Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரு குடும்பம்; 6 பிள்ளைகள்; 5 பேருக்கு பார்வை இல்லை; ஒளி கொடுக்குமா அரசாங்கம்?

சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை

”ஒரு ஊர்ல ஓர் அப்பா அம்மா இருந்தாங்களாம். அவங்களுக்கு 6 பிள்ளைகளாம். அதுல, அஞ்சு பிள்ளைகளுக்கு கண் பார்வை தெரியாதாம்….” எதிர்காலத்தில் இப்படி ஒரு கதை குழந்தைகளிடம் சொல்லப்படலாம். இது கதை அல்ல. நிஜம்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராச்சமங்கலம் அருகே உள்ளது புறத்தார் வட்டம். இந்த ஊரைச் சேர்ந்த தண்டபாணி – சரஸ்வதி தம்பதிக்கு கோவிந்தம்மாள் (28), காஞ்சனா (27), ஏழுமலை (26), வெங்கடேசன் (24), பவித்ரா (22), இசை தீபா (19) ஆகிய பிள்ளைகள். இவர்களில் பவித்ரா தவிர, மற்ற ஐந்து பேருக்கும் காதுகளே கண்கள்.

எந்த பாவமும் செய்திராதபோதும் இயற்கை அந்த ஒரு குடும்பத்தை அப்படி சபித்திருக்கக் கூடாது. இங்குதான் கடவுளின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. கோவிந்தம்மாள், சரஸ்வதி தம்பதி இன்றைக்கு உயிருடன் இல்லை. பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து ஆளாகிவிட்ட நிலையில், இதுவரை அவர்களைப் பற்றி எந்த ஓர் ஊடகத்திலும், அரசின் பார்வைக்கும் வராதது ஆச்சரியம்தான்.

இசை தீபா

ஒரே குடும்பத்தில் ஐந்து சகோதர, சகோதரிகள் பார்வையில்லாமல் அவதிப்படும் தகவல் அறிந்து நாம் அவர்களை நேரில் சந்தித்தோம். வேதனையான இன்னொரு செய்தி என்னவெனில், ”இங்க ஒரே குடும்பத்துல அஞ்சு பேருக்கு கண்ணு தெரியாதே. அவங்க வீடு எங்க இருக்கு?,” என்று அவர்களின் குறைகளைச் சொல்லி முகவரி விசாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். நாம் பெயர்களைக்கூறி விசாரித்தபோது, ராச்சமங்கலம் மக்களும் அந்த குறைபாட்டைச் சொல்லித்தான் முகவரி சொன்னார்கள்.

புறத்தார் வட்டத்தில் ஒற்றை அறை கொண்ட ஓர் ஒழுகும் வீடு. இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தில் வழங்கப்பட்டது. கான்கிரீட் கூரைதான். ஆனாலும், மழை வந்தால் ஒழுகும். அரசின் கட்டுமானப் பணிகள் எத்தகையது என்பதற்கு அந்த வீடே சான்று. நாம் சென்றிருந்தபோது அந்த வீட்டில் கோவிந்தம்மாள், வெங்கடேசன், இசை தீபா ஆகியோர் மட்டுமே இருந்தனர். வெங்கடேசன் பேசினார்.

”எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே கூலித்தொழிலாளிங்கதான். அப்பா கல் குவாரிக்கு வேலைக்குப் போய்ட்டு இருந்தாரு. அடுத்தடுத்து பார்வையற்ற குழந்தைகள் பொறந்ததால கோயில் கோயிலா எங்கப்பாம்மா போனாங்க. அப்பதான் என் தங்கச்சி பவித்ரா பொறந்தா. அவள் எல்லோரையும் போல நார்மல்தான். அதனால அடுத்த குழந்தையும் நல்லபடியாக பொறக்கும்னு எதிர்பார்த்திருந்தாங்கபோல. ஆனால், கடைசி தங்கச்சி இசை தீபாவும் பார்வையற்றவளாகத்தான் பொறந்தா.

பார்வையற்ற சகோதர, சகோதரிகள் இசை தீபா, கோவிந்தம்மாள், வெங்கடேசன்.

எங்கம்மாவுக்கு ஆரம்பத்துலேர்ந்தே அடி மேல அடி. உண்மைய சொல்லணும்னா மாமியார் கொடுமையால ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. அப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. சுயநினைவு இழந்துட்டார். பல இடங்கள்ல அம்மா கடன் வாங்கித்தான் மருத்துவ செலவு பண்ணுனாங்க. ஆனாலும் அப்பா 2002ல் இறந்துட்டார். அப்பா இறந்த பின்னால அம்மா இன்னும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க சார். தேங்காய் மண்டி, கட்டட வேலைனு கிடைச்ச வேலைய செய்தாங்க.

