Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 12) நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களின்போது மேடையில் ஜெயலலிதா, அவைத்தலைவர் ஆகியோருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டு இருக்கும். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவருடைய முக்கிய ஆதரவாளர்களுக்கும் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.

 

பொதுக்குழு நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட், பேனர்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் புகைப்படங்கள் இருந்தன. முன்பு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே பேனர்களில் இருக்கும்.

இன்றைய பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியனம் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் நியமித்த பதவிகளும் செல்லாது. ஜெயலலிதா நியமித்த நியமனங்கள் மட்டுமே செல்லும். ஜெயலலிதா மட்டுமே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர். இனி கட்சிக்கு பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டதற்கும், வர்தா புயலின்போது அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உள்ளாட்சி மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் 97 சதவீத உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், எத்தனை உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படவில்லை.