Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

உலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

”நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,” என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த்.

ஜோதி ஆனந்த்

சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவரான ஜோதி ஆனந்த், இருதய நோய்களுக்கான காரணம், அறிகுறிகள் குறித்து விரிவாகவே பேசினார்.

இருதயம்தான், உடல் பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பணிகளை செய்கிறது. வலது ஆரிக்கிள், வென்டிரிக்கிள் வழியாக ரத்தம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அங்கிருந்து ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தத்தை இடது ஆரிக்கிள், வென்டிரிக்கிள் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை இருதயம் செய்கிறது.

இப்பணிகளின்போது ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏதேனும் ஏற்படும்போது இருதயம் இயங்குவது தடைப்படுகிறது. இதைத்தான் மாரடைப்பு என்கிறோம். இயற்கையிலேயே பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அரிதானது. மாரடைப்பால் ஆண்கள் இறப்பு விகிதம் அதிகம் என்பதால், மாரடைப்பை ‘விதவைகளை உருவாக்கும் நோய்’ என்றும் சொல்கிறோம்.

கடந்த 30 ஆண்டுகளில், நகர்ப்புறங்களில் 1.1% ஆக இருந்த மாரடைப்பு, இப்போது 7.5% ஆக உயர்ந்து இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் 2.1%&ல் இருந்து 3.7% ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரு தனியார் அமைப்பு, 46000 இருதய நோயாளிகளிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில், 78% பேர் 30 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது.

இருதய நோய்கள் வருவதற்கான ஐந்து முக்கிய காரணங்கள்:

(1) மன அழுத்தம்: பணிபுரியும் இடங்களில் வேலைச்சுமை, தொழில் போட்டி போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

(2) தூக்கமின்மை: ஒரு சராசரி மனிதன் தினமும் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நன்றாக தூங்குவது அவசியம். தூக்க நேரம் என்பது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இருக்கலாம். ஓரிரு மணி நேரம் கூடுதலாக தூங்கினாலும் தவறு இல்லை. ஆனால், இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

தூங்கும்போதுதான் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ‘மெலட்டோனின்’ ஹார்மோன் சுரக்கிறது. சரியாக தூங்காதபோது இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து, மன அழுத்தம் கூடுகிறது. இளைஞர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ் புக் என ‘சாட்டிங்’ செய்துகொண்டு இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

(3) புகை-மதுப்பழக்கம்: சிகரெட், புகையிலையில் உள்ள நிகோடின் உடலுக்கு கெடுதியானது. புகைப்பதால் உண்டாகும் புகை, நுரையீரலுக்குள் செல்வதுடன், ரத்தக்குழாய்களுக்கும் செல்கிறது. தொடர்ந்து புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முன்பெல்லாம் ஏதாவது விழா என்றால்தான் மது குடிப்பார்கள். இன்றைக்கு இளைஞர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து விட்டாலே அங்கு மதுவும் இடம் பெற்று விடுகிறது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு சாதாரண நிலையில் உள்ளவர்களைக் காட்டிலும் ரத்த அழுத்தம் சற்று கூடுதலாக இருக்கும்.

(4) உணவுப்பழக்கம்: பீட்ஸா, பர்கர், ஃபிரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை உண்பதும், அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவுப்பொருட்களை அடிக்கடி எடுத்துக் கொள்வதும் ஆபத்தை உண்டாக்கும். ஒருமுறை கொதிக்க வைத்து பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதாலும் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்கிறது. கலப்பட ஆயிலை பயன்படுத்தவே கூடாது.

ரீஃபைன்டு ஆயில் என்பதில் எவ்விதச் சத்துக்களும் இல்லை. கொழுப்பு படிமங்கள் இருதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து, அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை உண்டாக்கும். நாமே, செக்கில் எண்ணெய்யை ஆட்டி, பயன்படுத்துவது நல்லது. அதேபோல், இரவில் அதிகளவு உண்பதை தவிர்ப்பதுடன், தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக உணவை முடித்து விடுவது நலம்.

(5) உடற்பயிற்சியின்மை: பணிச்சுமை என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனாலும், அரை மணி நேரத்துக்கு ஒருமுறையாவது சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.

இரவில் தூங்கும்போது அறை இருட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கண்கள் இருட்டை உணர வேண்டும். அப்போதுதான் சீக்கிரம் தூக்கம் வரும். மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களான கார்டிசால், அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்றவை நன்கு சுரக்கும்.

தூக்கமின்மையால் மன அழுத்தம் மட்டுமின்றி, தோல் வியாதி, ரத்த அழுத்தம், இருதய பாதிப்புகளும் ஏற்படலாம்.

அறிகுறிகள்: நெஞ்சு பகுதியில் அழுத்தம் அதிகரித்தல், அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம் அடைதல், இடது தோள்பட்டை, கைகளில் வலி ஏற்படுதல், கீழ்த்தாடை மற்றும் பற்களிலும்கூட வலி ஏற்படுதல், நெஞ்சுக்கரிப்பு போன்ற உணர்வு ஏற்படுதல் ஆகியவை மாரடைப்பின் பொதுவான அறிகுறிகள்.

இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி முறையான பரிசோதனை, சிகிச்சைகள் பெறுவது நல்லது.

இவ்வாறு மருத்துவர் ஜோதி ஆனந்த் கூறினார்.