Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

50 ஆயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் போராடலாமா? – ஹைகோர்ட் கண்டனம்

ரூ.50 ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டு
ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை
ஏற்க முடியாது என்று சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மற்றும்
மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத
மாணவர்கள், பெற்றோர்களுக்கு
மனநல ஆலோசனை வழங்க வேண்டும்
என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம்,
சென்னை உயர்நீதிமன்றத்தில்
பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரனை இன்று (செப். 13) நடந்தது. நீதிபதி கிருபாகரன் வழக்கை விசாரித்தார்.

வழக்கறிஞர் சூர்யபிரகாசம், ”மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு காலை கட்டிப்போட்டுவிட்டு ஓடச்சொல்வதற்கு சமம். ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக கடந்த 90 நாள்களாக போராடி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது,” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அவர் கூறியது:

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து
ஏற்கனவே இந்த நீதிமன்றம்
பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தால் கல்வி பாதிக்கப்பட்டுள்ள
மாணவர்களுக்கு அரசு, ஆசிரியர்கள்,
ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து
வசூலித்து இழப்பீடு வழங்க
உத்தரவிட நேரிடும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான் சங்கம்
அமைத்து போராடி வருகின்றனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் இவ்வாறு
போராடுவதில்லை. இது தொடர்பாக
தமிழக அரசு என்ன
நடவடிக்கை எடுத்துள்ளது?.
அரசுப்பள்ளி மாணவர்கள் வெறும்
5 பேருக்கு மட்டுமே
மருத்துவக்கல்லூரியில்
இடம் கிடைத்துள்ளது.
இது, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு
ஏற்பட்டுள்ள கேவலம்.
அவர்களின் பொறுப்பற்ற
தன்மையையே காட்டுகிறது.

அதேநேரம், அரசுப்பள்ளிகளில்
சில திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.
நானும் அரசுப்பள்ளியில் படித்துதான்
இந்த நிலைக்கு உயர்ந்தேன்.
40 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம்
வாங்கிக்கொண்டு ஆசிரியர்கள் போராட்டம்
நடத்துவதை ஏற்க முடியாது.
அவர்கள் ஒன்றும் தொழிலாளர்
வர்க்கத்தினர் அல்ல.

கல்வி, மருத்துவம், காவல்துறையினர்
போராடக்கூடாது. அதனால் ஏழை எளிய
மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத சங்கங்கள்,
ஆசிரியர்கள் எதிர்காலத்தில்
நீதிமன்றத்தை நாட முடியாத வகையில்
உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும்.
ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள்
ஒன்றும் அரசியல் சாசன அமைப்பிற்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல.
நீதிமன்றத்தை விமர்சிப்போர் மீது
அவமதிப்பு வழக்கு பதிய
உத்தரவிடப்படும்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதி தள்ளி வைத்தும், அன்றைய தினம் ஆசிரியர் போராட்டங்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.

 

– பேனாக்காரன்