Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

 

முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.

 

தற்கொலை முயற்சி
மேனகா, ரேவதி, கலைமகள்.

சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

 

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த நிலையில், கடந்த 28.9.2018ம் தேதி மேனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். கலைமகள் அபாய கட்டத்தில் இருந்தார். ரேவதி மட்டும் உயிர் தப்பினார்.

மேனகா

ஒரே குடும்பத்தில் மூன்று இளம்பெண்கள் தற்கொலைக்கு முயன்றதும், அதில் ஒருவர் இறந்து போனதும் மிகச்சாதாரண நிகழ்வாகவே ஊடகங்களும் கடந்துபோய் விட்டன. ஆனால் ரேவதி இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

 

அந்தப் புகார் குறித்து ரேவதி நம்மிடம் பேசினார்.

 

வின்ஸ்டார் சிவகுமார்

 

”சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த வின்ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், ஆறு ஆண்டுகள் வேலை செய்து வந்தேன். அப்போது நிறுவன அதிபர் சிவகுமார்,

வின்ஸ்டார் சிவகுமார்

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரே ஆண்டில் முதலீட்டு தொகை இரு மடங்காக கிடைக்கும் என்ற திட்டத்தை அறிவித்தார். அதனால் நானும் என் மூத்த அக்கா காந்திமதி மற்றும் உறவினர்கள் சிலரிடம் 15 லட்சம் ரூபாய் பெற்று, வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.

 

இந்த நிலையில்தான், என் அக்கா மேனகாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. கல்யாணச் செலவுகளுக்காக வின்ஸ்டார் நிறுவனத்தில் செலுத்திய முதலீட்டை திரும்பக் கொடுக்குமாறு சிவகுமாரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘பணத்தை தர முடியாது. என்ன வேணும்னாலும் செய்து கொள். யாரிடம் வேணும்னாலும் புகார் கொடு. ஒரு பைசாகூட தர முடியாது,’ என மறுத்துவிட்டார்.

 

செத்துப்போங்க… எனக்கென்ன…?
ரேவதி

‘சார் பணம் கிடைக்கலேனா குடும்ப மானம் போய்விடும். அப்புறம் எங்களுக்கு சாவதைத்தவிர வேறு வழியில்லை,’ என்று சொன்னேன். அதைக் கேட்டபிறகும் அவர், ‘செத்துப்போங்க… எனக்கென்ன…?’ என்று அலட்சியமாக கூறினார்.

 

பணம் இல்லாததால் கல்யாணமும் நின்று போகும் நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான், திருமணத்திற்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் நாங்கள் மூன்று பேரும் தற்கொலைக்கு முயன்றோம். அக்கா மேனகா மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாள். தங்கை ஆபத்தான நிலையில் இருக்கிறாள்,” என்றார் ரேவதி.

 

போலீசார் அலட்சியம்

 

ரேவதியின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட அம்மாபேட்டை போலீசார், எப்ஐஆரில் மேற்கண்ட விவரங்கள் ஏதும் பதிவு செய்யாமல், தந்தை கண்டித்ததால், மூன்று மகள்களும் தற்கொலைக்கு முயன்றதாக மேலோட்டமாக பதிவு செய்திருந்தனர்.

 

பல நூறு கோடி சுருட்டல்

 

ரேவதி அளித்த தகவல்களை நூல் பிடித்து, வின்ஸ்டார் நிறுவனம் பற்றி விசாரித்ததில் பல நூறு கோடி ரூபாயை சிவகுமார் சுருட்டியிருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

 

பாலியல் புகார்

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை பூர்வீகமாக கொண்ட சிவகுமார், சேலத்தில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்துள்ளார். தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத்தேர்ந்த சிவகுமார், வின்ஸ்டார் என்ற பெயரில் சேலத்தில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி, மிகக்குறுகிய காலத்திலேயே கொடி கட்டிப்பறந்தார். தன்னிடம் வேலை செய்து வந்த பெண்களை பாலியல் ரீதியாக சீரழித்த புகாரிலும் அடிபட்டவர் என சேலத்தில் ஏகத்துக்கும் பிரபலமானவர்தான் இந்த சிவகுமார்.

 

வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சந்திரசேகரன் பல பகீர் தகவல்களைச் சொன்னார்.

 

ஆசைவலை விரித்தார்
சந்திரசேகரன்

”நிலத்தின் மீது முதலீடு செய்யப்படும் தொகைக்கு நிலமாகவோ அல்லது ஒரே ஆண்டில் முதலீட்டுத் தொகையை இரண்டு மடங்காக பெற்றுக்கொள்ளலாம் என்று வின்ஸ்டார் சிவகுமார் கவர்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தார். உள்ளூர் டிவி சேனல்களிலும், அனைத்து நாளிதழ்களிலும் இதைப்பற்றி பக்கம் பக்கமாக தினமும் விளம்பரங்கள் வந்தன. இதை நம்பி, ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர்.

