Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்!; எஸ்.வி. சேகருக்கு காமெடி நடிகர் கிண்டல் ட்வீட்!!

 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு, காமெடி நடிகர் கருணாகரன் கிண்டலாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16.8.2018ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 17ம் நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டது. தமிழக அரசும் ஒரு வார காலத்திற்கு துக்கம் அனுசரிக்கும் என்று அறிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம், (ஆகஸ்ட் 19) நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அவர் அரசியல் தலைவர் என்பது மட்டுமின்றி, திரைத்துறையின் மூத்த கலைஞர் என்பதற்காகவும் கருணாநிதி மறைவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.

 

இதுகுறித்து நடிகர், பாஜக பிரமுகர் மற்றும் பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய வழக்கில் ஓடி ஒளிந்தவருமான எஸ்.வி. சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு) மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும், வாஜ்பாய் அவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தத் தெரியவில்லை. இது அறியாமையா? அகந்தையா?,” என்று கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

எஸ்.வி.சேகரின் இந்த ட்வீட்டுக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதற்கிடையே, பிரபல காமெடி நடிகர் கருணாகரன் எஸ்.வி. சேகருக்கு பதில் அளிக்கும் வகையில், ”நம்முடைய முதல்வர் அம்மையார் கிரிஜாவை மதிக்கிறேன்,” என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். கருணாகரனின் இந்த ட்வீட்டுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

தமிழக தலைமைச்செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், நடிகர் எஸ்.வி. சேகருக்கு மைத்துனி ஆவார். அவருடைய தயவு காரணமாகத்தான், பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்படாமல் கடைசிவரை எஸ்.வி.சேகர் காப்பாற்றப்பட்டார். மேலும், தமிழக அரசையே கிரிஜா வைத்தியநாதன்தான் ஆட்டி வைக்கிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதை மனதில் வைத்துதான், ‘ஐ ரெஸ்பெக்ட் அவர் சிஎம் கிரிஜா மேம்,’ என்று காமெடி நடிகர் கருணாகரன் கிண்டலாக ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக பிரமுகர் எஸ்.பரந்தாமன் என்பவர் எஸ்.வி. சேகருக்கு ஆதரவாக, ”இப்போது தெரிகிறது. கூத்தாடி பயலுக தகுதி என்னவென்று. நாளை மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும்போது இந்த உண்மையை உரக்கச் சொல்லுவோம்,” என்று மிரட்டும் தொனியில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதற்கு நாகராஜ் என்பவர், ”அந்த கூத்தாடி கூட்டத்துல இருந்து வந்தவர்தான் எஸ்வி.சேகர்,” என்று சுடச்சுட பதில் அளித்துள்ளார்.

மற்றொரு பதிவர், ”தமிழ்நாட்டுல பாஜக எவ்வளவு மோசமான நிலைமையில இருக்குனா, வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவியுங்கள் என்று சட்டசபையில் போய் கேட்க நாதியில்லாம, நடிகர் சங்க கூட்டத்துல போயி கதறிக்கிட்டு இருக்கற நிலைமையில இருக்கு,” என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

டெக்னாலஜி கன்சல்டண்ட் என்ற பதிவர், ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி, வடிவேலைப் பார்த்து பேசும் காமெடி காட்சியுடன் உல்டா செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.

 

அவர், ”ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டிக்கே வக்கில்லையாம். சாரணர் தேர்தலிலேயே முகம் தெரியாத ஆளை ஜெயிக்க முடியல. இதுல சட்டமன்றமாம். செய்யறது பூராவும் மக்கள் விரோத செயல். இந்த லட்சணத்துல 234ல ஒரு சீட்டா? எல்லா இடங்களிலும் சிரிப்பு வருகிறது,” என்று கேலியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களத்தை மையப்படுத்தி நகர்ந்து வரும் பாஜகவுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல மட்டங்களில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து தயக்கமின்றி பாஜகவை சாராத பலரும் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

 

 

– ஞானவெட்டியான்.