நான் அப்போ பிளஸ்2 படிச்சிட்டு இருந்தேன். 2012ம் வருஷம். அம்மாவுக்கு திடீர்னு பெராலைசிஸ் வந்து படுத்த படுக்கையாகிட்டாங்க. அக்கா (கோவிந்தம்மாள்) அப்போது எம்ஏ படிச்சிட்டு இருந்தாங்க. அவங்க படிப்பை டிஸ்கண்டினியூ பண்ணிட்டு அம்மாவை பார்த்துக்கிட்டாங்க. அம்மா, மாதாமாதம் 100 ரூபாய் சேமிப்பில் போட்டு வெச்சிருந்தாங்க. அந்தப்பணம்தான் கொஞ்சம் கைகொடுத்தது. பல சிகிச்சைக்கு பிறகும், நோய் குணமாகவில்லை. ஒரு கை, ஒரு கால் செயலிழந்து போனது.

ஆனால், நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் வந்தது. நாங்க அவங்கள அடுப்பங்கரைக்கிட்ட உட்கார வெச்சிட்டோம்னா அவங்களால முடிஞ்சத சமைச்சி வெச்சிடுவாங்க. சமையலுக்குத் தேவையான எல்லா பொருளையும் நாங்கள் வாங்கிட்டு வந்து அவங்க பக்கத்துல வெச்சிடுவோம்.

ஒழுகும் வீட்டின் உள்புறம்.

இசை தீபா பிளஸ்2ல 1009 மார்க் வாங்கியிருந்தா. அந்த மார்க் ஷீட்டை பார்த்துட்டு அம்மா ரொம்ப சந்தோஷபட்டாங்க. அன்னிக்கு எங்களுக்கு போண்டா கூட சுட்டுத் தந்தாங்க. ஆனால் அன்னிக்கு அப்படிலாம் நடக்கும்னு எங்களுக்கு தெரியாது சார். திடீர்னு அம்மாவுக்கு வாந்தி வந்தது. மயங்கி விழுந்துட்டாங்க. திருப்பத்தூர் ஜிஹெச்சுக்கு கொண்டு போனோம். அங்கிருந்து தர்மபுரி ஜிஹெச்சுக்கு கொண்டு போகச்சொன்னாங்க. ஆனால், அதற்குள் அம்மா இறந்துட்டாங்க,” என்றார் வெங்கடேசன்.

கேட்கும்போதே கண்களில் நீர் வழியத் தொடங்கிவிட்டது. கூன் குருடு செவிடு பேடு இல்லாமல் பிறத்தல் அரிது; இளமையில் வறுமையும், ஆற்றொனாக் கொடுநோயும் கொடியது என்றார் அவ்வையார். இந்த சகோதரர்களின் இளமைக் காலமும் வறுமையில் உழல்கிறது. உடலும், கண்களின்றி பொலிவிழந்திருக்கிறது.

கண்ணுடையவர் என்பவர் கற்றவரே என்பார் வள்ளுவர். அதைக் கெட்டியாகப் புரிந்து கொண்டிருக்கும் இவர்கள் படிப்பில் படுசுட்டியாகவே இருக்கின்றனர். வெங்கடேசனின் மூத்த சகோதரி கோவிந்தம்மாள் எம்ஏ, பிஎட் படித்திருக்கிறார். அவருக்கு திருமணமாகி, தர்மபுரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வசிக்கிறார். கணவரும், பார்வையற்றவர்தான்.

இரண்டாவது சகோதரி காஞ்சனா பிஏ முடித்திருக்கிறார். கணவருடன், வேலூரில் வசிக்கிறார். ஏழுமலை, இசைக்கலையில் டிப்ளமோ முடித்திருக்கிறார். வெங்கடேசன், பிஏ, பிஎட் முடித்துவிட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இசை தீபா, தற்போது சென்னையில் பிஏ படித்து வருகிறார். அனைத்து உடல் உறுப்புகளும் நன்றாக இருக்கும் பவித்ரா மட்டும் 8ம் வகுப்புக்கு மேல் படிக்காதது, ஆகப்பெரிய முரண்.

வெங்கடேசனும், ஏழுமலையும் சென்னை ரயில்களில் வேர்க்கடலை பர்பி, நீலகிரி தைலம், குழந்தைகளுக்கான பொம்மைகள் ஆகியவற்றை விற்கின்றனர். இருவருமே தபலா மற்றம் சில இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் பெற்றவர்கள். குரல்வளமும் மிக்கவர்கள். வாய்ப்பு கிடைக்கும்போது இசைக் கச்சேரிகளிலும் கலந்து கொள்கின்றனர். இவற்றின்மூலம் கிடைக்கும் மிகச்சொற்பமான வருமானம்தான் அவர்களுக்கும், தங்கையின் படிப்பிற்கும் முக்கிய ஆதாரம்.

”நீ யார்கிட்டயும் போய் கையேந்தி நிக்கக்கூடாது. யாரையும் சார்ந்து வாழக்கூடாதுனு அம்மா உயிருடன் இருக்கும்போது அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஏதோ எங்களால முடிஞ்ச வேலைகளைச் செய்கிறோம்,” என்கிறார் வெங்கடேசன்.