 

முதலீட்டைப் பெற்றுத்தரும் ஊழியர்களுக்கு அந்தத் தொகையில் 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கொடுத்தார். அதனால் தினமும் 25 லட்சத்திற்கு மேல் கலெக்ஷன் ஆகும். நாலைந்து ஆண்டுகளில் 400 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை திரட்டினார். நானும்கூட இந்த நிறுவனத்தில் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.

 

பானம் நெல்லிச்சாறு

 

ஒருகட்டத்தில், பானம் என்ற பெயரில் நெல்லிச்சாறு விற்பனை, ஜவுளிக்கடை, அழகு நிலையம், ஸ்வீட் கடை என வேறு சில தொழில்களையும் தொடங்கி மக்களை நம்ப வைத்தார். யாரிடம் நிலத்தை வாங்கினாலும், பணத்தை கத்தை கத்தையாக நிலத்தின் உரிமையாளர் முன்பு வைத்துக்கொண்டுதான் பேரம் பேசுவார். அதனால், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கி விடுவார் அல்லது ‘பவர்’ எழுதிக்கொள்வார்.

 

பிறகு அவர் வின்ஸ்டார் என்ற பெயரில் ஒரு உள்ளூர் டிவி சேனலை ஆரம்பித்தார். ‘எனக்கு பண ஆசையே கிடையாது. நான் சாப்பிடறது ரெண்டு இட்லி… இத்துனூன்டு ரசம் சோறுதான்,’ என அளந்து விடுவார். நேரலையில் பேசும்போதே அவர் ஆண்களுடன் அவ்வளவாக பேச மாட்டார்.

 

ஆண்கள் பேசினாலும் வீட்டிலுள்ள பெண்களிடம் போனை கொடுக்கச் சொல்லி அவர்களிடம் பணத்தின் தேவையைப் பற்றி ஆசை வலை விரிப்பார். இதையெல்லாம் நம்பித்தான் மக்களும் வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடுகளை குவித்தனர்.

 

பஸ் அதிபர் புகார்

 

பானம் நெல்லிச்சாறு விற்பனையில் 1.75 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முதலில் ஒருவர் சிவகுமார் மீது புகார் கொடுத்தார். அந்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்தார். பிறகு, சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பஸ் அதிபர் ஒருவர் 49 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுக்க, அந்த புகாரிலும் சிவகுமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பலரும் அவர் மீது புகார் கொடுத்தனர். இப்போது ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.

 

பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

 

கடந்த ஜனவரி மாத நிலவரப்படி சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் மட்டும் 265 பேர் சிவகுமார் மீது 10.65 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்து இருந்தனர். பின்னர் இந்த வழக்கு சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

 

போலீசார் அலைக்கழிப்பு

 

பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் கொடுக்கச் செல்பவர்களை போலீசார், குறிப்பிட்ட ஒரு இடத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில்தான் புகார் மனுவை டைப் செய்து கொண்டு வர வேண்டும் என்றும், பேப்பர் வாங்கிட்டு வா… பேனா வாங்கிட்டு வா… என்று சினிமாவில் வருவதுபோல அலைக்கழிக்கின்றனர். மறைமுகமாக சிவகுமாருக்கு சப்போர்ட் செய்கின்றனர். முதலீடு செய்த தொகையில் பத்தில் ஒரு பங்கைத்தான் எப்ஐஆரில் பதிவு செய்கின்றனர்.

 

ஆளுங்கட்சியினரும் துணை

 

சிவகுமார் ஐந்து விரல்களிலும் பெரிய பெரிய மோதிரம் அணிந்திருப்பார். ஒரு விரலில் ஜெயலலிதா உருவம் பொறித்த மோதிரம் அணிந்திருப்பார். அவர் அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றாலும், அக்கட்சியின் ஆதரவாளராக காட்டிக்கொண்டார்.

 

ஜெயலலிதா இறந்தபோதும்கூட, ஊழியர்களுடன் இரங்கல் ஊர்வலம் நடத்தினார். அதனால், ஆளுங்கட்சியினரும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க துணையாக இருந்து வருகின்றனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

போலீசாரின் நடவடிக்கைகளிலும் சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வின்ஸ்டார் நிறுவன மோசடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

 

அதன்பிறகுதான், பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மளமளவென வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் கொடுக்க முன்வந்தனர். இதுவரை 1500க்கும் மேற்பட்டவர்கள் 72 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பதாக புகார் அளித்திருக்கின்றனர். தொடர்ந்து போராடி வருகிறோம்,” என்கிறார் சந்திரசேகரன்.

