”அரசியலுக்கு வருவது உறுதி” என்றதன் மூலம் இப்போதைக்கு தமிழக அரசியல் களத்தில் பரபர ஆக்ஷன் திரில்லர் நாயகனாக உருவெடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
”ஆன்மிகம் தெரியும்; அரசியலும் தெரியும்; அதென்ன ஆன்மிக அரசியல்?. இரண்டும் எதிரெதிர் திசையில் பயணிக்கக் கூடியதாச்சே!” என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது ரஜினியின் புதிய சூத்திரம். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, அவரிடம் கொள்கைகள் என்ன என்று கேட்டதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். அதுதான், அண்ணாயிஸம்.
அதற்கே, கொந்தளிக்காதவர்கள் இப்போது ஆன்மிக அரசியலுக்காக தொண்டை வறல கூச்சல் போடுவானேன்?. பிறப்பால் ரஜினிகாந்த் தமிழர் அல்லர் என்று உரத்துச் சொல்பவர்களில் நாம் தமிழர் சீமானும், பாமகவின் அன்புமணி ராமதாஸூம் முக்கியமானவர்கள்.
இன அரசியலை மையமாக வைத்து களமாடி வரும் இருவருமே, ரஜினி வருகையால் அரசியலில் தங்கள் சுவடுகளே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாகக்கூட அவர்கள் கூச்சல் போடலாம் என்கிறார்கள் சிலர். இருப்பினும், அவர்களின் கூற்றுக்கு ஆதரவு இல்லாமலும் இல்லை. குறிப்பாக, சீமானின் கருத்து பலராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
காங்கிரஸ் ஆண்டது போதும் என 1967ல் அதற்கு மாற்றாக உருவெடுத்தது திமுக. அதை எதிர்த்து உருவானது அதிமுக. அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்து திராவிட கட்சிகள்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றன. விளைந்த மாற்றங்கள் என்னென்ன? எவ்வளவோ ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அக்கட்சிகள், வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.
ஆனாலும், நாலு கால் பாய்ச்சலில் இருந்திருக்க வேண்டிய தமிழகத்தின் வளர்ச்சி, அடிப்பட்ட புலிபோல தவ்விக் கொண்டிருக்கிறது. இங்குதான் நாம் மாற்றத்தையும், மாற்று அரசியலையும் முன்னெடுக்க வேண்டியதிருக்கிறது.
மாற்று அரசியல் குறித்து பேசும் சீமான், தனித்தமிழ்நாடு, தமிழகத்திற்கென தனி ராணுவம், உழவை அரசு வேலையாக்குவது போன்ற கொள்கைகளை முன்வைக்கிறார். இதில் எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்கும் என்பதை அக்கட்சி பெற்று வரும் வாக்குகளில் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சரி. பாமக மாற்று அரசியலை முன்வைக்கிறதா?. மத்திய அரசில் எல்லாம் பங்கெடுத்து அனுபவம் பெற்ற அக்கட்சி இன்னும் சாதி அடையாளத்தில் இருந்தே மீள முடியாமல் சிக்கித்தவிக்கிறது. வன்னியர் கட்சியாகத்தானே இப்போதும் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மக்கள் ஆதரவு பெற்ற ஆளுமைகள் இல்லாததால் அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் கமல், ரஜினி முதல் விஷால் வரை பலருக்கும் அரசியல் ஆசை துளிர் விட்டிருக்கிறது. நடிகர்களின் இன்னும் சிலரும் வரக்கூடும்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசும்போதெல்லாம் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கும் வரை அவர் அரசியலுக்கு வர மாட்டார் என அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அதற்கான காலம் கனிந்து வர ரஜினியும் 68 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது இயல்பாக தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்டிருக்கிறார். வெற்றியோ, தோல்வியோ உடல்நலம் கைக்கொடுக்கும்பட்சத்தில் ரஜினியாலும் அரசியல் கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும். என்.டி.ராமராவ்கூட கட்சி தொடங்கும்போது 60 வயதை நெருங்கிவிட்டார்.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என தமிழக மக்கள் இருக்கின்ற நிலையில், அவர்களுக்கும் அரசியலில் புதிதாக ஒரு முகம் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக கோடம்பாக்கத்தில் இருந்தே தங்களுக்கான அரசியல் ஆளுமையை தமிழர்கள் தேடுகின்றனர்.
அரசியலில் எல்லை துறைகளைச் சேர்ந்தவர்களும் இருக்கும்போது நடிகர்களிடம் மட்டும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் நம்பிக்கை அளிக்கும் புதிய முகமாக, மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல்ஹாஸன், சீமான், அன்புமணி, டிடிவி தினகரன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் அரியணையை அலங்கரிக் போகிறார். அவ்வளவுதானே. ரஜினி எதிர்ப்பு அரசியல் மூலம் சீமான் தன் இருப்பை வேண்டுமானால் பதிவு செய்யலாமே தவிர, இயக்கத்தை வளர்த்திட முடியுமா என்பது கேள்விக்குறிதான். இது, அவர் மனநிலையில் உள்ள ஏனையோருக்கும் பொருந்தும்.
நேற்றைய அறிவிப்பின் மூலம் தமிழக அரசியல் களத்தில் தன்னுடைய முடிவுக்கு என்ன மாதிரியான ஆதரவு, எதிர்ப்பு இருக்கிறது என்பதை அறியவே ரஜினிகாந்த், கட்சிப்பெயரை அறிவிக்காமல் அரசியல் வருகையை மட்டும் உறுதிப்படுத்தினார் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.
கிட்டத்தட்ட அவர் கட்சியின் பெயரையும் சில மாதங்களுக்கு முன்பே இறுதி செய்துவிட்டதாக தெரிகிறது. அதற்காகவே அவர் சில காலம் அவகாசம் எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.
ரஜினியை பின்னின்று இயக்குவதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்களும் நிலவுகிறது. நோட்டாவிடம் தோற்றுப்போகும் அளவுக்குதான் பாஜகவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருப்பதை யாவரும் அறிவர். அதனால்தான், ரஜினிகாந்த் முதுகில் சவாரி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகி க்கின்றனர்.
அந்த சந்தேகம் உண்மையெனில், ரஜினி கனவு நிராசையாகி விடவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், வரும் தைத்திருநாளான பொங்கலன்று (ஜனவரி 14, 2018) ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கட்சிப்பெயர், கொடி, கொள்கைகள் குறித்து இப்போதே முடிவெடுத்தால்தான் மக்களவை தேர்தலுக்குள் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்றும், அதை நோக்கியே ரஜினியின் திட்டமிடலும் இருப்பதாக ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ரசிகர் மன்ற பதிவு, அரசியல் மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள் பதிவு செய்வதற்கென புதிதாக இணையதள பக்கத்தையும் ரஜினி இன்று தொடங்கி உள்ளார்.
– அகராதிக்காரன்.