல்விக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலும்கூட முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் ரூ.563000 கோடி (உத்தேசமாக) மதிப்புள்ள 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் வெறும் ரூ.63325 கோடிதான்.

யதார்த்தம் இதுதான் எனும்போது காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்தது மட்டும் எப்படி ஊழலாகக் கருத முடியும்? இதை அடிப்படையாகக் கொண்டாலே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து திமுகவினர் முழுமையாக விடுதலை பெற்றுவிட முடியும் என்ற லாஜிக்கும் பேசப்படுகிறது.

திமுக தலைவரை சந்தித்ததன் பின்னணியில் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பின் சாதக, பாதகங்களையும் பாஜக கணக்கில் கொண்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதன்மூலம் திமுகவுக்கும், வெளி உலகுக்கும் ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு பற்றி மறைமுகமாக கோடிட்டுக் காட்டவும் மோடி விரும்பியிருக்கிறார் என்றுகூட கருதிக்கொள்ளலாம்.

அல்லது, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தின் ஈர்க்கவும்கூட இந்த சந்திப்பு பயன்பட்டிருக்கலாம்.

கும்பி எரியுது; குடல் கருகுது என்று கருணாநிதிக்கு நிகராக சொற்சிலம்பம் சுழற்றும் வல்லமை அற்றவர்தான் மு.க.ஸ்டாலின். ஆனால் கருணாநிதி அற்ற திமுகவை பாஜக உள்ளிட்ட ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளும். அதற்குரிய இடம் அங்கிருக்கிறது.

இந்த சந்திப்பைக் கண்டு அதிமுக கூடாரம் ரொம்பவே அதிர்ந்து போயிருக்கிறது என்பதுதான் உண்மை. அதேநேரம், திமுகவின் தீவிர தொண்டர்கள் எந்தக் காரணம் கொண்டும் எக்காலத்திலும் பாஜகவுடன் திமுக கூட்டு சேர்ந்துவிடக் கூடாது என்றும் ட்விட்டர் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலர், 2ஜி வழக்கோடு தொடர்புபடுத்தி கேலியாகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

சொத்து வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி திடீரென்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தீர்ப்புக்கு பாதகமாக அமைந்து விடாதா என்று அப்போது கருணாநிதி காட்டமான அறிக்கை வெளியிட்டார்.

காலச்சக்கரம் அப்படியே திசை மாறியிருக்கிறது. 2 ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில், பிரதமரே நேரில் சென்று கருணாநிதி, அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்திருப்பது 2ஜி வழக்கின் தீர்ப்பை பாதிக்காதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கவே இருக்கிறது. அதுவும் கருணாநிதி சொன்னதுதான். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. இந்த சந்திப்பின் அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– பேனாக்காரன்.