 

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மோகன் கூறுகையில், ”வின்ஸ்டார் சிவகுமார் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து பகிரங்கமாகவே மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி இருக்கிறார். அவரிடம் முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெற முடியாததால் ஏழை பெண்ணின் திருமணம் நின்று போயிருக்கிறது. அந்தப்பெண்ணும் தற்கொலை செய்து கொண்டாள்.

 

டிஎஸ்பி ராமுவை இடமாற்றம் செய்

 

மாவட்ட ஆட்சியராக ஒரு பெண் பொறுப்பு வகிக்கும் மாவட்டத்திலேயே, ஒரே குடும்பத்தில் மூன்று இளம்பெண்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் மேம்போக்காக செயல்படுகின்றனர்.

 

மோசடி மன்னன் வின்ஸ்டார் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும். மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமுவை இடமாற்றம் செய்து, நேர்மையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்,” என்றார்.

 

இதுபற்றி பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமுவிடமே கேட்டோம்.

 

1500 பேரிடம் 55 கோடி ரூபாய்
டிஎஸ்பி ராமு

”வின்ஸ்டார் சிவகுமார் 400 கோடி, 500 கோடி ஏமாற்றிவிட்டார் என பாதிக்கப்பட்டவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், இதுவரை எங்களிடம் சுமார் 1500 பேரிடம் இருந்து 55 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதற்கான புகார்கள் மட்டுமே வந்துள்ளன.

 

இதுபோன்ற வழக்குகள் கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கும். அதை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளாமல் போலீசார் மீது குற்றம் சொன்னால் எப்படி? சிவகுமாருக்குச் சொந்தமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 28 இடங்களில் வீட்டு மனைகள், நிலங்கள் இருக்கின்றன.

 

சொத்துக்கள் முடக்கம்

 

அவற்றை எல்லாம் இப்போது முடக்கி வைத்திருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நான்கு மாவட்ட டி.ஆர்.ஓ.க்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம். தவிர, ஏற்காட்டில் உள்ள ஒரு சொத்தையும்கூட முடக்கியிருக்கிறோம்.

 

தனி நீதிபதி தலைமையில் கமிஷன்

 

இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் கோரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முடக்கப்பட்ட சொத்துகளை விற்று, என்ன தொகை கிடைக்கிறதோ அந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரிசமமாக பிரித்து வழங்கப்படும். எல்லாம் சட்டப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது,” என்றார் டிஎஸ்பி ராமு.

 

கலைமகள் உயிரிழந்தார்

 

நாம் இந்த புகார் குறித்து விசாரித்து முடித்திருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதில் அபாய கட்டத்தில் இருந்த கலைமகள் என்ற இளம்பெண்ணும் சிகிச்சை பலனின்றி கடந்த 15.10.2018ம் தேதியன்று உயிரிழந்தார். மறுநாள் (அக். 16) அவருடைய உடல், சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 

தற்கொலைக்கு தூண்டியதாக…

 

இதன்பிறகே, முன்பு கலைமகளின் சகோதரி ரேவதி அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வெறுமனே தற்கொலை வழக்காக பதிவு செய்திருந்த நிலையில், அதை கலைமகள் இறப்புக்குப் பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக வின்ஸ்டார் சிவகுமார் மீது இ.த.ச. பிரிவு 306ன் கீழ் வழக்கை மாற்றி பதிவு செய்தனர்.

 

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, வின்ஸ்டார் சிவகுமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், இன்னும் அவரை போலீசார் கைது செய்யவில்லை.

 

//18 கோடி ரூபாய் செல்லாத நோட்டு!//

 

இந்திய அரசு கடந்த 8.11.2016ம் தேதி இரவு 8 மணிமுதல், அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பிறகு, பழைய நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ள டிசம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதிலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாற்றுவது எனில், வங்கியின் மூலம்தான் மாற்ற முடியும் என்ற கட்டுப்பாடுகளையும் விதித்தது.

 

ஆனால், சிவகுமார் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் முதலீடு செய்யலாம் என்று ஆசைவலை விரித்ததில் பலரும் மயங்கினர். பெரிய அளவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் அந்தத் தொகையை தாராளமாக வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

 

அந்த வகையில் மட்டுமே 18 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை திரட்டி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தத் தொகையை சிவகுமார் எப்படி புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்போது அதையும் துருவ ஆரம்பித்திருக்கிறது போலீஸ்.

 

– பேனாக்காரன்.