Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய ‘பிரேக்கிங் நியூஸ்’ ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன.

நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை ‘சின்னம்மா’ என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான்.

‘இடத்தைக் கொடுத்தால் மடத்தையே பிடுங்குவார்கள்’ என்பதை, சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நிஜத்தில் மெய்ப்பித்துக் காட்டினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா, தனக்கு உதவியாளராக சேர்த்துக்கொண்ட சசிகலாவுக்கு, ‘உடன்பிறவா சகோதரி’ என்ற அந்தஸ்தை கொடுத்தார். பின்னாள்களில், கட்சி மற்றும் ஆட்சி குறித்த திரைமறைவு பேரங்களில் அவர்தான் முக்கிய பங்காற்றினார் என்பதை கட்சியின் முக்கியஸ்தர்கள் அறிவர்.

சசிகலா மட்டுமல்ல. அவருடைய அக்காள் வனிதாமணியின் மகன்கள் டிடிவி தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன், அண்ணன் சுந்தரவதனம், அவருடைய மகன் டாக்டர் வெங்கடேசன், மகள் அனுராதா, இரண்டாவது அண்ணன் வினோதகன், அவருடைய மகன் மகாதேவன், இன்னொரு அண்ணன் ஜெயராமன், அவருடைய மகள் இளவரசி, இவருடைய மகன் விவேக், தம்பி திவாகரன் உள்பட 30க்கும் மேற்பட்ட உறவினர்கள் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தினர்.

ஜெயலலிதா சிறை சென்றபோதெல்லாம் பொம்மை முதல்வராக இருந்து பவ்யம் காட்டிய ஓ.பன்னீர்செல்வம், ஜெ., மறைவுக்குப் பின்னர் தன்னை நிரந்தர முதல்வராக்கிக் கொள்ள முனைந்தார். அதைத் தட்டிப்பறிக்க சசிகலா முயன்றபோது, அவருக்கு எதிராக முஷ்டியை முறுக்கினார் ஓபிஎஸ். அவருடைய சீறலை சசிகலா தரப்பு கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜெயலலிதா சமாதியில் திடீர் தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்து கம்பு சுழற்றினார். (ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் நேரடியாக பேசும் சக்தி (!?) படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே).

இந்த நிலையில், ஊழல் வழக்கில் சசிகலாக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பற்றிய தீர்ப்பும் வந்து சேர்ந்தது. அதனால் வேறு வழியின்றி, எல்லா காலத்திலும் ராஜ விசுவாசம் காட்டிவந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது சசிகலா தரப்பு. கட்சி கைவிட்டுப் போய்விடக்கூடாது; புதிய எஜமானர்கள் உள்ளே நுழைந்து விடக்கூடாது என்பதை நன்றாகவே யூகித்து வைத்திருந்த மன்னார்குடி கும்பல், ஆட்சி மற்றும் கட்சியை கண்காணிக்க ஏதுவாக துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, அதில் டிடிவி தினகரனையும் அமர வைத்தனர்.

ஆனால், ஜெயலலிதா, சசிகலா என யாருடைய கால்களிலாவது வி-ழுந்து எழுந்தே பழக்கப்பட்ட அதிமுக விசுவாசிகளுக்கு, இப்போது புதிய கால்கள் தேவைப்பட்டன. அந்தநிலையில்தான் புதிய ‘பிக்பாஸ்’ ஆக பிரதமர் நரேந்திரமோடி கிடைத்தார். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுக, மன்னார்குடியின் கும்பல் வசம் சென்றால், அக்கட்சியை மீண்டும் வெல்வது கடினம் என்பதை அறிந்த பாஜக தரப்பு, மன்னார்குடி கும்பலை வீழ்த்துவதற்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இணையையே பகடைக் காய்களாக்கியது.

பிக்பாஸ் இட்ட கட்டளைகளை இதுநாள் வரை இந்த இணை வெற்றிகரமாகவே செய்து வருகிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மன்னார்குடி கும்பலை விரட்டியடிப்பதில் நாலுகால் பாய்ச்சலில் இருக்கிறார். எதைச் செய்தாலும் ‘மேலே’ இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையும், கொங்கு மண்டலத்தில் அவருக்கு அதிகரித்துள்ள சாதி ரீதியிலான ஆதரவுமே அதற்குக் காரணம்.

அதிமுக பொதுக்குழுவில்…

கட்சியில் இருந்து தங்கள் குடும்பம் முற்றாக ஓரங்கட்டப்படும் சூழலை நிதானமாகவே உள்வாங்கிக் கொண்ட டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்., இணைப்பைக் காரணம் காட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முஷ்டியை முறுக்கினார். உடனடியாக 19 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

”முதல்வரை மாற்றுவோம்; இல்லாவிட்டால் ஆட்சியையே அகற்றுவோம்” என்று டிடிவி தினகரன், நேற்று இரவு சொல்லி இருந்தார். அதற்கு இபிஎஸ், ”எத்தனை தினகரன்கள் வந்தாலும் கட்சியையோ, ஆட்சியையோ ஒன்றும் அசைக்க முடியாது,” என்று இன்றைய (செப். 12) பொதுக்குழுவில் ரொம்பவே சூடாக பதிலடி கொடுத்துள்ளார். ”திமுகவின் கட்சித் தலைவராகக்கூட ஆக முடியாதவரெல்லாம் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பதா?” என்று போகிறபோக்கில் மு.க.ஸ்டாலின் மீதும் பாய்ந்துள்ளார்.

பொதுக்குழுவில், சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டும், அவரும், தினகரனும் நியமித்த எந்த ஒரு நியமனமும் செல்லாது என்றும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு, அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்று தீர்மானம் போட்டு, கடைநிலை தொண்டர்களின் மனதையும் கவர்ந்துள்ளனர்.

இன்று கூடியது பொதுக்குழுவே அல்ல என்று டிடிவி தினகரன் தரப்பு சொன்னாலும், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலா பக்கத்தில் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், தற்போது கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த இடத்திற்கு தமிழக போலீசாரை அனுப்பி வைத்திருக்கிறது காவல்துறை. ”இப்போதே வந்து இணைந்து கொண்டால் ‘எதிர்பார்ப்பது’ கிடைக்கும்; இல்லாவிட்டால், இனி எப்போதும் கிடைக்காது” என்று பேரம் பேசவே முக்கியமான சில போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைய பொதுக்குழு தீர்மானங்கள் மூலம், அதிமுகவில் நிலவி வந்த குழப்பங்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. ஒருவேளை இபிஎஸ், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை வந்தால், அதற்கான எல்லா ஏற்பாடுகளும் பிக்பாஸ் மூலம் செய்யப்பட்டு விடும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அதிமுகவில் கோலோச்சி வந்த மன்னார்குடி கும்பலுக்கு, இப்போது அஸ்தமனம் ஆரம்பம் என்றே தெரிகிறது.

– நாடோடி.