”என் தங்கச்சி காஞ்சனா வேலூர்லதான் இருக்கா. அவங்களும் எங்களப்போல கஷ்டப்படற குடும்பம்தான். அதனால அவளிடம் உதவி கேட்டு யாரும் போறதில்ல,” எனக்கூறும் கோவிந்தம்மாள்தான் தாயின் வெற்றிடத்தை நிரப்புகிறார்.

பெயருக்கேற்றார்போல் இனிமையான குரல் வளத்தால் நம்மை வசீகரித்தார் இசை தீபா. அவர் ஒரு சில பாடல்களை பாடிக்காட்டினார்.

”சார்…நாங்க எங்க போனாலும் ஒருத்தர் தோள்பட்டையை ஒருத்தர் பிடிச்சிக்கிட்டுதான் நடப்போம். அப்போ, வீட்டு பக்கத்துல இருக்கவங்கலாம் அதோ போகுது பாரு ரயில் பெட்டினு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க சார்.

நாங்க ஒண்ணுக்கு ரெண்டுக்கு போகணும்னாலும் வழக்கமாக போற ஒரே இடத்துல போய் உட்காருவோம். அந்த இடத்துல திடீர்னு முள்ளுச்செடியெல்லாம் வெட்டிப் போட்டுடுவாங்க. இல்லாட்டினா, கண்ணாடி பாட்டில்களை உடைச்சி போட்டுடுவாங்க. அதுவும் இல்லேனா நெருப்பு வெச்சிடுவாங்க சார். இப்படிலாம் நாங்க அவஸ்த பட்டுருக்கோம் சார்…” என பார்வை உள்ளவர்கள், பார்வையற்ற அவர்கள் மீது நிகழ்த்தும் காட்டுமிராண்டித்தனத்தை வெள்ளந்தியாக சொன்னாள் இசை தீபா.

பள்ளிக்கல்வியின்போது பிரெய்லி முறையில் படித்தாலும், கல்லூரிக்கல்வி வரும்போது அவர்கள் பாடங்களை ஒலிப்பதிவு செய்த குரல்களின் வழியே கேட்டு, படிப்பதை தொடர்கின்றனர்.

பார்வையற்றவர்களை அரசும், சமூகமும் நடத்தும் விதம் குறித்து வெங்கடேசனின் அண்ணன் ஏழுமலையிடம் கேட்டோம். அவர், பார்வையற்றோர்க்கான உரிமைகளைப் பெற்றுத்தரும் அமைப்பில் மாநில துணை செயலாளராகவும் இருக்கிறார்.

”மாற்றுத்திறனாளிகளுக்கென அரசாங்கம் பல நலத்திட்டங்களை வகுத்தாலும் அதை எளிதில் பெற்றுவிட முடியாத அளவுக்கு நிபந்தனைகளையும் விதித்துள்ளது முரணாக இருக்கிறது. அதை கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டும். இன்னும் எங்கள் குடும்பத்தில் யாரும் பார்வையற்றோருக்கான உதவித்தொகைகூட பெற முடியவில்லை.

பார்வையுள்ளவர்கள் செய்யும் சில பணிகளைத் தவிர எங்களாலும் அத்தனை வேலைகளையும் செய்ய முடியும். பார்வைத்திறனற்ற சிலர் நீதிபதி, கலெக்டர் பதவிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்களையும் சம அந்தஸ்தில் நடத்த வேண்டும். ஆனாலும் மக்களுக்கு இன்னும் பார்வையற்றவர்கள் மீதான புரிதல் இல்லை. எல்லா உறுப்புகளும் நன்றாக இருக்கக்கூடியவர்கள் கார் ஓட்ட வேண்டுமானால் காரை வாங்கி அதை ஓட்டிப்பார்த்த பிறகுதான் மகிழ்வார்கள். ஆனால், நாங்கள் கார் இல்லாமலேயே அதை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து மகிழ்கிறோம்.

பார்வை இல்லையே என்று எங்கள் மீது யாரும் பரிதாபப்பட வேண்டாம். முடிந்தால் உதவி மட்டும் செய்யுங்கள். எங்களைவிட மோசமான நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களைவிட பார்வையற்ற நாங்கள் நன்றாக இருப்பதாகவே உணர்கிறோம்,” என்கிறார் ஏழுமலை.

ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்றிருக்கும் வெங்கடேசன், கோவிந்தம்மாள், ஏழுமலை ஆகியோருக்கு தமிழக அரசு ஆசிரியர் பணி வழங்கினால், கல்விக்கண் திறக்க தயாராக இருக்கிறார்கள். அரசின் கனிவான பார்வை இவர்கள் மீதும் விழ வேண்டும்.

உதவ விரும்புவோர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ஏழுமலை: 94451 99163.
வெங்கடேசன்: 95788 76459
இசை தீபா: 95142 27746.

ஆக்கம்: இளையராஜா சுப்ரமணியம்.

உதவி: தோழர்கள் ஓசூர் ரமேஷ், முருகேசன்.