பருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக சேலம் – சென்னை விமான சேவை நேரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், குறுகிய காலத்திலேயே விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
மீண்டும் விமான சேவை
இதையடுத்து, உடான் திட்டத்தின் கீழ், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நடப்பு ஆண்டில் மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது.
அதன்படி, ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விமானம் மட்டும் இப்போதைக்கு இயக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் ட்ரூஜெட் விமானம், சேலத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்து சேரும். இங்கிருந்து காலை 11 மணிக்கு கிளம்பி சென்னைக்கு 11.50 மணிக்கு சென்றடையும்.
விமான சேவையில் திடீர் மாற்றம்
இந்நிலையில், தற்போது பருவமழை மற்றும் பனிக்காலம் என்பதால், விமான சேவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதையடுத்து, இனி சென்னையில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 11.10 மணிக்கு வந்து சேரும். பிறகு, சேலத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 12.30 மணிக்கு சென்றடையும். இந்த நேர மாற்றம் அக்டோபர் 28ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இவ்வாறு காமலாபுரம் விமான நிலைய மேலாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.