Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு; சர்ச்சையில் பெரியார் பல்கலை!

 

பணி நியமனங்களில் ஊழல், முன்னாள் பதிவாளர் தற்கொலை மர்மம், தணிக்கையில் முறைகேடு என தொடர் சர்ச்சைகளின் வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பெரியார் பல்கலைக்கழகம், இப்போது பேராசிரியர் தங்கவேலுக்கு பதிவாளர் பொறுப்பு வழங்கியதிலும் உள்நோக்கம் இருப்பதாக பல்கலை வட்டாரத்தில் புகைய ஆரம்பித்திருக்கிறது.

 

சேலம் பெரியார் பல்கலையில் பதிவாளராக பணியாற்றி வந்த பேராசிரியர் மணிவண்ணன், 17.8.2018ம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார். அவருக்கு கடந்த 18ம் தேதி பல்கலை பேராசிரியர்கள் பாராட்டு விழா நடத்தி, வழியனுப்பி வைத்தனர். இதையொட்டி, ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே புதிதாக பதிவாளர் மற்றும் ஏற்கனவே காலியாக உள்ள தேர்வாணையர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதுவரை முக்கிய பதவியான பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தால் பல்கலையில் நிர்வாகப்பணிகள் பாதிக்கப்படும் என்பதால், கணினி அறிவியல் துறைத்தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் தங்கவேல் வசம் பதிவாளர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 18ம் தேதி மதியம் தங்கவேல், இதற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இங்குதான் புகைச்சலே ஆரம்பித்துள்ளது.

 

பேராசிரியர் தங்கவேல், எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., பி.ஹெச்டி., ஆகியவற்றில் கணிதத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்து, அதிலேயே முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். ஆனால் அவரை கணிதத்துறைக்கு தலைவராக நியமிக்காமல், மாறாக கணினி அறிவியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். பெரியார் பல்கலையில் கடந்த 2005ம் ஆண்டில்தான் புதிதாக இந்தத் துறை தொடங்கப்பட்டது. அந்தத் துறை தொடங்கப்பட்டது முதலே பேராசிரியர் தங்கவேல், கணினி அறிவியல் துறைத்தலைவராக இருந்து வருகிறார்.

முன்னாள் பதிவாளர் மணிவண்ணன்.

கடந்த 2015-2016ம் ஆண்டு பல்கலையின் வரவு, செலவினங்களை தணிக்கை செய்த அதிகாரிகள், பேராசிரியர் தங்கவேல் உள்ளிட்ட சிலர், தாங்கள் படித்து வந்த துறையைவிட்டு, சம்பந்தமே இல்லாமல் வேறு துறைகளில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், இது, பல்கலை மானியக்குழு விதிகள்-2000 மற்றும் 2010க்கு எதிரானது என்றும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். உதாரணமாக, கணிதத்தை முதன்மைப் பாடமாக படித்துள்ள பேராசிரியர் தங்கவேல், கணினி அறிவியல் துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை கடுமையாக ஆட்சேபித்து சுட்டிக்காட்டியுள்ளது தணிக்கை அறிக்கை.

 

இவரிடம் கணினி அறிவியல் துறையில் பி.ஹெச்டி., ஆராய்ச்சிக்கு சேர்ந்த சிலர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆராய்ச்சியை நிறைவு செய்ய முடியாமல் தடுமாறுவதாகவும் பல்கலை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. துணை வேந்தர் குழந்தைவேலும், பேராசிரியர் தங்கவேலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்கூட அவருக்கு பதிவாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் இதன் பின்னணியை விவரிக்கின்றனர் சிலர்.

படித்தது ஒன்று; நியமிக்கப்பட்டது வேறு ஒன்று என்று தணிக்கையில் சொல்லப்பட்டாலும், அந்த தவறுக்கு பேராசிரியர் தங்கவேலையோ அல்லது அவர்போன்ற வேறு சில ஆசிரியர்களையோ மட்டுமே நாம் பொறுப்பாக்க முடியாது.

 

மாறாக, அவருடைய முதன்மைப் படிப்பான கணிதத் துறையும், கணினி அறிவியல் துறையும் சமமானதா? அல்லது தொடர்புடையதா? என்பதை பல்கலை நிர்வாகம்தான் விளக்கி இருக்க வேண்டும். தங்கவேல், பணியில் சேர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலான நிலையிலும்கூட அதைப்பற்றி பல்கலை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது பல்கலை நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

பேராசிரியர் தங்கவேல்

துணைவேந்தர் நியமனங்கள் முற்றிலும் வணிகமயமானச் சூழலில் முழுக்க முழுக்க முறையான தகுதியுடன், வெளிப்படைத்தன்மையுடன் நியமிக்கப்பட்டவர்தான் இப்போதைய துணைவேந்தர் குழந்தைவேல். நாம் விசாரித்தவரை, அவர் முன்பு பணியாற்றிய பாரதியார் பல்கலையில் மிகச்சிறப்பாகவே பணியாற்றி வந்திருக்கிறார். பெரியார் பல்கலையிலும் வெளிப்படையான நிர்வாகத்தை அவர் விரும்புவதாகவே தெரிகிறது.

 

ஆனாலும், எதற்கு இத்தனை சர்ச்சைகளுக்கு இடையில் பேராசிரியர் தங்கவேலிடம், பதிவாளர் பொறுப்புகளை வழங்க வேண்டும்? என்ற கேள்வியும் இங்கே எழாமல் இல்லை. தகுதியும், அனுபவமும் வாய்ந்த வேறு பேராசிரியர்களே பல்கலையில் இல்லையா? என்றும் பல்கலை பேராசிரியர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

 

அதுசரி…. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிற்க, பெரியார் பல்கலை ஒன்றும் சீசரின் மனைவி அல்லவே!

 

– பேனாக்காரன்.