வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் விலை நடப்பு நவம்பர் மாதத்திற்கு ரூ.979 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 62.50 ரூபாய் அதிகமாகும்.
ரூ.979 ஆக நிர்ணயம்
காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை, உற்பத்தி மற்றும் உள்ளூரில் காஸ் சிலிண்டர்களுக்கான தேவை, ஆலைகளின் உற்பத்தித்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
அதன்படி நடப்பு 2018, நவம்பர் மாதத்திற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ரூ.979 ஆக நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 62.50 அதிகமாகும்.
ரூ.151 உயர்ந்துள்ளது
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையைப் பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.828 ஆகவும், செப்டம்பர் மாதத்தில் ரூ.858.50 ஆகவும், அக்டோபரில் ரூ.916.50 ஆகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது நடப்பு மாதத்தில் இவ்வகை சிலிண்டர் விலை ரூ.151 உயர்ந்துள்ளது.
வீடுகளுக்கு காஸ் சிலிண்டர் கொண்டு வந்து போடும் ஏஜன்சி ஊழியருக்கு வழங்கப்படும் கட்டாய அன்பளிப்புத் தொகையையும் கணக்கிடும்போது நடப்பு மாதத்தில் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடக்கூடும்.
குடும்பத்தலைவிகள்
”காஸ் சிலிண்டர் மானியம் பெறுவோருக்கு அந்தத் தொகை, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும். என்றாலும், சிலிண்டர் வாங்கும்போது முழுத்தொகையையும் சேர்த்தே கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் சிலிண்டர் விலை பெரும் சுமையாக தெரிகிறது,” என்கிறார்கள் சேலம் நகர குடும்பத்தலைவிகள் சிலர்.
இது இப்படி என்றால், வணிக நோக்கில் கடைகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டரின் விலையும் நடப்பு மாதத்தில் ரூ. 96.50 அதிகரித்து, ரூ.1666.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதத்தில் இதன் விலை ரூ.1570 ஆகவும், செப்டம்பரில் ரூ.1483 ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1436 ஆகவும் இருந்தது.
தின்பண்டங்களின் விலை உயரும்
வர்த்தக காஸ் சிலிண்டரின் தொடர் விலையேற்றத்தால் தீபாவளி பண்டிகைக்காலம் மட்டுமின்றி மற்ற எல்லா காலங்களிலும் கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலைகளும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.